ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2015

(2) தொன்மையும் நவீனமும்!
பிறந்த தேதி இல்லாத தமிழ்!
----------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
--------------------------------------------------------
உலகில் தோன்றிய எல்லா மொழிகளுக்கும் பிறந்த தேதி
உண்டு. ஆனால் தமிழுக்கு மட்டும் பிறந்த தேதி என்பது
கிடையாது. அதாவது அவ்வளவு தொன்மையானது தமிழ்.
இதோ பாரதியார் கூறுவதைக் கேளுங்கள்:
**
"தொன்று நிகழ்ந்தது அனைத்தும் உணர்ந்திடும்
சூழ்கலை வாணர்களும்- இவள்
என்று பிறந்தனள் என்றுணராத
இயல்பினளாம் எங்கள் தாய்." 
**
தமிழின் தொன்மை அளவிட முடியாதது. மனித இனம்
முதன் முதலில் பேசிய மொழி தமிழே. பின்னர்தான்
பிற மொழிகள் உருவாயின. உயர்தனிச் செம்மொழிகள்
யாவிலும் மூத்த மொழி தமிழே; தமிழ் மட்டுமே.
**
தமிழ் தொன்மையான மொழி என்று சொல்லும்போது,
அவ்வாறு கூறுவதானது, கூடவே இன்னொரு பொருளையும்
தருகிறது. அது என்ன? தமிழ் நவீன மொழி அல்ல
என்பதுதான் அது.
**
தொன்மையும் நவீனமும் ஒன்றுக்கு ஒன்று எதிரானவை.
தொன்மையான மொழியானது நவீனமான மொழியாக
இருக்க முடியாது. அது போலவே, நவீனமான மொழியானது
தொன்மையானதாக இருக்க முடியாது. ஆக, தமிழ்
தொன்மையான மொழி என்று உரத்துச் சொல்லும்போது,
தமிழ் நவீன மொழி அல்ல என்றுதான் பொருள்படுகிறது.
**
நிலவுடைமைச் சமூகத்துக்கு முந்திய காலத்திலேயே
தமிழ் தோன்றி விட்டது (pre-feudal era). நிலவுடைமைச்
சமூக காலத்தில் (during feudal era) தமிழ், வளர்ச்சியும்
உச்சமும் பெற்றது. வேர்ச்சொல் வளம், இலக்கிய வளம்,
இலக்கண வளம் யாவும் அளவின்றிப் பெற்றது.
**
சமூகம் தொடர்ந்து இயங்கிக் கொண்டே இருக்கிறது;
அவ்வாறு இயங்கும்போது மாறிக் கொண்டே இருக்கிறது.
தொல்காப்பியர் காலத்து உற்பத்தி முறை இன்று கிடையாது.
சமகால உற்பத்தி முறையில் இடம் பெறுகிற மொழிதான்
உயிர்வாழ முடியும். இடம்பெறாத, இடம் பெற இயலாத
மொழி அழிந்துபடும். இது மொழிகளின் இயக்கம் பற்றிய
மார்க்சிய விதி.
**
நிலவுடைமைச் சமூகம் மாறி, முதலாளியச் சமூகம்
தோன்றி ஆண்டுகள் பல கடந்து விட்டன. முதலாளியமும்
அதன் உயர்ந்த கட்டமான ஏகாதிபத்தியக் கட்டத்தை
உலகில் இருபதாம் நூற்றாண்டில் அடைந்து விட்டது
என்றார் லெனின். இந்த 2015இல் நாம், post feudal,
post imperial காலக்கட்டத்தில் வாழ்கிறோம். இதைத்தான்
சமகால உலகம், நவீன உலகம் (contemporary world, modern world)
என்று கூறுகிறோம்.
**
சமகால உலகின் மொழியாக, நவீன உலகின் மொழியாக
தமிழ் இருக்கிறதா என்றால் இல்லை என்பது தெளிவு.
ஏனெனில், தமிழ் தொன்மையானதே தவிர, நவீனமானது
அல்ல. சமகால உற்பத்தி முறையில் தமிழுக்கு எந்தப்
பாத்திரமும் இல்லை. சமகால உற்பத்தி முறையில்
இருந்து, தமிழ் முற்றிலுமாக விலகி, அன்னியப் பட்டு
நிற்கிறது.
**
ஒரு மொழியானது உயிருடன் இருக்க வேண்டும் என்றால்,
அதற்கான முக்கியமான நிபந்தனை என்ன? அந்த மொழி
உற்பத்தி முறையில் பங்கு பெற்று இருக்க வேண்டும்
என்பதே அந்த நிபந்தனை. தமிழால் இந்த நிபந்தனையை
நிறைவு செய்ய இயலவில்லை என்பதுதான் வருந்தத்தக்க
உண்மை.
**
உற்பத்தியில் ஈடுபடாத மொழிகள் அழிவது திண்ணம்.
இதுவே இயற்கையின் நியதி. இதைத்தான் ஐ.நா.வின்
அறிக்கையும் கூறுகிறது. இந்த நூற்றாண்டின் இறுதிக்குள்,
இன்று பேசப்பட்டு வரும் பல மொழிகள் அழிந்து விடும்
என்று ஐ.நா.வின் அறிக்கை கூறுகிறது. அவ்வாறு அழியப்
போகும் மொழிகளின் பட்டியலில் தமிழும் இருக்கிறது
என்பது நம் நெஞ்சைப் பிழியும் செய்தி.    
**
ஐ.நாவின் அறிக்கையைப் படித்துப் பார்த்துத் துயரில்
ஆழ்ந்தனர் பலர். குமரி ஆனந்தனும் கவிஞர் வைரமுத்துவும்
அவர்களுள்  குறிப்பிடத் தகுந்தவர்கள். "எதிர்காலத்தில் தமிழ்
என்பது குடும்ப அளவில் குடும்ப உறுப்பினர்கள் மட்டும்
பேசிக் கொள்ளும் மொழியாக மட்டும் இருக்கும்" என்று
கண்ணீருடன் தெரிவித்தார் வைரமுத்து. இதுதான் உண்மை.
*************************************************************
   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக