சனி, 28 அக்டோபர், 2017

done அத்வைதம் பின்நவீனத்துவமா?
சமகாலத்தில் அத்வைதம் பின்நவீனத்துவமாக
அவதாரம் எடுத்துள்ளதா?

பதில்: அத்வைதம் பின்நவீனத்துவம் அல்ல. மாறாக
அது முன்புராதனத்துவம் ஆகும். இரண்டும் ஒன்றல்ல.
இரண்டுக்கும் ஓட்டோ உறவோ கிடையாது.

ஒரு தத்துவத்தை அது பிறந்த காலத்தின் சமூகச்
சூழல்களே தோற்றுவிக்கின்றன. அத்வைதம் கி.பி
எட்டாம் நூற்றாண்டில் இந்தியாவில் தோன்றிய
கீழைத்தத்துவம் (oriental philosophy). பின்நவீனத்துவம்
இரண்டாம் உலகப்போருக்குப் பின் ஏற்பட்ட
சமூகச் சூழல்களில் ஐரோப்பாவில் பிறந்த
மேலைத் தத்துவம் (western philosophy).

இளமைப் பருவத்தில் இருந்த  இந்திய நிலவுடைமைச்
சமூகம் வளர்ந்து கொண்டிருந்தபோது, அத்வைதம்
தோன்றியது. முதலாளித்துவம் உச்சகட்ட வளர்ச்சியை
அடைந்து ஏகாதிபத்தியமாக மாறியிருந்த காலத்தில்
பின்நவீனத்துவம் தோன்றியது.

முதலாளித்துவம் என்றால் என்ன என்றே
ஆதிசங்கரருக்குத் தெரியாது. தமது இந்திய சமூகம்
பின்னாளில் முதலாளித்துவ சமூகமாக மாறும் என்று
கூட அவருக்குத் தெரியாது. ஆன்மிகம் (spiritualism)
என்ற ஒரு துறையைத் தவிர வேறு எதிலும் அத்வைதம்
நாட்டம் கொண்டிருக்கவில்லை. ஆனால்
பின்நவீனத்துவம் அப்படியல்ல. அது வாழ்வியலின்
அனைத்துத் துறைகளிலும் அக்கறை கொண்டு
செயல்பட்டது.

ஆதிசங்கரர் என்ற தனியொரு தத்துவஞானியின்
சிந்தனையும் போதனைகளும் மட்டுமே அத்வைதம்
ஆகும். ஆனால் பின்நவீனத்துவம் என்பது பல்வேறு
காலக் கட்டங்களில், பல்வேறு அறிஞர்கள்
முன்மொழிந்த கோட்பாடுகளின் தொகுப்பாகும்.
இவையெல்லாம் வெளிப்படையாகத் தெரிகிற
வேறுபாடுகள்.

தத்துவப் பரிசீலனையில், தத்துவத்தின் உள்ளமைப்பும் கட்டுமானமும் (structure and architecture) எப்படி
இருக்கின்றன என்று பார்க்க வேண்டும். ஒரு
தத்துவத்தைத் தீர்மானிக்கிற அம்சம் இதுதான்.

பிரம்மம் என்ற ஒற்றை மூலத்தை ஒற்றை மையத்தை
மட்டுமே கொண்டது அத்வைதம். அதில் விளிம்புக்கோ
பன்மைத்துவத்திற்கோ இடமில்லை. அது முற்றிலுமான
ஒருமைவாதம் (monism). பின்நவீனத்துவம் என்பது
மையம்-விளிம்பு போன்ற பல்வேறு இருமைகளில்,
இரண்டு இரட்டைகளுக்கும் வேறுபாடு இருக்கக்
கூடாது என்று வலியுறுத்தும் தத்துவம். மேலும் அது
பன்மைத்துவத்தை (pluralism) வலியுறுத்தும் தத்துவம்.
பின்நவீனத்துவம் வலியுறுத்துகின்ற எதற்கும்
அத்வைதத்தில் இடமில்லை.

பிரம்மம் என்பதே பிரபஞ்சத்தின் ஒரே உண்மை;
பேருண்மை என்கிறது அத்வைதம். ஆதிசங்கரரின் இக்கருத்தை  பின்நவீனத்துவம் மூர்க்கமாகவும்
இகழ்ச்சியுடனும் நிராகரிக்கிறது. ஒரே உண்மை,
முழு உண்மை என்று மட்டுமல்ல உண்மை என்ற
ஒன்றே கிடையாது என்பதுதான் பின்நவீனத்துவத்தின்
சாரம். இந்தப் பிரபஞ்சத்தில், ஒன்றுக்கொன்று
சமமான, ஒன்றையொன்று சார்ந்த  பல்வேறு
கோட்பாடுகள் (theories) உண்டே தவிர,
உண்மை (truth) என்ற ஒன்று கிடையாது என்பதுதான்
பின்நவீனத்துவம். பொருள்முதல்வாதமும்
உண்மையல்ல; கருத்துமுதல்வாதமும் உண்மையல்ல;
இரண்டும் சம மதிப்புள்ள வெறும் கோட்பாடுகளே
என்பதுதான் பின்நவீனத்துவம். எல்லாக் கோட்பாடுகளும்
அனுமானங்களே தவிர உண்மையல்ல என்கிறது
பின்நவீனத்துவம்.  There is no truth at all என்பதுதான்
பின்நவீனத்துவம். இதை அத்வைதிகள் ஒத்துக்
கொள்வார்களா?

தத்துவம் என்பது எவரின் மடியிலும் தவழும் குழந்தை.
பயன்படுத்துகிறவர்களைப் பொறுத்து எந்தத்
தத்துவமும் எந்த முகாமுக்கும் பயன்படும். காரல்
மார்க்சின் சோஷலிஸத் தத்துவத்தை நேரு காலத்திய
காங்கிரஸ் பயன்படுத்தியது என்பது வரலாறு. காகிதப்பூ
மனக்காது, காங்கிரசின் சோஷலிசம் இனிக்காது என்று
அன்று காங்கிரசின் சோஷலிசத்தை திமுக எதிர்த்தது.
எந்தத் தத்துவத்தையும் எவரும் எந்த நோக்கத்துக்கும்
பயன்படுத்தலாம். அதற்கெல்லாம் இடமளிப்பதுதான்
தத்துவம்.

பாஜக ஆர் எஸ் எஸ் முன்வைக்கும் இந்துத்துவம் என்பது
தீவிரமான செயல்பாட்டைக் கோருவது. அத்வைதம்
ஒரு செயலுறுத்தும் தத்துவமே அல்ல. It is very passive.
எனவே இந்துத்துவ சக்திகளுக்கு அத்வைதத்தை
தற்போது தங்களின் நலன்களுக்கு பயன்படுத்தும்
திட்டம் இல்லை.

பின்நவீனத்துவம் என்பது சமகாலத்திய
ஏகாதிபத்தியத்தின் உலகமயமாக்கலுக்கு (globalisation)
ஆதரவாகப் பயன்படும் தத்துவம். மார்க்சியத்துக்கு
எதிராக நிறுத்தப்படும் தத்துவம். மார்க்சியத்திற்கு
கணிசமான சேதாரத்தை ஏற்படுத்திய தத்துவம்.
ஆனால் அத்வைதம் அப்படியல்ல. அது சமகால
ஏகாதிபத்தியத்திற்கு  பயன்பட்டதற்கான ஆதாரம்
எதுவும் இல்லை. மார்க்சியத்திற்கு எந்த விதத்திலும்
அத்வைதம் சவாலாக விளங்க முடியாது

இன்னும் நிறையக் கூறலாம். எனவே அத்வைதமும்
பின்நவீனத்துவமும் ஒன்றல்ல என்பது இதனால்
நிரூபிக்கப் படுகிறது.
------------------------------------------------------------------------------------------


 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக