திங்கள், 16 செப்டம்பர், 2019

5, 8 வகுப்புகளில் பொதுத் தேர்வு! சரியா? தவறா?
யார் முடிவு எடுக்க வேண்டும்?
------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
--------------------------------------------------------------
அரசுப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு.
12 உயிர் எழுத்துக்களைச் சொல் என்கிறார் ஆசிரியர்.
மாணவன் சொல்லிறான்; க ப ச ஆகியவற்றையும்
உயிர் எழுத்தாகச் சொல்கிறான். வரிசையாகப்
பலரும் இப்படியே சொல்கின்றனர். ஆசிரியர்
அதிர்ச்சி அடைகிறார்.

உலகம் என்ற சொல்லில் உ குறிலா நெடிலா என்று
கேட்கிறார் ஆசிரியர். மாணவர்கள் பலராலும்
விடை சொல்ல இயலவில்லை; தப்புத் தப்பாகச்
சொல்கிறார்கள்.

அநேகமாக 99 சதம் அரசுப் பள்ளிகளில் இதுதான்
நிலைமை.

எட்டாம் வகுப்பு வரை All pass முறை உள்ளது. யாரும்
பெயில் ஆக்கப் படுவதில்லை. விளைவு ஒன்பதாம்
வகுப்பில் வந்து சேர்பவர்களில் அநேகர் ஆறாம்
வகுப்புத் தகுதி கூட இல்லாதவர்கள்தான். இதற்குப்
பெயர் கல்வியா? இதுதான் கல்வி முறை என்றால்
ஏற்க  இயலுமா?

செங்கோட்டையன் அமைச்சரானதும் 5, 8 வகுப்புகளுக்கு
பொதுத்தேர்வு வேண்டாம் என்ற முடிவுடன்தான்
இருந்தார். ஆசிரியர்கள் பலரும் அவரைச் சந்தித்து
தேர்வு வேண்டும் என்று வலியுறுத்தியதன் விளைவாகவே
இப்போது பொதுத்தேர்வை அறிவித்துள்ளார்.

இது சரியா? தவறா?
இதில் யார் கருத்துச் சொல்ல முடியும்?

பாடம் நடத்துகிற ஆசிரியர்கள்தான் இதில் கருத்துச்
சொல்லும் அருகதை உடையவர்கள். அவர்கள்தான்
கேள்வித்தாள் தயாரிக்கிறார்கள். மாணவனின் கற்றல்
திறன் எப்படி இருக்கிறது என்று அறிந்தவர்கள்
அவர்கள் மட்டுமே.

தமிழகத்தின் பெண் கவிஞரும் பள்ளி ஆசிரியரும் ஆகிய
சுகிர்த ராணி  அவர்கள் ஒன்பதாம் வகுப்பில்
மாணவர்களின் நிலை எப்படி உள்ளது என்பதை
சில மாதங்களுக்கு முன்பு எழுதி இருந்தார்.

தற்போது மேனிலைப்பள்ளி முதுநிலை ஆசிரியர்களின்
சங்கம் பொதுத் தேர்வை வரவேற்று அறிக்கை வெளியிட்டு
உள்ளது. அதை புறக்கணிக்க இயலாது.

பொதுத் தேர்வு என்றாலே, 10, 12 வகுப்புகளுக்கான
பொதுத்தேர்வு போல மாநிலம் முழுவதற்குமான
பொதுத் தேர்வு அல்ல. இது மாவட்ட அளவில்
நடத்தப்படும் தேர்வு. இதைப் பொதுத்தேர்வு
என்று அழைப்பதே தவறு.

முன்னேறிய நெல்லை குமரி மாவட்டங்களுக்கு
அந்த மாவட்ட அளவில் மட்டுமே தேர்வு இருக்கும்.
பின்தங்கிய தருமபுரி போன்ற மாவட்டங்களுக்கு
அந்த மாவட்ட அளவிலேயே தேர்வு இருக்கும்.
எனவே இத்தேர்வு முற்றிலும் உள்ளூர் மட்டத்தில்
நடைபெறும் தேர்வே தவிர (purely a local exam and
not a public exam) பொதுத்தேர்வு அல்ல என்கின்றனர்
ஆசிரியர்கள்.

அதே நேரத்தில் தொடக்கப் பள்ளி ஆசிரியர்களின்
சங்கம் இத்தேர்வுகளை எதிர்க்கிறது. அவர்களின்
நிலை ஏற்கத் தக்கதல்ல.

தேர்வு வேண்டுமா? வேண்டாமா? ஆசிரியர் சங்கங்கள்
ஒன்றுகூடி விவாதித்து ஒத்த கருத்துக்கு வந்து
தேர்வு வேண்டும் என்றோ வேண்டாம் என்றோ
அல்லது எட்டாம் வகுப்புக்கு மட்டும் தேர்வு இருக்கட்டும்
என்றோ எந்த முடிவை வேண்டுமானாலும் எடுக்கட்டும்.

நமது வேலை அமைதி காப்பது.
முடிவை ஆசிரியர்கள் எடுக்கட்டும்.
They are the real stake holders.
**********************************************

யார் பாடம் எடுக்கிறார்களோ அவர்கள்தான்
தேர்வு வேண்டுமா வேண்டாமா என்று
முடிவு எடுக்க முடியும். பாடம் எடுக்கிறவர்களே
முடிவையும் எடுக்க வேண்டும். அதுதான் நியாயம்.
மற்றவர்கள் இதில் கருத்துக் சொல்வது நியாயமற்றது.


உயிர் எழுத்து 12ஐயும் எழுதத் தெரியாத மாணவர்களை
வைத்துக்கொண்டு தேர்ச்சி விகிதம் காட்ட வேண்டும்.
தேர்ச்சி விகிதம் குறைந்தால், மாவட்டக் கல்வி
அதிகாரியிடம் இருந்து மெமோ வரும்.

பையனைக் கண்டித்தாலோ ஒன்று தற்கொலை
செய்து கொண்டு விடுவான். அல்லது பெற்றோர்கள்
என்று ஒரு கூட்டமே வந்து ஆசிரியரைக் கைது செய்யச்
சொல்லிப் போராடும்.

எருதின் நோய் காக்கைக்குத் தெரியாது. ஆசிரியர்களின்
கஷ்டம் மற்றவர்களுக்குத் தெரியாது. கருத்து கந்தசாமிகள்
முற்போக்கு கருத்து என்று சொல்லிக் கொண்டு
தேர்வு வேண்டாம் என்று சொல்லி முற்போக்கு TRP
ரேட்டிங்கில் புள்ளிகளைப்  பெறுவார்கள்.

இந்த அவலம் இருக்கக் கூடாது. எவன் பாடம்
எடுக்கிறானோ அவன்தான் முடிவு எடுக்க வேண்டும்.
தேர்வு வேண்டுமா வேண்டாமா என்ற முடிவை
ஆசிரியர்கள் எடுக்கட்டும். மற்றவர்கள் நவத்
துவாரங்களை போத்திக் கொண்டு இருக்கட்டும்.

.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக