திங்கள், 2 ஜனவரி, 2017

ஆங்கிலப் புத்தாண்டு தமிழனுக்கும் சொந்தமானதே!
ஆங்கில பூமி, ஆங்கில சூரியன் என்று சொல்வது
எவ்வளவு அபத்தமோ அவ்வளவு அபத்தம்
ஆங்கிலப் புத்தாண்டு என்று சொல்வதும்!
--------------------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
--------------------------------------------------------------------------------------------
ஆங்கிலப் புத்தாண்டு என்பது ஆங்கிலேயனுக்கு
மட்டும் சொந்தமானது என்றும் தமிழனுக்கும்
அதற்கும் தொடர்பில்லை என்றும்  கருதுவது
உண்மையில் முழுமூடத்தனம் ஆகும்.

பூமியும் சூரியனும் ஆங்கிலேயனுக்கு மட்டுமா சொந்தம்?
ஆங்கிலேயன் கட்டளைப்படியா பூமி சுற்றுகிறது?
இல்லையே. பூமி தமிழனுக்கும் சொந்தம். பூமியின்
சுழற்சியால் ஏற்படும் காலம், நேரம், ஆண்டு ஆகிய
எல்லாமும் தமிழனுக்கும் சொந்தம். அதாவது பூமியும்
சூரியனும் உலக மக்கள் அனைவருக்கும்
பொதுவானவை. அனைவருக்கும் உரிமை உள்ளவை.

ஆங்கிலப் புத்தாண்டு என்று பெருவழக்காகச்
சொல்வது கிறிஸ்துவ சகாப்தம் (CHRISTIAN ERA)
என்னும் ஆண்டுக் கணக்கீட்டு முறையை. இந்த
முறை தற்போது கைவிடப்பட்டு விட்டது  என்பதை
முதலில் அறிந்து கொள்ளுங்கள்.

கிறிஸ்து சகாப்தம் என்பதற்குப் பதிலாக,
பொது  சகாப்தம் (COMMON ERA)  என்ற ஆண்டுக்
கணக்கீட்டு முறை உலகம் முழுவதும்
செயல்பாட்டுக்கு வந்து விட்டது. மதச் சார்பற்றதும்
அனைவருக்கும் பொதுவானதுமான பொது சகாப்தம்
என்ற கணக்கீட்டு முறையை அறிவியல் அறிஞர்கள்
ஏற்படுத்தி, அதை மொத்த உலகமும் ஏற்றுக்
கொண்டு விட்டது.

இன்றைய புத்தாண்டான 2017 என்பது கி.பி. 2017 அல்ல.
அது பொ. 2017 ஆகும். அதாவது பொது சகாப்தம் 2017
ஆகும். மேலும் அறிந்திட எமது முந்தைய
கட்டுரைகளைப் படிக்கவும். இது தமிழனுக்கும்
சொந்தம். தமிழனுக்கு இதில் உள்ள உரிமையை
மறுப்பதற்கு உலகில் எவரும் இல்லை.

2016ஆம் ஆண்டை அறிவியல் உலகம் ஒரு வினாடி
நீட்டித்தது (one second leap). இந்த வானியல் அளவீடுகளின்
துல்லியம் எப்படி நிகழ்ந்தது? இதில் இந்தியாவுக்குப்
பங்கில்லையா? தமிழனுக்குப் பங்கில்லையா?

சந்திரயான், மங்கள்யான் ஆகிய விண்கலன்களை
ஏவியது யார்? இந்தியா தானே! டாக்டர் அப்துல் கலாம்,
மயில்சாமி அண்ணாத்துரை ஆகிய இரண்டு பச்சைத்
தமிழர்களுக்கும் அதில் பங்கில்லையா?

எனவே பொது  சகாப்தப்படியான ஆண்டுக்
கணக்கீடும் அதன் அடிப்படையில் இன்று
பிறந்துள்ள 2017 என்னும் புத்தாண்டும் உலக
மக்கள் அனைவருக்கும் பொதுவானவை.
இதில் தமிழனுக்கும் சமபங்கு உண்டு.

பிறப்பு இறப்புச் சான்றிதழ்களில், வேலை நியமன
உத்தரவுகளில், வங்கியின் பணப் பரிமாற்றங்களில்,
நாளிதழ்கள் ஊடகங்களின் செய்திகளில், சொத்து
கொடுக்கல் வாங்கல் பத்திரப் பதிவுகளில்,
இவ்வாறு வாழ்வியலின் அனைத்துத் துறைகளிலும்
பொது சகாப்தப்படியான ஆண்டும் தேதியும் நேரமும்
தானே கடைப்பிடிக்கப் படுகின்றன!

இதிலிருந்து தமிழன் ஏன் அந்நியமாக வேண்டும்?
அந்நியமாக இயலுமா?

அப்படியானால் தமிழர்க்கு என்று ஏற்கனவே இருக்கிற
இரண்டு புத்தாண்டுகளை, சித்திரை முதல் நாளில்
ஒன்றும்  தைத்திங்கள் முதல் நாளில் ஒன்றுமாக
இருக்கும் இரண்டு புத்தாண்டுகளைஎன்ன செய்வது?
தூர எறிந்து விட வேண்டுமா?

இரண்டு புத்தாண்டுகளும் தமிழரின் பண்பாட்டுப்
புத்தாண்டுகள். அவை நமது மரபை உணர்த்துவன.
அவை நம்முடைய வரலாற்றின் தடங்கள். அவை
நம் பண்பாட்டுத் துறையில் தொடர்ந்து நின்று
நிலவுவன. அவை தொடர்ந்து ஒவ்வொரு தமிழராலும்
பண்பாட்டுத் துறையில் போற்றப்பட வேண்டியவை.

நமது எண் முறை (number system) பத்தை அடியாகக்
கொண்டது. இது தசம முறை (decimal system)
எனப்படுகிறது. இதை உலகிற்கு கொடையாக
அளித்தது யார்? நம் இந்தியாதான்.

அதே நேரத்தில் கணினித் துறையில் ஹெக்சா
டெசிமல்  எனப்படும் 16ஐ அடியாகக் கொண்ட
எண் முறையும், ஆக்டல் எனப்படும் 8ஐ அடியாகக்
கொண்ட எண் முறையும் பயன்படுகின்றன.
அதைப்போலவே, உற்பத்தித் துறையில்
பொது சகாப்தப்படியான ஆண்டுக் கணக்கும்
பண்பாட்டுத் துறையில் சித்திரை தைப்
புத்தாண்டுகளும் பயன்படட்டும். அது
இயற்கையானதுதானே!

சித்திரைப் புத்தாண்டு ஒரு அறிவியல் தர்க்கத்தை
அடிப்படையாகக் கொண்டு தமிழனால் கடைப்
பிடிக்கப்பட்ட ஒன்று. காலப்போக்கில் அதில்
திருத்தங்கள் தேவைப்பட்டபோது, தமிழறிஞர்கள்
தைப்புத்தாண்டைப் பரிந்துரைத்தனர்.
தைப்புத்தாண்டிலும் ஓர் அறிவியல் தர்க்கம் உண்டு.
இன்றைய நடப்புக்குப் பொருந்துவது அது. எனவே
எது சரி என்பதில் வீண் சர்ச்சை தேவையில்லை.
இரண்டுமே நமது பண்பாட்டுப் புத்தாண்டுகளாய்
நீடிக்கட்டும்.

ஆக, தமிழனுக்குரிய புத்தாண்டுகள் மூன்று.
1) பொது சகாப்தப்படியான ஆண்டு.(இதை ஆங்கிலப்
புத்தாண்டு என்று இனிமேலும் அழைக்க வேண்டாம்.
இது அறிவியல் புத்தாண்டு ஆகும்).

2) சித்திரைப் புத்தாண்டு
3) தைப்புத்தாண்டு.

முதலாவது உற்பத்தித் துறையிலும், பின்னிரண்டும்
பண்பாட்டுத் துறையிலும் போற்றப்பட வேண்டும்.
-----------------------------------------------------------------------------------------------------
   
   


             

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக