தீபாவளி பற்றி பேரறிஞர் அண்ணா அவர்களின் கட்டுரை :
இங்கே தீபாவளி நரகாசுரவதத்தைக் குறிக்கிறது அல்லவா? பஞ்சாபிலே அப்படிக் கிடையாது. நளச் சக்கரவர்த்தி, சூதாடி அரசு இழந்த இரவுதான் தீபாவளியாம்! இங்கே நாம், அசுரனை ஒழித்த நாளென்று ஸ்நானம் செய்து மகிழ்வது சடங்காகக் கூறப்படுகிறதல்லவா? பஞ்சாபிலே நடப்பது என்ன? சூதாடுவார்களாம், பண்டிகையின்போது!
தமிழகத்து இந்து, தீபாவளியை நரகாசுரவதமாகவும், பஞ்சாப் இந்து அதே தீபாவளியை நளமகாராஜனுடைய சூதாட்டத் தினமாகவும் கருதுவது எதைக் காட்டுகிறது?
வேடிக்கையல்லவா? லாகூரில் ஒரு ரூபாய்க்குப் பதினாறு அணா, லால்குடியிலும் அதேதான்! ஆனால் லாகூர் இந்து தீபாவளியின் போது, நரகாசுரனை நினைத்துக் கொள்ளவில்லை. லால்குடி இந்துவுக்கு தீபாவளி, நளச் சக்ரவர்த்தி சூதாடிய இரவு என்று தெரியாது.
வேடிக்கையல்லவா? லாகூரில் ஒரு ரூபாய்க்குப் பதினாறு அணா, லால்குடியிலும் அதேதான்! ஆனால் லாகூர் இந்து தீபாவளியின் போது, நரகாசுரனை நினைத்துக் கொள்ளவில்லை. லால்குடி இந்துவுக்கு தீபாவளி, நளச் சக்ரவர்த்தி சூதாடிய இரவு என்று தெரியாது.
மான்செஸ்டரிலே உள்ள கிறிஸ்துவரை, ஏசுநாதர் எதிலே அறையப்பட்டார் என்று கேளுங்கள், சிலுவையில் என்பார். மானாமதுரையிலே மாயாண்டி, மத்தியாஸ் என்னும் கிறிஸ்துவரான பிறகு அவரைக் கேளுங்கள், அவரும் ஏசு சிலுவையில் அறையப்பட்டார் என்றுதான் சொல்வார்.
இங்கோ லால்குடி இந்துவின் தீபாவளி வேறு, லாகூர் இந்துவுக்கு தீபாவளி மற்றோர் காரணத்துடன் ஏற்பட்டிருக்கிறது. அவ்வளவோடு முடிந்ததா வேடிக்கை! – மேலும் உண்டு. மகாராஷ்டிர தேசத்திலே, தீபாவளிப் பண்டிகை எதைக் குறிக்கிறது என்று கேட்டால், விநோதமாக இருக்கிறது. மகாவிஷ்ணு வாமன அவதாரம் எடுத்து மகாபலியின் முடியிலே அடியை வைத்த நாளாம் அது! லால்குடிக்கு லாகூர் மாறுகிறது. லாகூரிலிருந்து புனா போனால், புதுக் கதை பிறந்துவிடுகிறது. கூர்ஜரத்திலே தீபாவளி புது வருசத்து வர்த்தகத்தைக் குறிக்கிறதாம்! வங்காள தேசத்தில் காளிதேவையை இலட்சுமியாகப் பூஜை செய்யும் நாளாம் தீபாவளி! சிலர், ராமன் மகுடம் சூட்டிக் கொண்ட தினமே தீபாவளி என்று கொண்டாடுகிறார்களாம்! சரித்திர ஆராய்ச்சியைத் துணை கொள்ளும் சில இடங்களிலே, தீபாவளி என்பது தேவ கதைக்கான நாளல்ல; உஜ்ஜைனி நகர அரசன் விக்கிரமாதித்தன் பட்டம் சூடிய நாளைக் கொண்டாடும் பண்டிகையாம்! இவ்வளவோடு முடிந்ததா? இல்லை.
இந்திய தேசத்திலே நான்கு ஜாதிகள், சிரவணம் பிராமணருக்கு, நவராத்திரி க்ஷத்திரியர்களுக்கு, வைசியர்களுக்கு தீபாவளி, இதராளுக்கு (!!) ஹோலிப் பண்டிகை என்று சம்பிரதாயம் ஏற்பட்டிருப்பதாக மற்றோர் சாரார் கூறுகின்றனர்.
இதில் எது உண்மை? அறிவுடையோர் சிந்திப்பீர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக