வெள்ளி, 13 அக்டோபர், 2017

(done 5) பொருளின் இயக்கம்:
ஏங்கல்ஸ் கூறியது சரியா?
ஆதிசங்கரர் கூறியது சரியா?

"பிரம்மம் மட்டுமே மெய்; மீதி அனைத்தும் பொய்"
என்ற ஆதிசங்கரர் தத்துவ விவாதங்களின் போது
பெரும் இடரைச் சந்தித்தார். நாம் வாழும் இந்த உலகம்
உண்மையானது என்பதை ஒவ்வொரு மனிதனும்
ஒவ்வொரு ஜீவராசியும் அன்றாடம் தங்களின்
நேரடி அனுபவத்தின் மூலம் உணர்ந்து வருகின்றனர்.
இதனால் புறவுலகம் பொய்யானது என்ற ஆதிசங்கரரின்
கருத்து மக்களால் ஏற்கப்படவில்லை. மொத்த மக்கள்
சமூகமும் மெய் என்று உணர்ந்த ஒன்றை பொய் என்று
நிறுவுவது ஆதிசங்கரருக்கு எளிதாக இல்லை.

உலகத்தார் உண்டென்பது இல்லென்பான் வையத்து
அலகையா வைக்கப் படும்
என்ற குறளுக்கு ஏற்ப 'வையத்து அலகை'யாகக்
கருதப்பட்டார் ஆதிசங்கரர். (அலகை= பேய்) 

இந்த இடர்ப்பாட்டைத் தவிர்க்க ஆதிசங்கரர் "வியவகாரிக
ஸத்யம்" என்ற ஒரு கருத்தை அறிமுகம் செய்தார்.
நடைமுறை உண்மை (practical truth) என்று இதற்குப் பொருள்.
அதை பிரசித்தி பெற்ற கயிற்றரவு உதாரணத்தின்
மூலம் விளக்கினார்.

1) அரையிருட்டில் கயிற்றைப் பார்க்கும் ஒருவன், அதைப்
பாம்பாக உணர்கிறான். வெளிச்சம் வந்ததும் அது
பாம்பல்ல என்று உண்மையை உணர்கிறான். இவ்வாறு
சிறிது நேரம் கயிறானது பாம்பு என்ற உண்மையாக
இருக்கிறது. இந்த உண்மையை ஆதிசங்கரர்
"பிரதிபாஷிக சத்யம்" என்று அழைத்தார். இதன்
பொருள் பிரமையான உண்மை என்பதாகும்.

2) நல்ல வெளிச்சத்தில் ஒருவன் கயிற்றைக்
கயிறாகவே உணர்கிறான். கயிறு கயிறாகவே
உணரப்படும் இந்த உண்மை வியவகாரிக ஸத்யம்
ஆகும். அதாவது நடைமுறை உண்மை (practical truth)
ஆகும்.

3) எனினும் இவ்விரண்டும் உண்மையல்ல. மெய்யான
உண்மை என்பது பிரம்மம் மட்டுமே உண்மை
என்பதாகும். இது பரமார்த்திக ஸத்யம் ஆகும்.

இவ்வாறு வியவகாரிக ஸத்யம் என்ற கோட்பாட்டைப்
புகுத்தியதன் மூலம் தாக்குதலில் இருந்து தற்காத்துக்
கொண்டாலும், அது யதார்த்தத்தில் அத்வைதத்தை
பலவீனப் படுத்தி விட்டது.

இதனால்தான் ராமானுஜர் சங்கரரின் அத்வைதத்தில்
சில திருத்தங்களைச் செய்து, தமது விஷிஷ்டாத்வைதக்
கொள்கையை உருவாக்கினார். விசேஷித்த அத்வைதம்
என்று இதற்குப் பெயர். விஷிஷ்டாத்வைதத்தில்,
புறவுலகம் மாயை என்ற சங்கரரின் கருத்தை,
ராமானுஜர் நிராகரித்து புறவுலகின் மெய்மையை
உறுதி செய்தார்.

புறவுலகம் (objective world) பொய் என்பதற்கான தமது
வாதங்களை பின்வருமாறு ஆதிசங்கரர் முன்வைத்தார்.
புறவுலகம் என்பது பருப்பொருளால் ஆனது
(material world; contains matter). பருப்பொருளானது தொடர்ந்து
இயங்கிக் கொண்டும் மாறிக் கொண்டும் இருக்கிறது.
அதற்கு ஒரு சாசுவத இருப்பு இல்லை. பொருள் என்பது
நின்று நிலவவில்லை (does not exist); எனவே பொருளாலான
புறவுலகம் மெய்யல்ல; பொய்யே.

ஆதிசங்கரரின் குரு கோவிந்தர். கோவிந்தரின் குரு
கெளட பாதர். கி.பி ஏழு எட்டாம் நூற்றாண்டைச்
சேர்ந்தவர்கள் இவர்கள். அறிவியலின் வளர்ச்சி
அதன் குழந்தைப் பருவத்தில் இருந்த காலம் அது.
அறிவியல் கொள்கைகள் பரவலாக மொத்த
சமூகத்தையும் சென்று சேராத காலம் அது.

கிரேக்கத்தில் அரிஸ்ட்டாட்டிலும் இந்தியாவில்
ஆரிய பட்டரும் நிறுவிய அறிவியலே அப்போதைய
அறிவியலின் உச்சமாக இருந்த காலம் அது.
தம் காலத்தின் தலைசிறந்த அறிஞர் ஆதிசங்கரர்
என்பதில் எவரும் ஐயம் கொள்வதற்கில்லை.
என்றாலும், நவீன அறிவியலின் தற்கால வளர்ச்சியில்,
12ஆம் வகுப்பு படிக்கும் ஒரு எளிய சிறுவன்,
ஆதிசங்கரின் "இயங்குகின்ற பருப்பொருள்"
(matter which is in motion) பொய்யானது என்ற கோட்பாட்டை
எளிதில் தகர்த்து நொறுக்கி விடுவான்.

பூமி தன்னைத்தானே சுற்றிக் கொண்டு சூரியனையும்
சுற்றி வருகிறது. மணிக்கு ஒரு லட்சம் கிலோ மீட்டர்
(தோராயமாக) வேகத்தில் பூமியானது சூரியனைச்
சுற்றி வருகிறது. அவ்வப்போது படுத்து ஒய்வு எடுத்துக்
கொண்டும் இளைப்பாறிக் கொண்டும் மிஞ்சிய
நேரத்தில் மட்டுமே சூரியனைச் சுற்றுவதல்ல பூமி.
மாறாக, இடைவிடாத நிரந்தரமான சுழற்சி அது.
இந்த இயக்கம் நின்று விட்டால் என்ன ஆகும்? பூமி
சுற்றுவதை நிறுத்திக் கொண்டால், பூமியானது
சூரியனால்  ஈர்க்கப்பட்டு அழிந்து விடும். பூமி
மட்டுமல்ல, பிற கோள்களும் சூரியனைச் சுற்றி
வருகின்றன. எந்தக் கோளும் இயக்கத்தை மறுத்து
இயங்காநிலையில் இருப்பதில்லை. இயங்கினால்
மட்டுமே வாழ்வு, இயங்காவிட்டால் மரணம் என்ற
நிலையிலேயே எல்லாக் கோள்களும் உள்ளன.

பிரும்மாண்டமான கோள்கள் மட்டுமல்ல, நுட்பமான
அணுவில், அணுவைச் சுற்றி வரும் எலக்ட்ரான் போன்ற
மெல்லிய துகளுமே சுற்றிக் கொண்டுதான்
இருக்கிறது. சுற்றாத துகள் எதுவும் இந்தப்
பிரபஞ்சத்தில் இல்லை.

இதனால்தான் மார்க்சிய மூல ஆசான் எங்கல்ஸ்,
"பொருளின் இருத்தல் அதன் இயக்கத்தில்தான் உள்ளது"
(Motion is the mode of existence of matter) என்றார்.

Motion in the most general sense, conceived as the mode of existence, 
the inherent attribute of matter, comprehends all changes and processes 
occurring in the universe, from mere change of place right up to thinking.
(பார்க்க: எங்கல்ஸ், இயற்கையின் இயக்கவியல்,
அத்தியாயம் மூன்று, Forms of motion).

இயங்குவதால் மட்டுமே அது பொருளாக இருக்கிறது
என்கிறார் எங்கல்ஸ். இயங்குவதால் அது
பொருளே அல்ல என்கிறார் ஆதிசங்கரர். எது சரி?
விடையை நாம் யாரும் சொல்ல வேண்டாம்.
12ஆம் வகுப்பு இயற்பியல் மாணவர்கள் விடை
சொல்லட்டும்.
--------------------------------------------------------------------------------------
 


                   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக