திங்கள், 30 அக்டோபர், 2017

done (14) கிடக்கிற வேலை கிடக்கட்டும்,
கிழவியைத் தூக்கி மணையில் வை!
மார்க்ஸ் மண்டன மிசுரர் அல்ல!
--------------------------------------------------------------------------
1) தலைவாசலில் அத்வைதம் நின்று கொண்டு
இருக்கிறது; அது மார்க்சியத்துக்கு பேராபத்து
என்று சிலர் கூச்சலிட்டுக் கொண்டு இருக்கின்றனர்.

2) கிழடு தட்டிப்போய், எழுந்து நடக்கக்கூடத்
தெம்பில்லாமல் போய், படுத்த படுக்கையாக
மியூசியத்தில் மக்களின் பார்வைக்கு வைக்கப்
பட்டிருக்கும் அத்வைதம் மார்க்சியத்தை சவாலுக்கு
அழைக்கிறது என்பதெல்லாம் புலன்களின்
தீட்சண்யத்தை இழந்து நிற்கும் சிலரின் மனப்
பிராந்தியே தவிர உண்மை அல்ல.

3) மார்க்சியம் நடைமுறையில் செயல்பட்டுக்
கொண்டிருக்கும் ஒரு தத்துவம் (It is a philosophy in practice).
ஆனால் அத்வைதமோ வரலாற்றில் மட்டுமே
வாழுகிற தத்துவம். இரண்டுக்கும் பாரதூரமான
வேறுபாடு உண்டு. அதாவது உயிருள்ள மனிதனுக்கும்
செத்த சவத்துக்கும் உள்ள வேறுபாடு.

4) காரல் மார்க்ஸ் உபரி மதிப்புக் கோட்பாட்டை
(Theory of surplus value) உருவாக்கினார். இதற்கு எதிராக
ஆதிசங்கரர் என்ன கோட்பாட்டை உருவாக்கினார்?
ஆதிசங்கரரின் எந்தெந்தக் கோட்பாடுகள் மார்க்சின்
மூலதனம் நூலைச் சவாலுக்கு அழைக்கின்றன?

5) சிறிதும் நாணம் இல்லாமலும், எந்த விதமான
குற்ற உணர்வும் இல்லாமலும் மார்க்சியம்
அத்வைதத்தால் ஆபத்துக்கு உள்ளாகி நிற்கிறது
என்று கூறுவதா?

6) சமகால உலகைப் பற்றிய எந்தப் பிரக்ஞையும்
இல்லாமல், மார்க்சியம் தீர்வு கண்டே ஆக வேண்டிய
சமகாலப் பிரச்சினைகள் பற்றிய எந்தப் புரிதலும்
இல்லாமல், அத்வைதப் பூச்சாண்டி காட்டிக் கொண்டு
திரிவது வெட்கங்கெட்ட செய்கை அல்லவா?

7) கிடக்கிற வேலை கிடக்கட்டும், கிழவியைத்
தூக்கி மணையில் வை  என்பது போல,
அத்வைதம்தான் உடனடி கவனத்திற்கான ஒரே
பிரச்சினை என்பதா?

8) மார்க்சியம் என்பது ஒரு ஏகே 47 துப்பாக்கி.
அத்வைதம் என்பது எட்டாம் நூற்றாண்டின்
துருப்பிடித்த வாள். இரண்டும் சமமாகி விடுமா?
ஆதிசங்கரரால் வீழ்த்தப் படுவதற்கு மார்க்ஸ்
என்ன மண்டன மிசுரரா?

9) பொருள்முதல்வாதம் 2500 ஆண்டுத் தொன்மை
மிக்கது. மார்க்ஸ் பிறப்பதற்கு 2000 ஆண்டுகளுக்கு
முன்பே உலகெங்கும் பொருள்முதல்வாதம்
தத்துவங்களின் அரசனாக இருந்தது. காலந்தோறும்
அது வளர்ந்து கொண்டே இருந்தது. மார்க்ஸ்
முன்வைத்த பொருள்முதல்வாதம் அக்கால
அறிவியலின் சாரத்தை உட்கிரகித்துக் கொண்ட
பொருள்முதல்வாதம்.நியூட்டனின் இயற்பியலை
முற்றிலுமாக உள்வாங்கிக் கொண்ட, நன்கு
வளர்ச்சியடைந்த பொருள்முதல்வாதம். இந்த
உண்மையை ஏற்க மறுப்போர் ஏங்கல்ஸின்
டூரிங்குக்கு மறுப்பு என்ற நூலைப் படிக்கவும்.

10) ஆனால் அத்வைதமோ எட்டாம் நூற்றாண்டின்
கால எல்லைக்குள் முடங்கிப்போய், காலந்தோறும்
வளர்ச்சி அடையாமல், நவீன அறிவியலை
உள்வாங்காமல், தேங்கிய குட்டையாக
ஆகிப்போன தத்துவம். காய்ந்து கருவாடாகிப்
போன ஒரு தத்துவம். எனவே மார்க்சியத்துக்கு
எதிராகக் களம் இறங்குவதற்கு அத்வைதத்திடம்
என்ன இருக்கிறது?

11) அத்வைதத்தின் அச்சு அசலான ஐரோப்பியப்
பதிப்பு பெர்க்லி பாதிரியாரின் "பொருள் மறுப்புத்
தத்துவம் (IMMATERIALISM). இவ்விரண்டும் அகநிலைக்
கருத்துமுதல்வாதமே. இவ்விரண்டையுமே தமது
புறவயவாதம் (OBJECTIVISM) என்ற தத்துவத்தால்
அடித்து நொறுக்கித் தூள் தூள் ஆக்கினார்
இருபதாம் நூற்றாண்டின் பெண் எழுத்தாளர்
அயன் ராண்ட்.                  

12) இந்தியாவின் கோடிக்கணக்கான
தொழிலாளர்கள் நடுவே, உழைக்கும் பெண்கள்
நடுவே,விவசாயிகள் நடுவே அத்வைதத்திற்கு
எவ்விதமான அறிமுகமோ செல்வாக்கோ கிடையாது.

13) அத்வைதம் சிறுபான்மையினரான மேட்டுக்குடிகளின்
தத்துவம் (elite philosophy). அது ஒரு லயன்ஸ் கிளப்
தத்துவம். உயர்குடிப் பெண்களின் லேடீஸ் கிளப்
தத்துவம். பட்டுச் சேலைக்கு மேல் ஒட்டியாணம்
அணிபவர்களின் தத்துவம். அவர்கள் அதை
ஆராதிக்கட்டும். நாம் சென்று தடுத்தாட்கொள்ள
வேண்டியதில்லை.

13) அத்வைதம்தான் பிரதான எதிரி என்று
சொல்பவர்கள் யார்? அவர்களின் நோக்கம் என்ன?
பிரதான எதிரிகள் ஆயிரம் பேர் இருக்க,
அவர்களை விட்டு விட்டு அத்வைதத்தை எதிரியாகச்
சுட்டுபவர்கள் பின்நவீனத்துவ தாசர்களே.

14) மார்க்சியத்தின் மொத்த எதிர்ப்பும் பின்நவீனத்தை
நோக்கிக் குவிந்து விடக்கூடாது என்பதற்காக,
எதிர்ப்பை திசை  திருப்பவும், மடைமாற்றவுமே
இவர்கள் அத்வைதமே பிரதான எதிரி என்று
வரையறுக்கிறார்கள். இவர்கள் மாறு வேடத்தில்
மார்க்சிய முகாமில் இருக்கும் பின்நவீனத்துவ
தாசர்கள்.

15) சமகால இந்தியச் சூழலை பருண்மையாக ஆய்வு
செய்து சரியான முடிவுக்கு வரும் மார்க்சியர்கள்
எவரும், மார்க்சியத்தின் பிரதான எதிரியாக
பின்நவீனத்துவம், தொண்டு நிறுவனங்கள் (NGOs)
ஆகியவை இருப்பதை உணர்வார்கள்.

16) அத்வைதம் மார்க்சியத்தின் பொருள்முதல்
வாதத்திற்கு ஒவ்வொரு அம்சத்திலும் எதிரிடையான
தத்துவம்தான். என்றாலும் மார்க்சியத்துக்கு
முந்திய பொருள்முதல்வாதத் தத்துவங்களால் விட்டது.
அது ஏற்கனவே வீழ்த்தப் பட்டு விட்டது. மார்க்சியம்
தோன்றிய பிறகு, இந்தியத் தத்துவ  அரங்கிலும்
மார்க்சியம் அத்வைதத்தை வீழ்த்தி விட்டது.

17) அத்வைதம் எதிரி முகாமில் இருப்பதுதான்.
எதிரி முகாமில் உள்ள எல்லாருமே பிரதான
எதிரி ஆக மாட்டார்கள்.எனவே அத்வைதம்
பிரதான எதிரி அல்ல. செக்குக்கும் சிவலிங்கத்துக்கும்
வித்தியாசம் தெரிந்தவர்கள் இதை சரியென்று
ஏற்பார்கள்.
*************************************************************
பின்குறிப்பு:8ஆம் அம்சத்தில் குறிப்பிட்டுள்ள மண்டன
மிசுரர் (Mandana Mishra) பற்றிய குறிப்பு; இவர் ஆதிசங்கரர்
காலத்திய வேதாந்தத் தத்துவ ஞானி.பக்தி
மார்க்கத்தவர். ஆதிசங்கரர் இவருடன் வாதம் செய்து
இவரை வென்றார்.
------------------------------------------------------------------------------------------------
      

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக