வியாழன், 13 ஆகஸ்ட், 2015

சிலை திருடிய திரைப்பட இயக்குனர்!
தேசிய இன வாதம் ஒரு குட்டிமுதலாளித்துவத் தத்துவமே!
மார்க்சியம் மட்டுமே தேசிய இன விடுதலையைப் பெற்றுத் தரும்!
-------------------------------------------------------------------------------------------------------
பல ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற நிகழ்வு அது.
மதிப்பிற்குரிய திரு நா அருணாசலம் அவர்கள் மனிதச் 
சங்கிலிப் போராட்டம் ஒன்றை அறிவித்து இருந்தார்.
நான்கு தமிழர்களின் மரண தண்டனையை ரத்து செய்யக் 
கோரி அந்த மனிதச் சங்கிலி நடைபெற்றது. நளினியின் 
மரண தண்டனை கூட ரத்து செய்யப்படாத காலம் அது.
**
எனது தொழிற்சங்கத் தோழர்களைப் பெருமளவில் திரட்டிக் 
கொண்டு மனிதச் சங்கிலியில் பங்கேற்குமாறு அருணாசலம் 
அய்யா அவர்கள் என்னிடம் கோரி இருந்தார். (நான் அப்போது
NFTE E-3 சங்கத்தின், மத்திய அரசு தொலைதொடர்புத்துறை,
சென்னை மாவட்டச் செயலாளராக இருந்தேன்.)
**
சென்னை பாரிமுனையில் உயர்நீதிமன்றம் அமைந்திருக்கும் 
NSC போஸ் சாலையில் எங்கள் தோழர்களுடன் நான் 
நின்று இருந்தேன். அப்போது எனக்கு இடதுபுறமாக என் 
கையைப் பிடித்துக் கொண்டு நின்று இருந்தவரைச் சுட்டிக் 
காட்டி, இவர்தான் திரைப்பட இயக்குனர் வி.சேகர் என்று 
என்னிடம் தோழர்கள் தெரிவித்தார்கள்.
**
அவரைப் பற்றி ஒன்றுமே தெரியாதவன் நான். விசுவைப் 
போல் குடும்பப் பாங்கான படங்களைக் குறைந்த செலவில் 
எடுக்கக் கூடியவர் என்று தோழர்கள் என்னிடம் தெரிவித்தனர்.
தமிழ் தேசிய உணர்வாளர் என்பதால் அவர் மீது மெலிதான 
ஒரு மரியாதை ஏற்பட்டது. 
**
இன்று, பல ஆண்டுகளுக்குப் பிறகு, சிலைத் திருட்டு வழக்கில் 
திரு வி சேகர் கைதாகி புழல் சிறையில் அடைக்கப் பட்டுள்ளார் 
என்ற செய்தி கேட்டு, நான் அதிர்ச்சி அடையவில்லை.
**
ஏனெனில், குட்டி முதலாளித்துவத் தத்துவங்களுக்கு 
வாழ்க்கைப் பட்டவர்களிடம் அறமோ சுய ஒழுக்கமோ 
இருப்பதில்லை. தங்கள் அணிகளை அறம் சார்ந்தும்
சுய ஒழுக்கத்துடனும் வளர்த்தெடுக்க வேண்டும் என்ற 
கோட்பாடே எந்த ஒரு குட்டி முதலாளித்துவத் 
தத்துவத்திலும் கிடையாது. அணிகளை வளர்த்தெடுப்பதில் 
ஒரு விதமான தாராளவாதத்தை (Liberalism) இத்தத்துவங்கள் 
கடைப்பிடிக்கும்.
**
கம்யூனிஸ்ட்டுகள் தனியொரு பொருளால் வார்க்கப் 
பட்டவர்கள் என்பார் ஸ்டாலின். சாதாரண மனிதனாக 
இருக்கும் ஒருவன், கம்யூனிஸ்டாக ஆகும்போது,
பெருமளவிலான பண்பு மாற்றத்தை அடைந்து இருப்பான்.
உண்மையில், ஒரு சாதாரண மனிதன் கம்யூனிஸ்டாக 
மாறுவது என்பது ஒரு பரிணாம வளர்ச்சியே (evolution).
**
மாக்சிம் கார்க்கி தம்முடைய தாய் நாவலில் இதை 
மிகவும் அழகாகச் சொல்லி இருப்பார். சாதாரணமான 
ஓர் ஆலைத் தொழிலாளி எங்ஙனம் ஒரு கம்யூனிஸ்டாக 
பரிணமிக்கிறான் என்பதை மிகவும் தத்ரூபமாக 
விவரித்து இருப்பார்.
**
ஆனால், குட்டி முதலாளித்துவத் தத்துவங்கள் இவ்வாறு 
தங்கள் அணிகளை வார்ப்பதும் இல்லை; வளர்ப்பதும் 
இல்லை. "ஒருவருடைய தனிப்பட்ட பண்பு நலன்களைப் 
பார்க்காதீர்கள்; எடுத்துக் கொண்ட விஷயத்தில், மன்னிக்கவும் 
விடயத்தில், அவருடைய ஈடுபாட்டை மட்டும் பாருங்கள்"
என்பதே குட்டி முதலாளித்துவ சித்தாந்தவாதிகளின் 
நடைமுறை; கோட்பாடும் அதுதான்.
**
எனவேதான், பல்வேறு குட்டி முதலாளித்துவ அமைப்புகளின் 
அணிகள் தலைவர்கள் போன்றோர் எல்லாம், பண்பாட்டுச் 
சீரழிவின் சின்னங்களாக வலம் வருவதை நாம் காண 
முடிகிறது. சிலை திருடிச் சிறை சென்று இருக்கிற வி சேகர் 
முதல், கற்பழிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சீமான் 
வரை, எல்லா விதமான குட்டி முதலாளித்துவ அற்பர்களும் 
குற்ற உணர்வோ நாணமோ சிறிதுமின்றி, பெருமிதத்துடன் 
தலைவர்களாக உலா வர முடிகிறது.
**
குட்டி முதலாளித்துவத் தத்துவங்களைப் புறக்கணிப்போம்!
மார்க்சியத்தைக் கைக்கொள்ளுவோம்!!
--------------------------------------------------------------------------------------------
பின்குறிப்பு: இக்கட்டுரையில் கூறப்பட்டுள்ள வரையறைகள் 
தா பாண்டியன் போன்ற போலிக் கம்யூனிஸ்டுகளுக்குப்
பொருந்தாது.
***********************************************************************   
    

              

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக