திங்கள், 30 அக்டோபர், 2017

done (13)
அத்வைதம் ஒரு நழுவல்வாதம் (philosophy of escapism)!
அத்வைதத்தால் மார்க்சியத்துக்கு ஆபத்தா?
---------------------------------------------------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன் 
நியூட்டன் அறிவியல் மன்றம் 
------------------------------------------------------
ஒரு தத்துவத்தைப் பரிசீலிக்கும்போது, அதன்
மீதான ஒரு குறைந்தபட்சப் பரிவு இருந்தால்தான்
அதிலுள்ள நல்ல அம்சங்கள் கண்ணில் படும்
என்றார் ஹெச் ஜி வெல்ஸ். இது அத்வைதத்திற்கு
மட்டுமல்ல எல்லாத் தத்துவங்களுக்கும் பொருந்தும்.

ஆனால் துரதிருஷ்ட வசமாக, தமிழ் வாசகச் சூழலில்,
நேர் எதிரான இரண்டு விஷயங்களை, தத்துவம்,
கோட்பாடு, அரசியல் இப்படி எதையாயினும்,
பரிசீலிக்கும்போது, பரிசீலனைக்கு உரிய நடுநிலை
என்பது அறவே இல்லை. நடுநிலை என்பது காய்தல்
உவத்தல் அகற்றிய மனநிலை ஆகும். நடுநிலை
என்பதற்கு இதுதான் பொருள்.

இதற்கு மாறாக, கண்மூடித்தனமான வெறுப்பைக்
கொட்டி, குப்பையைக் குவிப்பது ஆய்வும் ஆகாது;
பரிசீலனையும் ஆகாது. dispassionate assessment என்று
ஆங்கிலமரபில் கூறப்படுவதை, "காய்தல் உவத்தல்
அகற்றி ஆய்தல் அறிவுடையார் கண்ணதே"
என்கிறது தமிழ் மரபு. இதுதான் முந்திய வாக்கியத்தில்
கூறிய நடுநிலை ஆகும். எனவே தமிழ் மரபைப்
பின்பற்றி, அத்வைதப் பரிசீலனையைத்
தொடங்குவோம்.

அத்வைதத்தால் மார்க்சியத்துக்கு ஆபத்து வருமா?
அத்வைதம் மார்க்சியப் பொருள்முதல்வாதத்துக்கு
சவாலாக விளங்குமா? இதுதான் இந்தக் கட்டுரையின்
பேசுபொருள்.

உண்மையிலேயே மிகவும் பலவீனமான ஒரு
கருப்பொருள் இது. மியூசியத்தில் சிவனே என்று
கிடக்கும் அத்வைதம் மார்க்சியத்துக்கு ஆபத்தை
ஏற்படுத்தி விடும் என்பதே ஒரு கற்பனை. கற்பனை
கூட அல்ல, வெறும் பிரமை.

சுரண்டல் வர்க்கங்கள் மியூசியத்தில் உறங்கிக்
கொண்டிருக்கும் அத்வைதத்தை விழிப்புறுத்தி,
மார்க்சியத்துக்கு எதிராகப் பயன்படுத்தும்
ஆபத்து இருக்கிறது என்பதெல்லாம் சிறு
குழந்தைகளின் கனவில்தான் சாத்தியம்.

அத்வைதத்தால் மார்க்சியத்துக்கு ஆபத்து என்று
கருதுபவர்கள் பின்வரும் கேள்விக்கு விடையளிக்க
வேண்டும். சமகால இந்தியாவின் பொருள் உற்பத்திக்கு
அத்வைதம் பயன்படுமா? இந்தக் கேள்விக்கான
விடையே, அத்வைதத்தால் ஆபத்தா என்ற
கேள்விக்கும் விடையாகும்.

சமகாலத்தில் மட்டுமல்ல எந்தக் காலத்திலும்
அத்வைதம் சமூகத்தின் பொருள் உற்பத்தியை
ஊக்குவித்தது இல்லை. ஏனெனில் அத்வைதம்
ஒரு செயலுறுத்தும் தத்துவம் அல்ல.
It is a passive philosophy. புறவுலகை  ஒட்டுமொத்தமாக
நிராகரிக்கும் அத்வைதம் புறவுலகின் அனைத்துப்
பிரச்சினைகளையும் கூடவே நிராகரிக்கிறது.
கோடிக்கணக்கான மக்களின் லெளகீக
வ்யவஹாரங்களை (உலகியல் விவகாரங்களை)
அத்வைதம் கண்டு கொள்ளவே இல்லை
(did not give cognizance even).பிரச்சினைகளின் இருப்பையே
அத்வைதம் அங்கீகரிக்காதபோது, பிரச்சினைகளுக்கு
அதில் தீர்வு எப்படி இருக்க முடியும்?

இந்த விஷயத்தில் பௌத்தம் அத்வைதத்துடன்
கடுமையாக முரண்படுகிறது. மக்களின்
துன்பத்திற்கு என்ன காரணம் என்று ஆழ்ந்து
சிந்தித்தார் புத்தர். அந்தச் சிந்தனையின் விளைவே
பௌத்தம்.

ஆசையே துன்பத்திற்குக் காரணம் என்று
கண்டறிந்தார் புத்தர். இந்த உலகின் பிரச்சினைகளுக்கு
இந்த உலகிலேயே தீர்வு கூறினார் புத்தர்.
மறு உலகில் கிட்டப்போகும் சொர்க்கமே தீர்வு
என்ற மதங்களின் போலித் தீர்வை நிராகரித்தவர்
புத்தர். புத்தரைப் போன்று ஆதிசங்கரர் மக்களின்
துன்பத்திற்குக் காரணம் என்ன என்று
சிந்திக்கவில்லை. மிகவும் வசதியாக புறவுலகையே
நிராகரித்ததன்  மூலம், உலகியல் பிரச்சினைகளுக்கு
தீர்வு காணும் நெருக்கடியில் இருந்து  தப்பித்துக்
கொண்டவர் ஆதிசங்கரர். ஆக, அத்வைதம் ஒரு
நழுவல்வாதத் தத்துவம் (philosophy of escapism).

எனவே இந்திய ஆளும் வர்க்கங்களின் கரங்களில்
அத்வைதம் ஒரு வாளாகச் சுழலும் என்ற
கற்பனையெல்லாம் குட்டி முதலாளித்துவ
விடலைகளின் சுயஇன்பமே தவிர வேறல்ல.

பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் கிறிஸ்துவ மதப்
பரப்பலுக்கு எதிராக அத்வைதத்தை விவேகானந்தர்
பயன்படுத்தியபோதும், அதை ஒரு கேடயமாகத்தான்
பயன்படுத்தினாரே தவிர, அதை வாளாகப்
பயன்படுத்தவில்லை; பயன்படுத்தவும் முடியாது.
ஏனெனில் அத்வைதம் தற்காப்புக்குப் பயன்படும்
தன்மை கொண்டதே தவிர, தாக்குதலுக்குப்
பயன்படும் தன்மை கொண்டதல்ல என்று உணர்ந்து
இருந்தார் விவேகானந்தர்.

எனவே அத்வைதத்தால் மார்க்சியத்துக்கு ஆபத்து
என்பதெல்லாம் இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய
நகைச்சுவை.

அப்படியானால், மார்க்சியத்துக்கு ஆபத்து விளைக்க
வல்ல சக்தி எது? பல சக்திகள் இருக்கின்றன.
அவற்றுள் பிரதானமானது .பின்நவீனத்துவம்.
அத்வைதம் ஆன்மிகம் என்ற ஒரே ஒரு துறையுடன்
நின்று போகிறது. ஆனால் பின்நவீனத்துவம்
மார்க்சியம் தலையிட்ட அத்தனை துறைகளிலும்
தானும் நுழைந்திருக்கிறது. அரசியல், பொருளாதாரம்,
அறிவியல், மருத்துவம், கலை, இலக்கியம், பண்பாடு
என்று வாழ்வியலின் அனைத்துத் துறைகளிலும்
மார்க்சியத்துடன் மல்லுக்கு நிற்கிறது பின்நவீனத்துவம்.

வியட்நாம் போர் போன்று போர் மூலம் மார்க்சியத்தை
வெற்றி கொள்வது என்ற செயல் தந்திரத்தை தற்போது
மாற்றிக் கொண்டுள்ளது ஏகாதிபத்தியம். மாறாக,
உலகெங்கும் NGO அமைப்புகள் என்னும் தன்னார்வக்
குழுக்களைத் தோற்றுவித்து, அவற்றுக்கு நிதியைக்
கொட்டிக் குவித்து, மூன்றாம் உலக நாடுகளில்
மார்க்சியத்துக்கு எதிராகச் செயல்படுவதே
ஏகாதிபத்தியத்தின் இன்றைய செயல்தந்திரம்.

விடுதலை இறையியல் (Liberation Theology) என்ற புதிய
தத்துவத்தை உருவாக்கி, லத்தீன் அமெரிக்க நாடுகளில்
மார்க்சியத்தை முறியடிக்க இன்றும் செயல்பட்டுக்
கொண்டிருக்கிறது ஏகாதிபத்தியம்.

ஆக, இவை போன்ற அபாயங்களைத்தான் இன்று
மார்க்சியம் களத்தில் சந்திக்க வேண்டி இருக்கிறதே
தவிர, அத்வைதத்தை அல்ல.

அத்வைதத்தை எதிரியாகச் சுட்டுவதன் மூலம்,
மெய்யான எதிரிகளை கண் பார்வையில் இருந்து
மறைக்க முயற்சி செய்வதும் ஒரு தந்திரமே.

இதுவரை கூறியவற்றால், அத்வைதம்
மார்க்சியத்துக்கு இணக்கமானது என்று எவரும்
புரிந்து கொள்ளக் கூடாது. பொருள்முதல்வாதத்திற்கு
நேர் எதிரானது அத்வைதம். என்றாலும் அத்வைதத்தின்
தத்துவ உள்ளடக்கம் பொருள்முதல்வாதத்தால்
என்றோ முறியடிக்கப் பட்டு விட்டது. எனவே
செத்த பாம்பை ஏன் மீண்டும் அடிக்க வேண்டும்?
******************************************************      
    
      

    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக