மூடப்பட்ட அணு உலைகள் திறக்கப் பட்டன!
ஜப்பானில் செண்டாய் அணு உலை மீண்டும் திறப்பு!
----------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-------------------------------------------------------------------------------------
2011 மார்ச்சில் நிகழ்ந்த புகுஷிமா அணு உலை விபத்துக்குப்
பின்னர், ஜப்பானில் உள்ள எல்லா அணு உலைகளும்
ஒன்றன்பின் ஒன்றாக மூடப் பட்டன. அது மூடுவிழாக் காலம்.
தற்போது மூடப்பட்ட அணு உலைகள் ஒன்றன்பின் ஒன்றாகத்
திறக்கப்பட உள்ளன. இது திறப்புவிழாக் காலம்.
**
மேற்கு ஜப்பானில் உள்ள செண்டாய் அணு உலையின்
முதலாவது யூனிட் (first reactor of Sendai plant) ஆகஸ்ட் 11, 2015
அன்று திறக்கப் பட்டு இயங்கி வருகிறது. ஜப்பானில்
இயற்றப் பட்டுள்ள புதிய பாதுகாப்பு விதிகளின்படி, செண்டாய்
அணு உலையில் நூறு மில்லியன் டாலர் செலவில்
(600 கோடி ரூபாய்) நவீனப் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்
பட்டுள்ளன என்று ஜப்பான் பிரதமர் சின்சோ ஏப் (Shinzo Abe)
தெரிவித்தார். இந்த அணுஉலையை குயுஷு எலெக்ட்ரிக் பவர்
கார்ப்பொரேஷன் என்ற நிறுவனம் பராமரித்து வருகிறது.
**
செண்டாய் அணு உலையின் இரண்டாவது யூனிட் அக்டோபர்
2015இல் இயங்கத் தொடங்கும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது.
மூடப்பட்ட 25 அணு உலைகளை மீண்டும் திறக்க அனுமதி
கோரி தொடர்புடைய நிறுவனங்கள் விண்ணப்பித்து உள்ளன.
**
மீண்டும் அணு உலைகளைத் திறக்கும் அரசின் திட்டத்துக்கு
ஜப்பானில் எதிர்ப்பு இல்லாமல் இல்லை. சில தீவிர
வலதுசாரிகளும், அமெரிக்க ஆதரவாளர்களும் அணு உலை
எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நடத்தி உள்ளனர். இதுபோன்ற
ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஜப்பானின் முன்னாள் பிரதமர்
நவோட்டோ கென் (Naoto Kan) பங்கேற்று உள்ளார். இவர்தான்
புகுஷிமா பூகம்பம் சுனாமியின்போது பிரதமராக இருந்தவர்.
**
அணு உலையை மீண்டும் திறக்கும் நிகழ்வில் வெளிப்படைத்
தன்மையை (transparency) கடைப்பிடித்தது ஜப்பான். வெளிநாட்டுப்
பத்திரிகையாளர்கள் இதைக் காண அனுமதிக்கப் பட்டனர்.
BBC நிறுவனத்தின் டோக்கியோ செய்தியாளர் செண்டாய்
அணு உலையின் கட்டுப்பாட்டு அறையினுள் அனுமதிக்கப்
பட்டார். இது பாராட்டத் தக்கது.
**
ஆக மொத்தத்தில்,
அன்று மூடினார்கள்!
இன்று திறக்கிறார்கள்!!
************************************************************************
தகவல் ஆதாரம்: BBC NEWS dtd 11 August 2015, Asia
-------------------------------------------------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக