திங்கள், 24 ஆகஸ்ட், 2015

 தமிழில் பொறியியல் கல்வியை சாத்தியமாக்கிய கலைஞர்!
---------------------------------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம் 
-------------------------------------------------------------------------------------------------------------
முச்சந்தியில் நின்று கொண்டு தமிழ் வாழ்க என்று கூச்சல் 
இடுவதாலோ தமிழ் தேசியம் வெல்லட்டும் என்று முழக்கம் 
இடுவதாலோ தமிழ் வாழ்ந்து விடாது. தமிழ் வாழ வேண்டும் 
என்றால் தமிழ் அறிவியல் மொழியாக வேண்டும். சமூகத்தின் 
பொருள் உற்பத்தியில் தமிழ் இடம் பெற்றால் மட்டுமே, 
அது வாழும்; இல்லையேல் மாளும்!

தமிழை அறிவியல் மொழியாக்கும் முயற்சி என்றாவது 
நடைபெற்றதா? நடைபெற்றது என்றால்,
எப்போது, யாரால் அந்த முயற்சி மேற்கொள்ளப் பட்டது?
அந்த முயற்சியின் இன்றைய நிலை என்ன?  
இக் கேள்விகளுக்கு விடை காண்போம். 

தமிழ் அறிவியல் மொழியாதல் என்றால் என்ன? 
அறிவியலைத் தமிழில் படிக்க வேண்டும்; தமிழில் எழுத 
வேண்டும். தமிழ் அறிவியல் மொழியாதல் என்பதற்கான 
குறைந்தபட்சத் தகுதி இது.

தமிழை அறிவியல் மொழியாக்கும் ஒரு முயற்சி 
தமிழ்நாட்டில் 2010இல் நடைபெற்றது. அண்மைக்காலத்
தமிழின் வரலாற்றில் இது முதல் முயற்சி ஆகும். மிகவும் 
துணிகரமான முயற்சியும் கூட.

கலைஞர் முதல்வராக இருந்த போது, 2010ஆம் ஆண்டில் 
இதற்கான ஆணையைப் பிறப்பித்தார். அதன்படி, 2010-11
கல்வியாண்டில் இருந்து, நாட்டின் தலைசிறந்த 
தொழில்நுட்பப் பல்கலைகளில் ஒன்றான அண்ணா 
பல்கலையில் பொறியியல் மற்றும் தொழில்நுட்பப் 
படிப்புகள் தமிழ் வழியில் தொடங்கப்பட்டன. அதாவது,
BE, B.Tech படிப்புகள் தமிழ் மீடியத்தில் தொடங்கப் பட்டன).

சிவில் மற்றும் மெக்கானிகல் பிரிவுகளில், பிரிவுக்கு 
அறுபது பேர் வீதம் 120 பேர் அண்ணா  பல்கலையில்
தமிழ் வழி B.Tech படிப்பில் சேர்ந்தனர். தொடர்ந்து, 
திருக்குவளை அரசு பொறியியல் கல்லூரியில் B.E 
தமிழ் வழிப் படிப்பு தொடங்கப்பட்டது. 

மேலும், இதே கல்வியாண்டில் (2010-11),
திண்டிவனம், அரியலூர், திருச்சி, ராமநாதபுரம், பண்ருட்டி,
பட்டுக்கோட்டை, திண்டுக்கல், ஆரணி, தூத்துக்குடி,
நாகர்கோவில் ஆகிய அரசுப் பொறியியல் கல்லூரிகளிலும் 
தமிழ்வழிப் பொறியியல் படிப்புகள் தொடங்கப் பட்டன.
மொத்தம் 400 மாணவ மாணவியர் தமிழ்வழிப் 
பொறியியல் படிக்கத் தொடங்கினர்.

ஆண்டுதோறும் சற்றேறக்குறைய ஒரு லட்சம் பொறியியல் 
இடங்கள் நிரம்புகின்றன. இவற்றில் 400 இடங்களில் மட்டுமே 
தமிழ் என்பது மிகச்சிறிய ஒரு தொடக்கம்தான் எனினும் 
மிகச் சரியான தொடக்கம். அரசுக் கல்லூரிகளைத் தொடர்ந்து 
தனியார் சுயநிதிக் கல்லூரிகளும் தமிழ்வழிப் பொறியியல் 
படிப்புகளைத் தொடங்க வேண்டும். இதற்கான அகக்
கட்டுமானம் (infrastructure) பெருக வேண்டும். அதாவது 
தமிழில் அறிவியல் நூல்கள் பேரளவில் எழுதப் படவேண்டும்.

தமிழை அறிவியல் மொழியாக்குவது என்பதை  அரசு 
மட்டுமே தனித்துச் செய்து விட முடியாது. ஊர்கூடித் 
தேர் இழுப்பது போல், மக்களும் தமிழறிஞகர்களும் 
பிற சமூக நிறுவனங்களும் தமக்குரிய பங்கை ஆற்ற வேண்டும்.

400 பேரைக் கொண்டு தமிழ்வழிப் பொறியியல் என்று 
நல்லதொரு தொடக்கத்தைச் செய்தார் கலைஞர்.
அதன் இன்றைய நிலை என்ன? அடுத்த ஆண்டே கலைஞர் 
ஆட்சியை இழந்தார். ஜெயலலிதா ஆண்டு வருகிறார்.
குப்பனும் சுப்பனும் துலுக்காணமும் படிக்கும் 
மாநகராட்சிப் பள்ளிகளிலேயே தமிழை நீக்கி விட்டு 
ஆங்கில வழிப் படிப்புகளைத் தொடங்கி விட்டார் 
ஜெயலலிதா.

இருப்பினும், தமிழ்தேசியப் போலிகள் நெடுமாறன் முதல் 
சீமான் வரை தமிழ் மீடியத்தை ஜெயலலிதா அழிப்பது 
பற்றி வாய் திறக்க மறுத்து, தமிழுக்குத் துரோகம்  
இழைத்து வருகிறார்கள்.
***************************************************************** 
    
              
  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக