வெள்ளி, 27 செப்டம்பர், 2019

எலக்ட்ரானின் அலைநீளம் என்ன?
நடிகை நயன்தாராவின் அலைநீளம் என்ன?
-----------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
--------------------------------------------------------------
எலக்ட்ரான் என்பது ஒரு துகள்: மிகவும் நுண்ணிய
ஒரு துகள். அதே நேரத்தில் ஒரு துகளான எலக்ட்ரான்
அலையாகவும் இருக்கிறது. தன்னை ஒரு அலையாகவும்
அது வெளிப்படுத்திக் கொள்கிறது. எனவே அதற்கு
அலைநீளம் உண்டு.

ஒளி அலை என்கிறோம். மின்காந்த அலை என்கிறோம்.
ஆற்றல் என்பது அலையாக இருக்கிறது என்ற புரிதல்
பொதுச் சமூகத்திற்கு உண்டு.

ஆற்றலுக்கு மட்டுமல்ல, பொருளுக்கும் அலைப்பண்பு
உண்டு என்றார் லூயி டி பிராக்லி. எனவே புரோட்டான்,
நியூட்ரான், எலக்ட்ரான் ஆகியவை பொருளின் துகள்கள்.
அதாவது பொருட்கள். அவை அலையாகவும் இருப்பதால்,
அவற்றுக்கும் அலைநீளம் உண்டு.
இதை டி பிராக்லி அலைநீளம் என்று அழைக்கிறோம். 

ஆக எலக்ட்ரானின் அலைநீளத்தைக் கண்டறிவது எப்படி?
மிக எளிய ஒரு ஃபார்முலாவைக் கொண்டு எலக்ட்ரானின்
அலைநீளத்தைக் கண்டறிய முடியும்.

இப்போது ஒரு கணக்கு. ஒரு எலக்ட்ரான் வினாடிக்கு
28 லட்சம் மீட்டர் வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது.
இதன் அலைநீளம் என்ன?

அலைநீளம் கண்டறிவதற்கான ஃபார்முலாவை
இணைக்கப்பட்ட படத்தில் காணவும்.
கணக்கில் எலக்ட்ரானின் வேகம் மட்டுமே கொடுக்கப்
பட்டுள்ளது. வேறு எந்தத் தரவும் இல்லை. வேறு தரவு
எதையும் தரவும் மாட்டார்கள்.

இந்தக் கணக்கைச் செய்யும் ஒருவருக்கு, பிளாங்கின்
மாறிலி (Plank's constant) மனப்படமாகத் தெரியும்;
தெரிந்திருக்க வேண்டும்.

அடுத்து எலக்ட்ரானின் நிறை (mass) என்ன என்றும்
தெரிந்திருக்க வேண்டும். மாணவர்களின்
கால்குலேட்டரில் இந்த விவரங்கள் இருக்கும்.
எனினும் இந்தவிவரங்கள் மனதில் பதியாமல்
ஒருவரால் இந்தக் கணக்கைச் செய்ய முடியாது.

சரி, ஃபார்முலாவைப் பயன்படுத்தினால்,
எலக்ட்ரானின் அலைநீளம் 0.26 நானோமீட்டர் வரும்.
ஒவ்வொருவரும் கணக்கைச் செய்து பார்த்தால்
மட்டுமே இதை புரிந்து கொள்ள முடியும்.

நயன்தாராவின் அலைநீளம்:
----------------------------------------------
நடிகை நயன்தாரா  50 கிலோகிராம் நிறை உள்ளவர்.
அவர் மணிக்கு 2 கிமீ வேகத்தில் சென்று
கொண்டிருக்கிறார். அவரின் அலைநீளம் என்ன?

இதைக் கண்டுபிடியுங்கள். இயற்பியலைக் கற்பது
என்பது வெறுமனே ஒரு கட்டுரையை வாசிப்பதல்ல.
இது போன்ற கணக்குகளைச் செய்து பார்க்காமல்
இயற்பியலைக் கற்க இயலாது.

விடைகள் வரவேற்கப் படுகின்றன.
*****************************************
   


     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக