ஞாயிறு, 1 ஜனவரி, 2017

2016ஆம் ஆண்டின் இறுதியில் ஒரு வினாடி
சேர்க்கப் பட்டது ஏன்?
------------------------------------------------------------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன்
நியூட்டன் அறிவியல் மன்றம்
------------------------------------------------------------------------------
உலகம் முழுவதும் சொல்லி வைத்தாற்போல்,
ஒரே நேரத்தில் புத்தாண்டு பிறப்பதில்லை.
உலகிலேயே முதன் முதலாக, நியூசிலாந்து
புத்தாண்டாம் 2017ஐச் சந்தித்து விட்டது. அங்கு
இந்திய நேரப்படி, 31.12.2016 மாலை 4.30 மணிக்கே
புத்தாண்டு உதயமாகி விட்டது. நியூசிலாந்தின்
நேரம்  இந்தியாவை விட ஏழரை மணி நேரம் முன்னதாக
உள்ளது. நியூசிலாந்து எந்தக் கண்டத்தில் உள்ளது?
ஏழு கண்டங்களிலும் அடங்கவில்லை நியூசிலாந்து.
ஆஸ்திரேலேசியா (Australisia) என்ற கண்டத்தில்
உள்ளது நியூசிலாந்து.

நியூசிலாந்துக்கு அடுத்து ஆஸ்திரேலியாவில் புத்தாண்டு
2017 பிறந்து விட்டது. ஆஸ்திரேலிய நேரம்  இந்தியாவை
விட ஐந்து மணி நேரம் முன்னதாக உள்ளது.
அதாவது டிசம்பர் 31 இரவு 7 மணிக்கே, (இந்திய
நேரப்படி) ஆஸ்திரேலியாவில் புத்தாண்டு பிறந்து விட்டது.

உலகில் ஒவ்வொரு நாட்டிலும் நேரம் மாறுபடுகிறது
என்பதைப்  பார்த்தோம். இதனால் நேரிடும் குழப்பத்தைத்
தவிர்க்கவே உலகப் பொதுநேரம் எனப்படும் UTC நேரம்
கடைப்பிடிக்கப் படுகிறது. (UTC =  Coordinated Universal Time).

இந்த UTC பொது நேரத்தில், அண்மைக் காலமாக
அவ்வப்போது ஒரு வினாடி
சேர்க்கப்பட்டுக் கொண்டே வருகிறது.
2016ஆம்  ஆண்டின் இறுதியில் ஒரு வினாடி
சேர்க்கப் பட்டுள்ளது. 31.12.2016 23:59:60 என்று
கூடுதலாக ஒரு வினாடி சேர்க்கப் பட்டுள்ளது. ஏன்?

இரண்டு விதமான நேரங்களின் அடிப்படையில்
பொதுநேரம் (UTC) கணிக்கப் படுகிறது.
1) அணுக்கடிகார நேரம் (atomic time)
2) வானவியல் நேரம் (UT- Universal Time)

சீசியம்-133 என்னும் தனிமத்தின் ஐசோடோப் அணுக்
கடிகாரங்களில் பயன்படுகிறது. ஒரு வினாடி நேரம்
எவ்வளவு என்பதை இந்த சீசியம் கடிகாரங்கள்
துல்லியமாகத் தீர்மானிக்கின்றன.

அதே நேரத்தில், வானவியல் நேரத்தின் படி, ஒரு
வினாடி என்பது பூமி தன்னுடைய அச்சில் தன்னைச்
சுற்றுவதில் இருந்து பெறப்படுகிறது (actual rotation of the earth
around its own axis) .

சமயங்களில் இவ்விரு நேரமும் ஒத்துப் போவதில்லை.
நுண்ணிய வேறுபாடு (வினாடிகளில்) ஏற்படுகிறது.
பூமி தன் அச்சில் மெதுவாகச் சுற்றுவதானது
இத்தகைய நுண்ணிய வேறுபாட்டுக்குக் காரணமாக
அமைகிறது.

எனவே வேறுபடும் நேரங்களைச் சரி செய்யும்
பொருட்டு, லீப் வினாடிகள் (leap seconds) சேர்க்கப்
பட வேண்டியதாகிறது. நம்முடைய அணுக்கடிகாரத்திற்கு
ஏற்றவாறு பூமி சுற்றாது. எனவே பூமி சுற்றுவதற்கு ஏற்ப
நமது கடிகாரங்களை மாற்றி அமைக்க வேண்டும்.
பூமி மெதுவாகச் சுற்றுகிறது என்பதன் பொருள்
கூடுதலாக நேரம் எடுத்துக் கொள்கிறது என்பதாகும்.
எனவே அக்கூடுதலான நேரத்தை (வினாடிக் கணக்கிலானது)
நம்முடைய கடிகாரங்களுக்கு அளிக்க வேண்டும். எனவேதான்
லீப் வினாடிகளைச் சேர்க்கிறோம்.

1972இல் முதல் லீப் வினாடிகள் சேர்க்கப் பட்டு வருகின்றன.
இதுவரை 26 லீப் வினாடிகள் சேர்க்கப் பட்டுள்ளன.
தற்போது 2015 டிசம்பர் 31இல் சேர்க்கப் பட்டிருப்பது
27ஆவது ஆகும்.

மிகச்சிறிய வினாடியில் நுண்ணிய மாற்றம் செய்துள்ளதைப்
போல, மிகப்பெரிய கால அளவான ஆண்டுகளின்
கணக்கீட்டு முறையிலும் அண்மைக்  காலத்தில்
மாற்றம் ஏற்பட்டுள்ளது. அது குறித்தும் அறிவோம்.


புதிய ஆண்டுக் கணக்கீட்டு முறை! (New Era)
--------------------------------------------------------------------------
ஆங்கிலப் புத்தாண்டு என்று  வழக்கில் நாம் கூறுவது
கிறிஸ்துவ சகாப்தத்தைக் குறிக்கும் (Christian era).
இது ஏசு கிறிஸ்துவின் பிறப்பை அடிப்படையாகக்
கொண்ட ஆண்டுக் கணக்கு ஆகும். இதன்
அடிப்படையிலேயே கி.மு, கி.பி என்ற பதங்கள்
உண்டாயின.

உலகம் முழுவதும் கிறிஸ்து சகாப்த ஆண்டுக்
கணக்கு பின்பற்றப் பட்ட போதிலும், மாற்று
மதத்தவர்க்கும் கடவுள்--மத மறுப்பாளர்களுக்கும்
இது உறுத்தலாக இருந்தது. எனவே அனைவர்க்கும்
பொதுவானதாகவும் மதச் சார்பற்றதாகவும் உள்ள
ஒரு பொதுவான ஆண்டுக் கணக்கு தேவைப்
பட்டது.

அதே நேரத்தில் உலகம் முழுவதும் பின்பற்றப்பட்ட
கிறிஸ்துவ சகாப்த ஆண்டுக்  கணக்கை எடுத்தோம்
கவிழ்த்தோம் என்ற முறையில் அகற்றி விட்டு
முற்றிலும் புதிதாக ஒன்றை திடீரென்று அறிமுகம்
செய்து விட முடியாது.

எனவே பழைய கணக்கீட்டு முறையைப் பின்பற்றும்
அதே நேரத்தில், அதிலுள்ள கிறிஸ்துவ மதம் சார்ந்த
பெயர்களைக் களைந்து புதிதான ஓர் ஆண்டுக்
கணக்கீட்டு முறையை அறிமுகம் செய்திட
அறிஞர்கள் முடிவெடுத்தனர்.

இப்படித்தான் பொது சகாப்தம் (Common Era) பிறந்தது.
கிறிஸ்துவ சகாப்தத்தின் ஆண்டுக் கணக்கு
முறையை இது அப்படியே பின்பற்றியது. அதாவது
கிறிஸ்துவின் பிறப்பு என்பது அடிப்படைக் குறிப்பாகக்
(Reference date) கொள்ளப்  பட்டது. அதில் மாற்றம் இல்லை.
ஆனால் கிறிஸ்துவின் பெயரைக் குறிக்கும்
கி.மு, கி.பி. ஆகிய பெயர்கள் அகற்றப் பட்டன.
அவற்றுக்குப் பதிலாக,  பொ.மு,, பொ. ஆகிய
பதங்கள் அறிமுகம் செய்யப் பட்டன.

பொ.மு = பொது சகாப்தத்திற்கு முன் (BCE)
பொ. = பொது சகாப்தம் (CE)
ஆங்கிலத்தில்,
BCE = Before Common Era; CE =Common Era.

பொது சகாப்தப்படி,
கி.மு 1500 = பொ.மு 1500;
கி.பி 2017 = பொ 2017.
இந்த மாற்றங்களின் விளைவாக, ஆண்டுக்
கணக்கீட்டு முறையானது எந்தவொரு மதத்தையும்
சார்ந்ததாக இல்லாமல், அனைவருக்கும்
பொதுவானதாக ஆக்கப் பட்டுள்ளது.

ஆக, இப்போது பிறந்துள்ளது புத்தாண்டு 2017.
அதாவது பொ 2017. (பொது சகாப்தம் 2017)
ஆங்கிலத்தில் CE 2017.

காலந்தோறும் மானுடத்தின் காலம் பற்றிய உணர்வு
வியக்கத் தக்க விதத்தில் மேம்பட்டுக் கொண்டே
வருகிறது. நம் சமகாலத்தில், அனைவருக்கும் பொதுவான,
அனைத்து சாராரும் ஏற்கத்  தக்க ஆண்டுக் கணக்கீட்டு
முறையும், பூமியின் சுழற்சியில் ஏற்படும் அதிநுண்ணிய
மாற்றத்தையும் அளவிட வல்லதான கருவிகளையும்
பெற்று இருக்கிறோம். இதனால் பெருமிதம் கொள்வோம்.
***************************************************************************










  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக