சனி, 1 ஆகஸ்ட், 2015

முதுகெலும்பை முறிக்கும் பதில்-2
------------------------------------------------------------
அணுகுண்டுகளும் அப்துல் கலாமும் 
அணு ஆயுதம் குறித்த மார்க்சியப் பார்வையும்!
------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம் 
-------------------------------------------------------------------------------
இரண்டாம் உலகப்போர் (1939-1945) தொடங்குவதற்கு 
முன்பாகவே, 1938 டிசம்பரிலேயே அணுக்கருப்பிளவு
(nuclear fission) என்பதைக் கண்டு பிடித்து இருந்தனர் 
ஜெர்மன் விஞ்ஞானிகள். இதை தொடர்ந்து ஜெர்மன் 
விஞ்ஞானிகளை அணுகுண்டு தயாரிக்கும்படி கட்டளை 
இட்டார் ஹிட்லர். அதற்கான வேலைகளை ஜெர்மன் 
விஞ்ஞானிகள் தொடங்கி இருந்தனர்.
**
இந்தத் தகவலை அறிந்து அதிர்ச்சி அடைந்த ஐன்ஸ்டின்
அப்போதைய அமெரிக்க அதிபர் ரூஸ்வெல்ட்க்கு ஒரு கடிதம் 
எழுதுகிறார். இக்கடிதம் ஆகஸ்ட் 2, 1939 இல் எழுதப் பட்டது.
போர்வெறி பிடித்த ஜெர்மன் நாஜிகளிடம் இருந்து மனித 
குலத்தைக் காப்பாற்ற வேண்டும் என்றால், ஜெர்மனியை 
முந்திக் கொண்டு, நாம் அணுகுண்டு தயாரிக்க வேண்டும் 
என்ற ஐன்ஸ்டினின் கருத்தை ஏற்றுக் கொண்ட ரூஸ்வெல்ட் 
அதற்கான முயற்சிகளைத் தொடங்குகிறார். இவ்வாறுதான் 
மன்ஹாட்டன் திட்டம் தொடங்கியது. அணுகுண்டு தயாரிக்கப் 
பட்டு ஜப்பான் மீது போடப்பட்டது. ஜெர்மனி வீழ்ந்தது. உலகப் 
போர் முடிவடைந்தது.
**
இரண்டாம் உலகப் போர் முடிந்தாலும் உலக சமாதானம் 
வந்து விடவில்லை. அமெரிக்க-சோவியத் பனிப்போர் தொடங்கி 
விட்டது. எனவே, சோவியத் விஞ்ஞானிகளை அழைத்து 
அணுகுண்டு தயாரிக்கச் சொல்லிக் கட்டளை இடுகிறார் 
ஸ்டாலின். சோவியத் ஒன்றியம் அணுகுண்டுகளையும் 
ஹைட்ரஜன் குண்டுகளையும் தயாரிக்கிறது.
**
தொடர்ந்து சீனாவும் அணுகுண்டு-ஹைட்ரஜன் குண்டுகளைத் 
தயாரிக்கிறது.மாவோ சீனாவை அணு ஆயுத வல்லரசாக 
மாற்றுகிறார்.
**
இதே போலத்தான் இந்தியாவும் அணுகுண்டுகளைத் 
தயாரிக்கிறது. இத்தயாரிப்பின் இரண்டாம் கட்டத்தில்,
பொக்ரான்-2 அணுவெடிப்புச் சோதனை மூலம் அப்துல் 
கலாம் இதில் பங்கு கொள்கிறார். சோவியத் ஒன்றியத்தில் 
அணுகுண்டுத் தயாரிப்பில் பங்கேற்ற விஞ்ஞானிகளை 
சோஷலிச நாயகர்கள் விருது வழங்கி கௌரவிக்கிறார் 
ஸ்டாலின். இந்தியச் சூழலில் இதே போன்ற கௌரவத்துக்கு
அருகதை வாய்ந்தவர் அப்துல் கலாம்.
**
அணுகுண்டுகளைத் தயாரித்த காரணத்தால் ஸ்டாலினும் 
மாவோவும் மனிதகுல எதிரிகள் ஆகி விடுவார்களா?
அப்படிக் கருதுவது எப்பேர்ப்பட்ட மூடத்தனம்!
**
எதிரி அணுகுண்டை வைத்திருக்கும்போது, நாம் 
அரிவாளையும் வேல்கம்பையும் வைத்துக் கொண்டா 
எதிர்க்க முடியும்? நமது ஆயுதங்கள் என்ன என்பதை 
நமது எதிரிதான் தீர்மானிக்கிறான். எனவே ஐன்ஸ்டின் 
முதல் அப்துல் கலாம் வரை அணுகுண்டு தயாரித்தவர்கள் 
மனித குலத்தைப் பாதுகாக்கவே அதைச் செய்தார்கள் 
என்பதை வரலாறு நிரூபித்துள்ளது.
**
இதன் மூலம் குட்டி முதலாளித்துவக் குற்றச்சாட்டுக்கள் 
முனை முறிகின்றன.
************************************************************ 


   
     
    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக