திங்கள், 30 அக்டோபர், 2017

done (15) மார்க்சியத்தின் போதாமையை
அத்வைதம் போக்குமா?
---------------------------------------------------------------------
அத்வைதம் இந்தியாவின் ஒளி பொருந்திய தத்துவம்.
அது மார்க்சியத்துக்கு கொடையளிக்க வல்லது.
எனவே அத்வைதத்தின் சிறந்த அம்சங்களை
மார்க்சியம் சுவீகரித்துக் கொள்ள வேண்டும்.
அவ்வாறு சுவீகரித்துக் கொள்வதன் மூலமே
மார்க்சியத்தின் போதாமை அகலும்.

அத்வைதம் மார்க்சியத்துக்கு வளம் சேர்க்கும்.
மார்க்சியத்தின் தத்துவ வறுமையை அத்வைதம்
போக்கும். மார்க்சியம் ஒன்றும் சர்வரோக
நிவாரணி அல்ல. எனவே எது தன்னிடம் இல்லையோ,
அல்லது எது தன்னிடம் பற்றாக் குறையாக
உள்ளதோ, அதை அத்வைதத்திடம் இருந்து
மார்க்சியம் பெற்றுக் கொள்ள வேண்டும்.
அவ்வாறு பெற்றுக் கொள்ள மறுப்பது நியாயமல்ல.

பொருளுக்கே முதன்மை கொடுப்பதால், மார்க்சியத்தில்
ஆன்மா பற்றிய தெளிவு இல்லை. மனம் பற்றிய
மார்க்சியத்தின் புரிதல் குறைபாடு உடையது.
மனத்தின் ஆற்றல் பற்றி மார்க்சியம் குறைத்து
மதிப்பிடுகிறது. இக்குறைகளாலேயே மார்க்சியம்
தத்துவ வலிமை இழந்து நிற்கிறது; பல்வேறு
குழுக்களாகப் பிளவுபட்டுக் கிடக்கிறது.
இப்படியாக விமர்சனம் தொடர்கிறது.

மேம்போக்காகவும், நுனிப்புல் தன்மையுடனும்
பொறுப்பற்ற முறையிலும் போகிற போக்கில்
எதையாவது சொல்லி விட்டுப் போவது என்ற
தொனியிலுமே இக்கூற்றுகள் உள்ளன.

பித்துக்குளித் தனத்தின் உச்சத்தைத் தொடும்
இத்தகைய அங்கலாய்ப்புகள் தமிழ்ச் சமூகத்தில்
வலம் வந்து கொண்டுதான் இருக்கின்றன.
பரிசீலிப்பதற்கே அருகதையற்ற, கருத்து என்னும்
அந்தஸ்தையே வழங்க முடியாத முழுமுற்றான
அபத்தம்தான் இது. என்றாலும், காய்தல் உவத்தல்
அகற்றி, இதையும் பரிசீலிப்போம்.

மார்க்சியம் சர்வரோக நிவாரணி இல்லைதான்.
மார்க்சியம் மட்டுமல்ல, வேறு எந்தவொரு
தத்துவமும் சர்வரோக நிவாரணி அல்ல.

மார்க்சியத்தின் போதாமையாக இவர்கள் கூறுவன
யாவும் மார்க்சியத்துக்கு மட்டும் உரியன அல்ல.
எல்லா வகையான பொருள்முதல்வாதப்
பிரிவுகளுக்கும் உரியன என்றே பொருள்படும்.
சாங்கியம், நியாயம், பௌத்தம் போன்ற பண்டைய
பொருள்முதல்வாதப் பிரிவுகள் முதல் லுத்விக்
ஃபாயர்பாக்கின் பொருள்முதல்வாதம் வரையிலான
அனைத்துப் பிரிவுகளுக்கும் இவர்கள் கூறும்
"போதாமை" பொருந்தும். எனவே மொத்தப்
பொருள்முதல்வாதத்தின் மீதான தாக்குதல்
என்றே இது பொருள்படும்.  

இந்தியாவில் மிகவும் பழமையான பொருள்முதல்
வாதம் என்று கபிலரின் சாங்கியத்தைக் கூறலாம்.
அடுத்து வந்த நியாயம் சாங்கியத்தை விட வலுவான
தர்க்க அடிப்படைகளைக் கொண்டிருந்தது.
பௌத்தமும் சமணமும் பொருள்முதல்வாதமே.
உலகத்தைப் படைத்தவர் கடவுள் என்று பௌத்த
சமண சமயங்கள் கூறவில்லை. ஆத்மா என்பதை
அடியோடு மறுத்தவர் புத்தர். அவரின் "நிராத்ம
வாதம்" (theory of no soul) ஆத்மா இல்லை என்று
விளக்குகிறது. அதே நேரத்தில் சமணம் ஆத்மாவை
ஏற்றுக் கொள்கிறது.

இவ்வாறு மார்க்சுக்கு முந்திய பொருள்முதல்வாதப்
பிரிவுகளில் முரண்பாடுகள் இருந்தன. எனவே
மார்க்சியத்தின் பொருள்முதல்வாதத்தை
முறணற்றதாக (consistent) உருவாக்கினர்
மார்க்சும் எங்கல்சும். தம் காலத்தின் அறிவியல்
வளர்ச்சியை முழுவதுமாக உட்கிரகித்துக்
கொண்டதே மார்க்சியப் பொருள்முதல்வாதம் ஆகும்.

எனவே மார்க்சியம் தன் மீதான தாக்குதலை
நவீன அறிவியலின் துணைகொண்டு எதிர்த்து
முறியடிக்க வல்லது. ஆனால் அத்வைதம்
அப்படியல்ல. எட்டாம் நூற்றாண்டுக்குப்
பின்னரான அறிவியலின் வளர்ச்சியானது
அத்வைதத்தில் பிரதிபலிக்கவில்லை. எனவே
அத்வைதம் ஒரு தேங்கிய குட்டை. அசுரத் தனமான
அறிவியல் வளர்ச்சியில் இருந்து தன்னை
முற்றிலுமாகத் துண்டித்துக் கொண்டு, அதன்
விளைவாக வழக்கு வீழ்ந்த தத்துவம் அத்வைதம்.
இன்னும் சொல்லப் போனால், அத்வைதம் ஒரு
முன்னாள் தத்துவம். அது நவீன உலகின்
தத்துவம் அல்ல. இதை அனைத்தும் அடுத்தடுத்த
கட்டுரைகளில் நிரூபிக்கப் படும்.

பொருள், கருத்து,ஆத்மா, மனம் ஆகியவை பற்றி
அத்வைதம் கூறுவன யாவும் மெய்யல்ல என்பதை
அடுத்துக் காணலாம். அத்வைதம் கூறும் பிரம்மம்
என்பது எப்பேர்ப்பட்ட பித்தலாட்டம் என்பதையும்
அடுத்துக் காண்போம்.
------------------------------------------------------------------------------------------

  




  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக