ஞாயிறு, 1 ஜனவரி, 2017

2016ஆம் ஆண்டின் இறுதியில் ஒரு வினாடி
சேர்க்கப் பட்டது ஏன்?
------------------------------------------------------------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன்
நியூட்டன் அறிவியல் மன்றம்
------------------------------------------------------------------------------
உலகில் ஒவ்வொரு நாட்டிலும் நேரம் மாறுபடுகிறது
என்பதைப்  பார்த்தோம். இதனால் நேரிடும் குழப்பத்தைத்
தவிர்க்கவே உலகப் பொதுநேரம் எனப்படும் UTC நேரம்
கடைப்பிடிக்கப் படுகிறது. (UTC =  Coordinated Universal Time).

இந்த UTC பொது நேரத்தில், அண்மைக் காலமாக
அவ்வப்போது ஒரு வினாடி
சேர்க்கப்பட்டுக் கொண்டே வருகிறது.
2016ஆம்  ஆண்டின் இறுதியில் ஒரு வினாடி
சேர்க்கப் பட்டுள்ளது. 31.12.2016 23:59:60 என்று
கூடுதலாக ஒரு வினாடி சேர்க்கப் பட்டுள்ளது. ஏன்?

இரண்டு விதமான நேரங்களின் அடிப்படையில்
பொதுநேரம் (UTC) கணிக்கப் படுகிறது.
1) அணுக்கடிகார நேரம் (atomic time)
2) வானவியல் நேரம் (UT- Universal Time)

சீசியம்-133 என்னும் தனிமத்தின் ஐசோடோப் அணுக்
கடிகாரங்களில் பயன்படுகிறது. ஒரு வினாடி நேரம்
எவ்வளவு என்பதை இந்த சீசியம் கடிகாரங்கள்
துல்லியமாகத் தீர்மானிக்கின்றன.

அதே நேரத்தில், வானவியல் நேரத்தின் படி, ஒரு
வினாடி என்பது பூமி தன்னுடைய அச்சில் தன்னைச்
சுற்றுவதில் இருந்து பெறப்படுகிறது (actual rotation of the earth
around its own axis) .

சமயங்களில் இவ்விரு நேரமும் ஒத்துப் போவதில்லை.
நுண்ணிய வேறுபாடு (வினாடிகளில்) ஏற்படுகிறது.
பூமி தன் அச்சில் மெதுவாகச் சுற்றுவதானது
இத்தகைய நுண்ணிய வேறுபாட்டுக்குக் காரணமாக
அமைகிறது.

எனவே வேறுபடும் நேரங்களைச் சரி செய்யும்
பொருட்டு, லீப் வினாடிகள் (leap seconds) சேர்க்கப்
பட வேண்டியதாகிறது. நம்முடைய அணுக்கடிகாரத்திற்கு
ஏற்றவாறு பூமி சுற்றாது. எனவே பூமி சுற்றுவதற்கு ஏற்ப
நமது கடிகாரங்களை மாற்றி அமைக்க வேண்டும்.
பூமி மெதுவாகச் சுற்றுகிறது என்பதன் பொருள்
கூடுதலாக நேரம் எடுத்துக் கொள்கிறது என்பதாகும்.
எனவே அக்கூடுதலான நேரத்தை (வினாடிக் கணக்கிலானது)
நம்முடைய கடிகாரங்களுக்கு அளிக்க வேண்டும்.
எனவேதான் லீப் வினாடிகளைச் சேர்க்கிறோம்.

1972இல் முதல் லீப் வினாடிகள் சேர்க்கப் பட்டு வருகின்றன.
இதுவரை 26 லீப் வினாடிகள் சேர்க்கப் பட்டுள்ளன.
தற்போது 2015 டிசம்பர் 31இல் சேர்க்கப் பட்டிருப்பது
27ஆவது ஆகும்.
---------------------------------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக