செவ்வாய், 4 ஆகஸ்ட், 2015

குடிப்பது தமிழ் மரபு; மது அருந்துவது தமிழர் பண்பாடு.
அதியமானும் அவ்வையாரும் குடித்தனர் என்று சங்க 
இலக்கியங்கள் காட்டுகின்றன. இவ்வாறு எழுதுகிறார்
பேராசிரியர் அ மார்க்ஸ். (The Hindu, 04.08.2015)
**
தமிழ் மரபில் குடி இருந்தது உண்மையே. 
"சிறிய கள் பெறினே எமக்கீயும் மன்னே" என்று அவ்வையார் 
புறநானூற்றில் எழுதி இருப்பதும் உண்மையே. சங்க காலத் 
தமிழர் வாழ்வியலில் கள் (மது) இடம் பெற்று இருந்ததும் 
உண்மையே.
**
அதற்குக் காரணம் என்ன? ஏன் சங்கத் தமிழர்கள் குடித்தனர்?
இதற்கு விடை தெரிய, 'நெடுநல்வாடை'யைப் படிக்க வேண்டும்.
நெடுநல்வாடை சங்க இலக்கியங்களில் ஒன்று. நக்கீரர் 
இயற்றியது. சங்க காலத்தில், அதாவது சற்றேறக் குறைய 
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, தமிழ்நாட்டில் 
நிலவிய குளிர் எவ்வளவு தீவிரமாக இருந்தது என்பதையும் 
வாடைக்காற்றின் வீரியத்தையும், உள்ளது உள்ளவாறே,
இயல்பு நவிற்சியுடன் பதிவு செய்து வைத்திருக்கும் ஒரு 
நூல்தான் நெடுநல்வாடை.
**
பள்ளி மாணவர்களுக்கு நெடுநல்வாடை (குளிர் பற்றிய சில 
பகுதிகள்) பாடமாக வைக்கப் பட்டுள்ளது. பாடப் 
புத்தகங்களிலும், பாடப் புத்தகங்களை விட மாணவர்கள் 
அதிகம் படிக்கும் கோனார் நோட்சிலும்  ஒரு எச்சரிக்கைக் 
குறிப்பும் இருக்கும். அது இதுதான்.
" இந்நூலில் நக்கீரர் வர்ணிக்கும் குளிர் இன்றைய தமிழ்நாட்டில்
எங்கும் கிடையாது"
**
சங்க காலத்தில், ஓராண்டில் இளவேனில், முதுவேனில் 
காலம் தவிர, மீதியுள்ள எட்டு  மாதங்களும் (கார், கூதிர், 
முன்பனி, பின்பனி) குளிர் நிரம்பிய மாதங்களே. எனவே 
சங்க காலத் தமிழர்கள் குளிரை விரட்டக் குடித்தனர்.
மனிதர்களின் பழக்க வழக்கங்கள் தட்பவெப்ப நிலையை 
ஒட்டி எழுபவை. இவ்வாறு எழுவதுதான் இயற்கையோடு 
இயைந்த வாழ்வு.எனவே அன்று குடிப்பழக்கம் இருந்தது.
அதற்கான தட்பவெப்ப நியாயம் இருந்தது.
**
இன்று, இரண்டாயிரம் ஆண்டுகளில், தமிழ்நாட்டின் 
தட்பவெப்பம் தலைகீழாக மாறியுள்ளது. பசும்புல்தரையைப் 
பார்க்கக் கொடுத்துவைக்கவில்லை. எங்கு நோக்கினும் 
கான்கிரீட் காடுகள். பெய்த மழைநீர் பூமிக்குள் செல்ல 
வழியில்லை. இன்ன பிற. இதன் விளைவாக, தமிழ்நாட்டின் 
தட்பவெப்பம் இன்று HOT, HOTTER, HOTTEST என்று மாறிப் 
போய் விட்டது. எனவே, குடிப்பதற்கான நியாயம் எங்கு 
இருக்கிறது?
**
சங்ககாலத் தமிழகத்தின் குளிர் மிகுந்த பகுதிகள், கேரளம் 
என்றும் கர்நாடகம் என்றும் வேற்று மாநிலங்களாகப் 
பிரிந்து விட்டன. இதன் பிறகு தமிழ்நாட்டில் எஞ்சி நிற்பது 
வெம்மை, வெம்மை,வெம்மை மட்டுமே.
**
எனவே குடிப்பதற்கான நியாயம் (Reason based on nature)
எங்கே இருக்கிறது இன்று? 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக