செவ்வாய், 31 அக்டோபர், 2017

done (16) ஆதிசங்கரர் கூறும் பிரம்மம் என்பது
பருப்பொருளா அல்லது கருத்தா?
---------------------------------------------------------------------------
1) "காட்டில் ஒரு மரம் முறிந்து விழும்போது, யாரும்
பார்க்கவில்லை என்றால், முறிந்து விழும் ஓசை
எழுமா?" என்று கேட்டார் பாதிரியார் பெர்க்லி.
(If a tree falls in a forest and no is around to hear it, does it make
a sound?...Bishop George Berkely 1685-1753).

(2) இதே கேள்வியை ஆதிசங்கரரும் கேட்டார் வேறு
வார்த்தைகளில். "யாரும் பார்க்காமல் இருக்கும்போது
ஆகாசம் நீல நிறமாக இருக்குமா?" என்றார் அவர்.

(3) இருவருக்கும் எவ்வளவு அற்புதமான ஒற்றுமை
பாருங்கள்! கருத்துமுதல்வாதத்தின் உச்சம் தொட்ட
கேள்விகள் இவை. தத்துவ அரங்கில் இவ்விரண்டு
கேள்விகளும் மிகவும் பிரசித்தி பெற்றவை; பரவலாக
அறியப்பட்டவை. கருத்துமுதல்வாதிகளால்
ஆராதிக்கப்படும் மேற்கோள்கள் இவை.

(4) புறவுலகம் இயங்குவது கருத்தின் (சிந்தனையின்)
விதிகளாலேயே என்பதை உணர்த்துவதற்கே
இக்கேள்விகளை ஆதிசங்கரரும் பெர்க்லியும் கேட்டனர்.

(5) புறவுலகம் இயங்குவது ஏதன் விதிகளால்?
சிந்தனையின் விதிகளால் புறவுலகம்
இயங்குகிறதா? அல்லது பருப்பொருளின்
விதிகளால் புறவுலகம் இயங்குகிறதா?

(6) மரம் என்பது ஒரு பருப்பொருள் (matter). அது
நமது சிந்தனைக்கு அப்பாற்பட்டு சுயேச்சையாக
இருப்பது. அதாவது, அங்கு மரம் இல்லை என்று
நாம் நினைத்தாலும் மரம் இருக்கத்தான் செய்யும்.
இல்லையென்று நாம் நினைப்பதால் மரம் இல்லாமல்
போய்விடுவதில்லை. ஏனெனில் மரம் இருப்பது
நமது சிந்தனையைப் பொறுத்தது அல்ல.

(7) மரம் அதன் உள்ளியக்கத்தால் (internal motion)
முறிந்து விழுகிறது. முறிந்து விழும்போது அதிர்வுகள்
ஏற்படுகின்றன. முறிவு  என்பதே அதிர்வுகளின்
தொகுப்புதான். இந்த அதிர்வுகள் காற்றில்
பரவுகின்றன. அதனால் காற்றில் இறுக்கமும் தளர்வும்
ஏற்பட்டு காற்றின் அழுத்தம் வேறுபடுகிறது. இந்த
அழுத்த வேறுபாடே ஓசை ஆகும்.
(The vibrations cause a variation of pressure in the air making compressions
and rarefactions and thus sound is produced) (compression = இறுக்கம்,
rarefaction = தளர்வு, vibration = அதிர்வு).

(8) ஆக, மரம் எதன் விதிகளுக்கு உட்பட்டு
இயங்குகிறது? பொருளின் விதிகளுக்கு உட்பட்டு
இயங்குகிறது. சிந்தனையின் விதிகளுக்கு
உட்பட்டு மரம் இயங்குவதில்லை.

(9) பொருளின் விதிகளே பொருளின் இயக்கத்தைத்
தீர்மானிக்கின்றன. இதுதான் உண்மை. மாறாக,
சிந்தனையின் விதிகள் பொருளின் இயக்கத்தைத்
தீர்மானிப்பதாக வைத்துக் கொண்டால், என்ன
நடக்க வேண்டும்?

(10) அங்கு மரம் இல்லை என்று நீங்கள் மனதில்
நினைத்தவுடனே, அங்கு மரம் இல்லாமல் போக
வேண்டும். மரம் தீப்பிடித்து எரிகிறது என்று
நீங்கள் நினைத்தவுடன் மரம் தீப்பிடித்து
எரிய வேண்டும். இதெல்லாம் நடக்குமா?
ஒருநாளும் நடக்காது.

11) எனவே, காட்டில் மரம் முறிந்து விழும்போது
யாரும் பார்க்காவிட்டாலும் அங்கு மரம் முறியும்
ஓசை எழும். இது அன்றாட  வாழ்வில் நாம் அனைவரும்
 ஒவ்வொரு கணமும் உணர்கிற விஷயம். இதை
ஏதோ மகத்தான தத்துவச் சிந்தனையாக, பெர்க்லி
பாதிரியார்   கேள்வி எழுப்புகிறார் என்றால், அது
எவ்வளவு பேதைமை!

12)  காட்டில், ஆளரவமே இல்லாத இடத்தில், மிருகங்கள்
வேட்டையாடுவதை  தத்ரூபமாக படம் பிடித்து
சினிமா எடுக்கிறார்களே நேஷனல் ஜியாக்ரபி
சேனலும் டிஸ்கவரி சேனலும். எப்படி? மரத்தின்
உயரமான கிளையில்  காமிராவை வைத்துத்தானே!
யாரும் பார்க்கவில்லை என்பதற்காக, ஓசைகள்
எழாமல் இருக்கின்றனவா?

13) ஆக, பெர்க்லி பாதிரியாரின் தத்துவம் எவ்வளவு
அபத்தம் என்று நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது
அல்லவா! இது போன்ற ஒரு அபத்தத்தைத்தானே
ஆதிசங்கரரும் சொன்னார்.

(14) யாரும் பார்க்காமல் இருந்தாலும் ஆகாயம்
நீல நிறமாகத்தான் இருக்கும்.
ஏனெனில், ஆகாயம் நீல நிறமாக இருப்பது
ஒளிச்சிதறல் (scattering of light) என்னும் நிகழ்வால்.
நீல நிறம் மிகவும் குறைவான அலைநீளம்
உடையது என்பதால், அது மற்ற நிறங்களை விட
அதிகமாகச் சிதறுகிறது. எனவேதான் ஆகாயம்
நீலமாகத் தெரிகிறது.

(15) ஒளிச்சிதறல் என்பது பொருளின் விதி.
சிந்தனையின் விதி அல்ல. ஆகாயம் நீலமாக
இருப்பதன் காரணம் பொருளின் விதியால்தானே
தவிர, சிந்தனையின் விதியால் அல்ல.

(16) எவர் ஒருவரின் ஆத்மாவோ (சிந்தனையோ)
அல்லது பிரம்மமோ பருப்பொருளை இயக்கவில்லை.
இயற்கை, புறவுலகம், பருப்பொருள், உயிர்கள்
என்று இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள அனைத்துமே
பொருளின் விதிகளால்தான் இயங்குகிறது. இந்த
இயக்கத்தில் கருத்துக்கோ, சிந்தனைக்கோ,
பிரம்மத்துக்கோ, ஆத்மாவுக்கோ தீர்மானிக்கிற
இடமே இல்லை.

(17) கருத்து இருக்கிறது. அதை எவரும் மறுக்கவில்லை.
ஆனால் கருத்து முதன்மையானது அல்ல என்பதே
பொருள்முதல்வாதம். கருத்தின் விதிகளால் இந்தப்
பிரபஞ்சம் இயங்குவதில்லை என்பதே
பொருள்முதல்வாதம். நன்கு கவனிக்கவும்: கருத்தின்
இருப்பை பொருள்முதல்வாதம் மறுக்கவில்லை.
பொருளைப் பார்த்தபின் நம் மனதில் எழும்
பிரதிபலிப்பே கருத்து என்பதுதான் பொருள்முதல்வாதம்.

(18) ஆதிசங்கரரின் பிரம்மம் என்பது பொருளா,
கருத்தா? அது கருத்துதானே தவிர பொருள் அல்ல.
பொருள் என்றால் அதற்கு ஒரு இருப்பு உண்டு.
பிரம்மம் என்பது பொருள்தான் என்றால், அதன்
இருப்பைச் சுட்ட வேண்டும் அல்லவா? ஆதிசங்கரர்
சுட்டிக் காட்டினாரா? இல்லை. ஏன்? அதற்கு
இருப்பு இல்லை. அது கருத்தே தவிர பொருள் அல்ல.

(19) பிரம்மம் என்பது  குணமற்றது (நிர்குண பிரம்மம்);
உருவமற்றது; வரம்பற்றது என்கிறார் ஆதிசங்கரர்.
அது இருப்பும் அற்றது; அதாவது இல்லாத ஒன்று
என்பதையும் நாம் சேர்த்துக் கூற வேண்டும்.
(Brahman is a non entity).

(20) In Advaita Vedanta, Brahman is without 
attributes and strictly impersonal.It can be 
best described as infinite Consciousness and 
infinite Bliss. It is pure knowledge itself.

(21) பிரம்மத்திற்கு ஆதிசங்கரர் கூறும் மேற்கண்ட
வரையறையின்படி, பிரம்மம் என்பது பொருள் அல்ல;
கருத்தே. குணமற்ற, வடிவமற்ற, வரம்பற்ற உணர்வாக
(பிரக்ஞை) உள்ள , வரம்பற்ற பேரின்பமாக உள்ள, சுத்த
அறிவு என்பதுதான் பிரம்மம் என்றால் அது கருத்தே.
அது பொருள் அல்ல. பிரம்மம் என்பது பொருள்
என்பது பித்தலாட்டம்.

(22) இதனால் பிரம்மம் என்பது கருத்தே என்பதும்,
அத்வைதம் கருத்துமுதல்வாதமே என்பதும் மீண்டும்
நிரூபிக்கப் படுகிறது.
***************************************************************** 


.     
  
    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக