புதன், 25 செப்டம்பர், 2019

காரல் மார்க்ஸ் இவர்களை மன்னிக்க மாட்டார்! 
-------------------------------------------------------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன் 
முன்னாள் மாவட்டச் செயலாளர் 
NFTE BSNL, சென்னை, தமிழ்நாடு. 
------------------------------------------------
இன்றைக்கு 50 ஆண்டுகளுக்கு முன்பு! ஆண்டு 1971.
தமிழக சட்டமன்றத் தேர்தல் நேரம். நெல்லை மாவட்டம்
அம்பாசமுத்திரம் தொகுதியில் தோழர் நல்லசிவன் (CPM)
போட்டி இடுகிறார்.

அவரை ஆதரித்துத் தேர்தல் பிரச்சாரம் செய்ய
வீரவநல்லூரில் இருந்து CITU தோழர்கள் சிலர்
செல்கின்றனர். அவர்கள் வீரவநல்லூரில் உள்ள
கோமதி மில்லில் வேலை பார்க்கும் தொழிலாளிகள்.
தூக்குச் சட்டியில் சோறு எடுத்துக் கொண்டு
மில்லுக்கு வேலைக்குப் போவதைப் போல
அவர்கள் செல்வதை எங்கள் தெருத் தலைமாட்டில்
நின்று கொண்டு நாங்கள் பார்த்தோம்.
அப்போது நான் மாணவன்.

ஐந்து நிமிடம் கழித்து இன்னொரு செட் தொழிலாளிகள்
அதே போல தூக்குச் சட்டியில் சோறு எடுத்துக் கொண்டு
தேர்தல் வேலைக்காக அம்பாசமுத்திரம் செல்வதை
நாங்கள் பார்த்தோம். இவர்களும் கோமதி மில்
தொழிலாளிகள்தாம். ஆனால் இவர்கள் AITUCயைச்
சேர்ந்தவர்கள்.

இவர்கள் தோழர் நல்லகண்ணுவை (CPI) ஆதரித்துப்
பிரச்சாரம் செய்யச் செல்கிறார்கள். தோழர் நல்லசிவனை
எதிர்த்து தோழர் நல்லகண்ணு போட்டியிடுகிறார்.

தேர்தல் பிரச்சாரம் என்றாலே தொண்டர்களுக்கு
பிரியாணி என்ற நுகர்வுக் கலாச்சாரம் அப்போது
கிடையாது. நுகர்வு மறுப்புக் கலாச்சாரம் நிலவிய
காலக்கட்டம் அது.

ஆண்டு 1972. கம்யூனிஸ்ட் கட்சி (CPI) தமிழகம் எங்கும்
நிலமீட்சிப் போராட்டத்தை நடத்துகிறது. நிலப்பறி
இயக்கம் என்று பத்திரிகைகள் இதை எழுதின.
கோமதி மில் தொழிலாளர்களான எங்கள்
வீரவநல்லூர் தோழர்கள் அன்றைய CPI மாவட்டச்
செயலாளர் தோழர் வி எஸ் காந்தி தலைமையில்
திருச்செந்தூரில் உள்ள தினத்தந்தி ஆதித்தனாரின்
தாதன்குளம் பண்ணையில் இறங்கி செங்கொடியை
நட்டார்கள். எல்லோரும் பாளையங்கோட்டைச்
சிறையில் அடைக்கப் பட்டனர்.

இதையொட்டி வீரவநல்லூரில் கம்யூனிஸ்ட் கட்சி
ஒரு சுவரெழுத்து இயக்கத்தை நடத்தியது. நிலமீட்சிக்
கைதிகளை விடுதலை செய் என்பது பிரதான முழக்கம்.
வீரவநல்லூர் முழுவதும் மேல பஜாரிலும் கீழ பஜாரிலும்
பஸ் ஸ்டாண்டிலும் உள்ள சுவர்கள் முழுவதிலும்
முழங்கங்களை எழுதினோம்.

அவ்வளவு முழக்கங்களையம் தயாரித்தது எல்லாச்
சுவர்களிலும் எழுதியவன் நான்தான். பெயிண்டு
பிரஷ் எதுவும் கிடையாது. செம்மண்ணைக் குழைத்து
பெயிண்டு போல ஆக்கி, வைக்கோல் பிரிகளால்
பிரஷ் செய்து, அதைக் கொண்டு ஏணியில் ஏறி
சுவர் சுவராக எல்லாச் சுவர்களிலும் எழுதினேன்.
இரவு 9 மணிக்கு மேல் இந்த வேலையை ஆரம்பித்தோம்.

டீக்கடை கூட எங்கள் ஊரில் அந்த நேரத்துக்குக்
கிடையாது. யாருக்கும் டீ தேவைப்படவும் இல்லை.
இரவு இரண்டாம் ஆட்டம் சினிமா முடிந்து ஆட்கள்
வெளியேறி வரும்போது என் வேலையும் முடிந்து
வீடு திரும்பினேன். பைசாச் செலவு கிடையாது.

அன்று பேனர் பிளக்ஸ் கலாச்சாரம் கிடையாது.
எல்லாம் மூங்கில் தட்டிதான். அதில் காகிதத்தை
ஒட்டி அதில் போஸ்டர் கலர் பிரஷ் கொண்டு
எழுதுவார்கள். பட்டு என்பவர்தான் ஊரில்
எல்லாக் கட்சிக்கும் தட்டி எழுதும் ஆர்ட்டிஸ்ட்.
கம்யூனிஸ்ட் கட்சிக்கு நானும் தட்டி எழுதுவேன்.
எனக்கும் போஸ்டர் கலரும் பிரஷும் வாங்கித்
தருவார்கள். தோழர் பட்டு தொழில்முறை ஆர்ட்டிஸ்ட்.
அவருக்கு அதுதான் பிழைப்பு. நான் அமெச்சூர்.

இதையெல்லாம் ஏன் நினைவு படுத்துகிறேன்
என்றால், இவையெல்லாம் மிக அண்மைக்காலம்
வரை  நிலவிய அரசியல் கலாச்சாரங்கள். இன்றுபோல்
சுவர்களில் எழுத லட்சக் கணக்கில் கான்ட்ராக்ட் விடும்
பழக்கம் அப்போது வேட்பாளர்களுக்குக் கிடையாது.

இன்று அனைத்தும் கார்ப்பொரேட் மயம் ஆகிவிட்டது.
கார்ப்பொரேட் என்பதன் பொருள் இதுதான். பொருள்
தெரியாமலேயே கார்ப்பொரேட் என்று உளறிக்
கொண்டிருக்கும் விடலைகள் உண்மையை அறியட்டும்.

அப்போதெல்லாம் நல்லகண்ணுவோ நல்லசிவமோ
நேர்மையான மக்களுக்குக் கட்டுப்பட்ட வாழ்க்கையை
வாழ்ந்தார்கள். பொதுவாழ்வில் பத்துப்பைசா
சம்பாதித்ததில்லை.  அவர்கள் பொறுக்கித் தின்றார்கள்
என்று அவர்களின் கொடிய எதிரிகூடச் சொல்ல மாட்டான்.

இன்று முதலாளித்துவ வளர்ச்சியோடு CPI,CPM
கடசிகளின் சீரழிவும் ஓர் வரலாற்று நிகழ்வாக
ஆகி விட்டது. மற்ற  பூர்ஷ்வாக் கட்சிகளை விட
சீரழிவில் கம்யூனிஸ்டுகள் முன்னணியில்
நிற்கின்றனர். இதன் காரணமாகவும் புரட்சிக்கு
எதிராக இருப்பதாலும் இவர்கள் போலிக் கம்யூனிஸ்டுகள்
என்று சரியாகவே அழைக்கப் படுகிறார்கள்.

மு க ஸ்டாலின் பிச்சை போட்ட இரண்டே இரண்டு
தொகுதிகளில் நிற்க CPIக்கு ஏன் ரூ 15 கோடி?
CPMக்கு ஏன் ரூ 10 கோடி?

இந்தத் தொகை கடசிக்கே போய்ச்சேராமல்
பங்கு போட்டுக் கொண்டது யார்? எவ்வ்ளவு
பெரிய கயமை? ஸ்டாலினிடமே ரூ 25 கோடி
வாங்கியவர்கள் ஜெயலலிதாவிடம் எவ்வளவு
கோடி வாங்கி இருப்பார்கள்?

இது ஒன்றும் புதிதல்ல; வழக்கமாக நடப்பதுதான்
என்கிறாரே முத்தரசன்! அப்படியானால்
ஜெயலலிதாவிடம் வாங்கியது எவ்வளவு?

திமுகவை வீழ்த்த ஜெயலலிதாவிடம் பணம்
வாங்கிக்கொண்டு (ரூ 1500 கோடி) மக்கள் நலக்
கூட்டணி அமைத்தார்களே, அப்போது CPI,CPMக்கு
வைகோ பங்கு பிரித்துக் கொடுத்தது எவ்வளவு?

எல்லா உண்மைகளும் விரைவில் வெளியாகும்.
இனி CPI, CPM கடசிகள் காரல் மார்க்சின்
பெயரை உச்சரிக்க அருகதை கிடையாது.
**************************************************   




  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக