சனி, 22 ஆகஸ்ட், 2015

மூடத்தனமான ஆங்கில எதிர்ப்பு 
தமிழ் மீதான அக்கறையைக் காட்டாது!
----------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம் 
----------------------------------------------------------------------------
உலகத்தையே புரட்டிப் போட்ட, 'தாஸ் காபிடல்' நூலை 
காரல் மார்க்ஸ் ஜெர்மானிய மொழியில் எழுதினார்.
உலகின் தலைசிறந்த அறிவுச் செல்வங்கள் யாவும் 
ஜெர்மன் மொழியில் இருந்தன. எனவே தாஸ் காபிடல் 
போன்ற மகத்தான நூல்களை எழுத முடியும் அளவுக்கு 
ஜெர்மானிய மொழி வல்லமை வாய்ந்த மொழியாக 
இருந்தது.
**
கலை, இலக்கியம், தத்துவம், அறிவியல் ஆகிய துறைகளில் 
தலைசிறந்த நூல்கள் பிரெஞ்சு மொழியில் எழுதப் பட்டன.
அத்தகைய நூல்களை எழுத முடியும் அளவுக்கு, வளர்ச்சி 
அடைந்த மொழியாக பிரெஞ்சு மொழி இருந்தது.
**
மகத்தான தமது படைப்புகளை, லெனின் ரஷ்ய மொழியில்
எழுதினார். பல்துறை சார்ந்த தலைசிறந்த நூல்களை  எழுத 
முடியும் அளவுக்கு ரஷ்ய மொழி வளர்ச்சி அடைந்த 
மொழியாக இருந்தது.
**
ஆக, ஜெர்மனி, பிரெஞ்சு, ரஷ்ய மொழிகள், பிற மொழிகளின் 
துணையின்றி, தனித்து இயங்க வல்லவை. சமகாலத்தின் 
அறிவியலையும் எதிர்காலத்தின் அறிவியலையும் தங்கள் 
மொழியில் சொல்ல வல்லவை. இவை உதாரணங்கள் 
மட்டுமே. வேறு பல மொழிகளும் இவற்றைப் போலவே 
தனித்து இயங்க வல்லவை.
**   
எனவே, ஒரு ஜெர்மானியனோ, பிரெஞ்சுக்காரனோ, ரஷ்யனோ 
ஆங்கிலம் வேண்டாம் என்று கூற முடியும். ஆங்கிலத்தை 
நம்பியோ, அதன் தயவிலோ அவர்கள் இல்லை. ஆனால்,
தமிழ் உள்ளிட்ட எந்தவொரு இந்திய மொழியும் ஆங்கிலம் 
வேண்டாம் என்று கூற முடியாது.
**
இந்திய மொழிகளின் அறிவுலகம் மிகப் பெரிதும் அல்லது 
முற்றிலுமாக ஆங்கிலத்தைச் சார்ந்து இருக்கிறது. 
காலந்தோறும் உலகில் திரண்டு வரும் அறிவுச் செல்வத்தை 
ஆங்கிலம் இல்லாமல் பெற முடியாது என்ற நிலையில் 
தமிழ் உள்ளது. மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி,
மராத்தி, வங்காளி உள்ளிட்ட எல்லா இந்திய மொழிகளுமே  
தமிழைப்போல் கையறுநிலையில்தான் உள்ளன.
**
தமிழனுக்கு ஆங்கிலம் வேண்டாம் என்றே வைத்துக் 
கொள்வோம். அப்படியானால், தமிழன் வேறு எந்த 
மொழியின் மூலம் உலகைத் தொடர்பு கொள்ள முடியும்?
செம்மொழியான சமஸ்கிருதம் அதற்கு உதவுமா?
ஒருகாலும் உதவாது. ஏனெனில், சமஸ்கிருதம் வழக்கு 
வீழ்ந்த மொழி. இந்தியாவின் பண்டைய அறிவியல் 
சமஸ்கிருதத்தில் இருக்கிறது. ஆனால், நவீன அறிவியலின் 
ஒரு துளியைக்கூடத் தன்னிடத்தில் கொண்டிராத 
சமஸ்கிருதமானது, உலகின் அறிவியலுடன் தொடர்பு 
கொள்ள தமிழனுக்குப் பயன்படாது.
**
சரி, ஆங்கிலமும் வேண்டாம், சமஸ்கிருதமும் வேண்டாம் 
என்றால், தமிழனுக்கு (அல்லது மலையாளிக்கு, வங்காளிக்கு,
இந்திக்காரனுக்கு) வேறு எந்த அந்நிய மொழி தெரியும்?
ஜெர்மன் தெரியுமா? பிரெஞ்சு தெரியுமா? ரஷ்யமொழி 
தெரியுமா? இந்தியர்கள் அனைவருக்கும் தெரிந்த ஒரே 
அந்நியமொழி ஆங்கிலம் மட்டும்தான். வேறெந்த ஐரோப்பிய 
மொழிகளையும் விட, ஆங்கிலமே இந்திய மொழிகளைப்  
பேசும் மக்களுடன் நெருக்கமும் உறவும் கொண்டது.
இந்தி பேசாத மக்கள் ஏற்றுக் கொள்ளும் வரை ஆங்கிலமே 
இந்தியாவின் இணைப்பு மொழியாக இருக்கும் என்பதுதானே 
நேருவின் புகழ்பெற்ற உறுதிமொழி!
**
நிலைமை இவ்வாறு இருக்க, பல போலித் தமிழ்ப்பற்றாளர்கள்  
மூடத்தனமான ஆங்கில எதிர்ப்பைக் கைக்கொண்டு 
வருகிறார்கள். வடபுலத்திலும் முலாயம் சிங் முதல் 
பல்வேறு பாஜகவினர் வரை, அர்த்தமற்ற ஆங்கில எதிர்ப்பைக் 
கைக்கொண்டு வருகின்றனர்.
**
இத்தகைய எதிர்ப்பால் தமிழுக்கோ அல்லது இந்திக்கோ 
எந்த நன்மையும் விளைந்து விடாது. தமிழ் தமிழர்களின் 
தாய்மொழி; தமிழ்நாட்டின் மொழி. தமிழர் வாழ்வில் 
தமிழுக்கென்று ஒரு பாத்திரம் உண்டு. அது  போலவே 
ஆங்கிலத்திற்கும் ஒரு பாத்திரம் உண்டு. ஒன்றின் 
பணியில் மற்றொன்று குறுக்கிடலாகாது. இவ்வாறு 
குறுக்கிடாமல் பார்த்துக் கொள்வதுதான் மொழிப் 
பற்றாளர்களின் பணியே அன்றி, முட்டாள்தனமாக 
ஆங்கிலத்தை எதிர்ப்பது அல்ல.
------------------------------------------------------------------------------------------
இக்கட்டுரை ஒரே பீடிகை மட்டுமே. மேலும் தொடரும்!
-------------------------------------------------------------------------------------------        

  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக