வெள்ளி, 27 அக்டோபர், 2017

done ஆதிசங்கரரும் அயன் ராண்டும் (Ayn Rand)!
Advaita versus Objectivism!
---------------------------------------------------------------------------------
1) அயன் ராண்ட் (Ayn Rand 1905-1982) என்பவர் ஒரு பெண்
எழுத்தாளர். இவர் ரஷ்யாவில் பிறந்து அமெரிக்காவில்
வாழ்ந்தவர். இவர் ஒரு நாவலாசிரியர். இவரின் பல
நாவல்களில் அ) The Fountainhead ஆ) Atlas shrugged ஆகிய
இரண்டு நாவல்களும் பெரும்புகழ் பெற்றவை.
இன்றளவும் உலகெங்கும்  இவ்விரண்டு நாவல்களும்
கொண்டாடப் படுகின்றன. 

2)The Good Earth என்ற புகழ் பெற்ற நாவலை எழுதியவரும்
இலக்கிய நோபல் பரிசு பெற்றவருமான பெர்ல் எஸ் பக்
(Pearl S Buck) போன்று அயன் ராண்ட்டை கருதக் கூடாது.
பெர்ல் எஸ் பக்கும் ஒரு பெண் எழுத்தாளரே.இவரின்
சம காலத்தவரே அயன் ராண்ட்.

3) மற்ற எழுத்தாளர்களுக்கும் அயன் ராண்டுக்கும்
மாபெரும் வேறுபாடு உண்டு.அயன் ராண்ட் ஒரு
தத்துவஞானியும் (philosopher) ஆவார்.இவரின் மகத்தான
தத்துவம் "புறவயவாதம்"(objectivism) ஆகும்.

4) இவரின் தத்துவங்களைப் புரிந்து கொள்ள இவரின்
Atlas shrugged மற்றும் The Fountainhead நாவல்களைப்
படிக்க வேண்டும். IIT, NITகளில் படிக்கும் ஒவ்வொரு
பொறியியல் மாணவனும் கண்டிப்பாக அன்று
முதல் இன்று வரை The Fountainhead நாவலைப்
படித்து வருகிறான். இந்நாவலின் கதாநாயகன்
ஹோவர்ட் ரோர்க் (Howard Roark) கட்டிடக்கலை
பயிலும் (B.Arch)  ஓரு கலகக்கார மாணவன்.
பழமைவாதத்தை சம்பிரதாயத்தை எதிர்த்து
உறுதியுடன் நின்று தன் சொந்த அறிவின் பலத்தில்
மகத்தான கட்டிடத்தை உருவாக்கியவன்.

5) புறவுலகம் என்னும் யதார்த்தமானது மனித
உணர்வுக்கு அப்பாற்பட்டு சுயேச்சையாக நிற்பது
என்கிறார் ராண்ட். இது பருப்பொருள் பற்றிய
லெனினின் வரையறையுடன் ஒத்து வருவது.

6) "I think therefore I am"--Rane Descartes என்ற தெ கார்த்தேவின்
கருத்துமுதல்வாதத்திற்கு மரண அடி கொடுக்கிறார்
ராண்ட்.

7) மனித உணர்வு என்பது புறநிலை மெய்மையை
(reality) அறிவதே தவிர அதை உருவாக்குவது அல்ல
என்கிறார் ராண்ட். மனிதனால் புறவுலகை,
மெய்மையை  அறிய முடியும் என்றும் மனித அறிவு
அதற்கான தகுதியை உடையது என்றும் கூறுகிறார்
ராண்ட். பகுத்தறிவின் மூலமே மனிதன் அறிவைப்
பெற முடியும் (Reason is man's only means of acquiring knowledge)
என்கிறார் ராண்ட். 

8) அறியொணாவாதத்தை நிராகரிக்கிறார் ராண்ட்.
மதங்களை, இயற்கைக்கு மீறிய ஆற்றலை, 
(supernatural), கருத்துமுதல்வாதத்தின் உள்ளுணர்வு,
இமானுவேல் கான்ட் போன்ற தத்துவஞானிகள்
முன்வைத்த இயற்கைக்கு அப்பாற்பட்ட முற்றிலும்
அகவயமான (purely subjective) பிரக்ஞை ஆகியவற்றை
அடியோடு நிராகரிக்கிறார் ராண்ட். மதம் மனிதனுக்குத்
தேவையற்றது என்கிறார் ராண்ட்.

9) அயன் ராண்டின் புறவயவாதம் பற்றி முழுவதுமாக
இங்கு விவரிப்பதற்கு இல்லை. வாசகர்கள் சுயமாகப்
படித்துத் தெரிந்து கொள்ள வேண்டும். சுருங்கக்
கூறின், புறவயவாதம் என்பது லட்சியபூர்வ
முதலாளித்துவத்தின் பொருள்முதல்வாதம் ஆகும்.
(materialism of the ideal capitalism)

10)ஆதிசங்கரருக்கும்  அயன் ராண்டுக்கும் என்ன
சம்பந்தம்? ஆதிசங்கரரின் அத்வைதத்தை தத்துவ
அரங்கில் முறியடித்தனர் அயன் ராண்ட் ஆவார்.
அயன் ராண்ட் அத்வைதம் பற்றி அறிந்திருக்கவில்லை
என்பது மெய்யே. ஆனால் கருத்துமுதல்வாதத்தின்
ஒவ்வொரு கூறையும் நேரில் களத்தில் முறியடித்தவர்
ராண்ட்.

11) ஆதிசங்கரரின் பிரம்மம் என்பது புலன்களாலும்
பகுத்தறிவாலும் அறிய முடியாதா ஒன்று என்றால்,
அந்த பிரம்மம் பொய்யே என்கிறார் ராண்ட்.

12) பருப்பொருள் இயங்கும் விதிகளாலேயே
புறவுலகம் இயங்குகிறதே அன்றி எவருடைய
பிரக்ஞையாலும் அல்ல என்கிறார் ராண்ட்.

13) மேலும் அறிய விரும்பும் வாசகர்கள் அயன் ராண்டின்
நாவல்களையும் நூல்களையும் படித்துத் தெரிந்து
கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். உணவின் ருசி
அதைச் சாப்பிடும்போது தெரியும் (The proof of the
pudding is in eating) என்று ஒரு ஆங்கிலப் பழமொழி உண்டு.
அது போல அயன் ராண்டைப் படித்தால்தான் அவரின்
தத்துவத்தைப் புரிந்து கொள்ள முடியும். ஆயின்
ஒரு சிரமம் என்னவெனில் அவரின் நூல்கள் யாவும்
ஆங்கிலத்திலேயே உள்ளன; தமிழில் எவரும்
மொழிபெயர்க்கப் போவதில்லை. காலச்சுவடு
கண்ணனுக்குச் சொல்லுங்கள்; அவர் ராண்டின்
நாவல்களை மொழிபெயர்த்துப் பதிப்பிக்கக் கூடும்.

14) ஆதிசங்கரரின் அத்வைதமும் அயன் ராண்டின்
 புறவயவாதமும் வடதுருவம் தென்துருவம் போன்றவை.
தத்துவப்போரில்,சமகாலத்தில், அத்வைதம்
அயன் ராண்டால் வீழ்த்தப்பட்டு உயிர் துறந்து
விட்டது என்பதே உண்மை.

15) சமகாலத்தில், அத்வைதத்தை படித்தவர்களை
விட அயன் ராண்டை படித்தவர்கள் அதிகம். இன்றைய
இளைய தலைமுறையின் அறிவாளிப் பிரிவினருக்கு
அயன் ராண்ட் அறிமுகம் ஆனவரே எனவே அயன்
ராண்ட் ஏற்றுக் கொள்ளப்பட்ட இடத்தில்
ஆதிசங்கரருக்கு என்ன வேலை?

16) சமகால உற்பத்தியோடு எவ்விதத்திலும் தொடர்பற்ற
தத்துவம் அத்வைதம். சமகால உற்பத்திக்கு
எவ்விதத்திலும் பயன்படாத தத்துவம் அத்வைதம்.
அனால் அயன் ராண்ட் அப்படியல்ல.  உற்பத்தியோடு
நெருங்கிய தொடர்புடைய, உற்பத்தியை ஊக்குவிக்கிற
தத்துவம் ராண்டின் புறவயவாதம்.

17) அயன் ராண்டைக் குறிப்பிடாமல் அத்வைதம் பற்றிய
கட்டுரையோ நூலோ எழுதி விட முடியாது.
ராமன்-ராவணன், முருகன்-சூரபத்மன் என்பவை போல
ஆதிசங்கரரும் அயன் ராண்டும் பைனரிகள்.
வீழ்த்தியவர், வீழ்த்தப்பட்டவர், வீழ்த்தப்பட்ட பொருள்
மூன்றையும் ஒருசேரக் குறிப்பிடாமல் ஒரு கதை
முழுமை அடையாது.

18) அயன் ராண்டை குறிப்பிடுவதற்கு மேலும் ஒரு
முக்கிய காரணம் உண்டு. அத்வைத ஆதரவாளர்கள்
எந்தப் பிரிவு மக்கள் திரளிடம் (படித்த அறிவாளிப்
பிரிவினர், அறிவுஜீவி இளைஞர்கள்) அத்வைதத்தைக்
கொண்டு செல்கிறார்களோ அந்தப் பிரிவினர்
அயன் ராண்டை அறிந்தவர்களே. எனவே ஆதிசங்கரர்
(எதிர்) அயன் ராண்ட் (Advaita versus Objectivism) என்று
எதிர் எதிராக நிறுத்த வேண்டிய தேவை
பொருள்முதல்வாதிகளுக்கு இருக்கிறது.

19) ஆதிசங்கரரும் சரி, அயன் ராண்டும் சரி, மேட்டுக்
குடியினரால் ஆராதிக்கப் படுகிறவர்கள்.
குப்பனுக்கும் சுப்பனுக்கும் துலுக்காணத்துக்கும்
ஆதிசங்கரரையும் தெரியாது; அயன் ராண்டையும்
தெரியாது.  இரண்டுமே elite philosophy! என்றாலும்
அயன் ராண்டிடம் உள்ள முற்போக்குக் கூறுகளில்
ஒன்றுகூட ஆதிசங்கரிடம் கிடையாது. அதீதமான
அப்பாலைத் தத்துவம் அத்வைதம்; வாழ்க்கையில்
ஒரு பிரிவினருக்கு நன்கு பயன்படும் தத்துவம்
புறவயவாதம். (தொடரும்)

அத்வைதம்  செயலூக்கமற்ற ஒரு தத்துவம்.
மனிதனைச் செயலுறுத்த அத்வைதம் பயன்படாது.
வாழ்க்கையின் தேவைகள் அனைத்தும் நிறைவடைந்த
உப்புப்புளி மிளகாய்க்கான போராட்டமே இல்லாத
வாழ்க்கையை வாழ்ந்து வரும் மேட்டுக்குடியினருக்கான
தத்துவம் அத்வைதம். அத்வைதம் ஒரு லயன்ஸ் கிளப்
தத்துவம்; ஒரு லேடீஸ் கிளப் தத்துவம்.
 
-----------------------------------------------------------------------------         

      
   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக