செவ்வாய், 24 செப்டம்பர், 2019

தங்கள் கட்சிகளின் பெயர்களில் உள்ள
திராவிடம் என்ற சொல்லை
தமிழக அரசியல் கட்சிகள் நீக்க வேண்டும்!
இல்லாத திராவிடத்தின் பெயரில் கட்சி ஏன்?
-------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
---------------------------------------------------------------
திராவிட மொழிகள் என்று கால்டுவெல் பாதிரியார்
கூறும் மொழிகள் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம்
ஆகியன.  பிரிட்டிஷ் காலத்தில் தெலுங்கு கன்னட மலையாள
நிலப் பகுதிகள் சென்னை ராஜதானி (Madras Province)
என்ற பெயரில் ஒரே மாநிலமாகவே இருந்தன.
1956ல்தான் மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்
பட்டன. அப்போதுதான் இன்றுள்ள மாநில அமைப்பு
ஏற்பட்டது.

திராவிடம் என்ற பெயரிலான அரசியல் கட்சிகள் தமிழ்நாட்டில்
மட்டுமே உள்ளன. ஆந்திரத்தில் தெலுங்கு தேசம் என்ற கட்சி
உள்ளதே தவிர, திராவிட தேசம் என்ற கட்சி இல்லை.
தெலுங்கானாவில் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி என்று
கட்சி உள்ளதே தவிர, திராவிட சமிதி என்று கட்சி எதுவும்
இல்லை.

தமிழ்நாட்டில் திராவிடர் கழகம் என்ற பெயரில் கட்சி
உள்ளது. இதே போல ஆந்திரத்திலும் திராவிடர் கழகம்
இருக்க வேண்டும் அல்லவா? தெலுங்கு மொழியும்
ஒரு திராவிட மொழிதானே கால்டுவெல்லின் ஆய்வுப்படி!
தெலுங்கர்களும் திராவிடர்கள்தானே கால்டுவெல்லின்
ஆய்வுப்படி!

ஆனால் பத்துக்கோடித் தெலுங்கர்கள் நடுவில்
ஏன் ஒரு திராவிடர் கழகம் இல்லை? என்றாவது
இதைப்பற்றி நாம் சிந்தித்தோமா?

சரி, தெலுங்கர்களை விடுங்கள். கன்னடர்களும்
திராவிடர்கள்தானே! கன்னட  மொழியும் திராவிட
மொழிதானே! கால்டுவெல்லின் கோட்பாடு
அப்படித்தானே கூறுகிறது!

ஆனால் ஏன் கன்னடர்களிடம் ஒரு திராவிடர் கழகமோ
அல்லது ஒரு திராவிடக் கட்சியோ ஏன் இல்லை?
கன்னட சலுவாலிகர் கட்சி என்று ஒரு கட்சியை
நடத்தும் வட்டால் நாகராஜ் போன்றவர்கள் ஏன்
ஒரு திராவிடக் கட்சியை நடத்தவில்லை? ஏன்
கர்நாடக மாநிலத்தில் ஒரு திராவிடக் கட்சி கூட இல்லை?

மலையாள மொழியும் திராவிட மொழிதானே!
மலையாளிகளும் திராவிடர்கள்தானே கால்டுவெல்
கோட்பாட்டின்படி! பின் ஏன் மலையாள மண்ணில்
திராவிடக் கட்சியோ திராவிட இயக்கமோ இல்லை?

சரி, ஆந்திரம் கர்நாடகம் தெலுங்கானா கேரளம்
ஆகிய மாநிலங்களில் அம்மாநில மக்கள்
தங்களுக்கென்று ஒரு திராவிடக் கட்சியை
ஏற்படுத்திக் கொள்ளவில்லை! அவர்களுக்காக
அங்கு சென்று ஒரு திராவிடக் கட்சியை இங்குள்ள
தலைவர்கள் ஏன் அமைக்கவில்லை?

வைக்கம் போராட்டத்தின் காரணமாக வைக்கம் வீரர்
என்று பட்டம் பெற்ற ஈ வெ ரா கேரளம் சென்று
அங்கு ஒரு திராவிடக் கட்சியை அமைக்க முயற்சி
செய்தாரா? செய்யவே இல்லை. "முயற்சி செய்தோம்;
ஆனால் முடியவில்லை" என்றால்கூட ஏற்றுக் கொள்ளலாம்.
ஆனால் முயற்சியே செய்யவில்லையே ஏன்?

ஈவெராவுக்கு நன்றாகத் தெரியும் தமிழன் மட்டுமே
ஏமாந்த சோணகிரி என்று! தமிழர்களை திராவிடம்
என்று சொல்லி ஏமாற்றுவது போல, கன்னடர்களையோ
மலையாளிகளையோ ஏமாற்ற முடியாது என்று
ஈவெராவுக்கு நன்கு தெரியும். திராவிடம் என்ற
முற்றிலும் போலியான சித்தாந்தம் வேறெங்கும்
விலை போகாது என்றும் அவருக்கு நன்கு தெரியும்.

ஈவெராவுக்கு மட்டுமல்ல, அண்ணாத்துரைக்கும் இந்த
உண்மை நன்கு தெரியும். 1956ல் மொழிவாரி
மாநிலங்கள் அமைக்கப்பட்ட போதே, திராவிடம்
செத்துப் போய் விட்டது என்று அண்ணாத்துரைக்கு
நன்கு தெரியும். ஆனாலும் முடிந்த வரை தமிழனை
ஏமாற்றலாமே என்று இருந்தார் அவர்.

1962ல் இந்திய சீனப்போர் வருகிறது. அதையொட்டி
பிரிவினைத் தடைச் சட்டத்தைக்  கொண்டு வருகிறது
இந்திய அரசு. பிரிவினை கேட்கும் கட்சிகள் தடை
செய்யப்படும் என்று அறிவிக்கிறார் ஜவகர்லால் நேரு.

அண்ணாத்துரையோ ஈவெராவோ இந்தச் சட்டத்தை
எதிர்த்தார்களா? இல்லை. திராவிட நாடு என்னும்
தங்களின் பிரிவினைக் கொள்கையைக் கைவிட்டு
விட்டதாக உடனடியாக அறிவிக்கிறார் அண்ணாத்துரை.
பெரும் சரணாகதி இது.

மனித குலம் கண்டிராத இழிவின் உச்சமாக, தங்களின்
உயிராதாரமான திராவிடத்தைக் கைவிடுகின்றனர்
ஈவெராவும் அண்ணாத்துரையும்.
திராவிடம் என்பது ஒரு பொய்மை என்று ஈவெராவும் அண்ணாத்துரையும்நன்கு அறிவார்கள்.எனவே அதைக்
கைவிடுவதில் அவர்களுக்கு எவ்விதக் குற்ற உணர்வும்
இருக்கவில்லை.

திராவிடத்தின் பிதாமகன்களான ஈவெராவும்
அண்ணாத்துரையுமே கைவிட்டு ஒழித்த
திராவிடத்தை இன்றைக்கும் தலையில் தூக்கி
வைத்துக் கொண்டு ஆடுகின்றன சில அசடுகள்!

திராவிடம் என்பது பிரிட்டிஷ் சித்தாந்தவாதிகளான
வில்லியம் ஜோன்சும் கால்டுவெல் பாதிரியாரும்
பெற்றெடுத்த குழந்தை என்பதை எமது முந்திய
கட்டுரையில் தெளிவு படுத்தி இருந்தோம். திராவிடம்
என்பது முற்றிலும் அறிவியலுக்கு எதிரானது; பிரிட்டிஷ்
காலனி ஆடசியை நிரந்தரமாகத் தக்க வைக்கும்
இழிந்த உள்நோக்கத்துடன் புனையப்பட்ட பொய்மை.

இந்தியாவில் வேறெங்குமே அரசியல் தளத்தில்
செல்வாக்குப் பெறாத இந்தப் பொய்மையை
பிரிட்டிஷாரின் பெருந்தாசரான ஈவெரா அன்றைய
சென்னை ராஜதானியிலும் இன்றைய தமிழ்நாட்டிலும்
விதை போட்டு வளர்ந்து பெரும் நச்சு விருட்சமாக
வேரூன்றச் செய்தார். தமிழ்நாட்டின் அரசியல்
அதிகாரத்தைக் கைப்பற்றும் அளவுக்கு இந்தப்
போலி திராவிடத்தை வளர்த்தெடுத்தார் அண்ணாத்துரை.

ஈவெரா பிரிட்டிஷ்தாசர் என்பது சூரியன் கிழக்கே
உதிக்கிறது என்பதைப் போன்ற ஓர் ஒளிவீசும் உண்மை.
இதோ அவரே ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்கிறார்
பாருங்கள்!

"வெள்ளைக்காரன் காலை நக்கியவர்கள் என்று நீங்கள் 
எங்களை கேவலமாகச் சொல்லலாம். பார்ப்பான் காலை விட வெள்ளைக்காரன் கால் சுத்தமானது. அது சாக்ஸ் போட்ட 
கால். சுத்தமாக இருக்கும். இதை நக்குவதைவிட 
அதை நக்குவது என்பது நல்லது என்று பெரியார் 
தனக்கே உரிய பாணியில் ஓங்கி அடித்து பதில் 
சொன்னார்.” 
(வீரமணி, மொழியால் தமிழர், இனத்தால் திராவிடர்
என்ற நூல்,பக்கம் 65).

ஈவெராவைப் போன்ற பிரிட்டிஷ் பெருந்தாசர்கள் 
பிற தென்னக மாநிலங்களில் இல்லை. ஈவெராவின் 
செல்வாக்கும் தமிழ்நாட்டைத் தாண்டவில்லை.
எனவேதான் ஆந்திரத்திலோ கன்னடத்திலோ 
கேரளத்திலோ திராவிடப் பொய்மை 
விலைபோகவில்லை. 

கீழடி ஆய்வுகள் தமிழின் தொன்மையை முன்னிலும்
துல்லியமாக நிறுவி இருக்கின்றன. திராவிடம் என்ற
பொய்மைத் தத்துவம் நாளும் நாளும் முகமூடி
கிழிந்து முற்றிலுமாக அம்பலப்பட்டு விட்டது.

இந்த நிலையிலும் தமிழ்நாட்டில் உள்ள அரசியல்
கட்சிகள் தங்களின் கட்சிப் பெயரில் திராவிடம்
என்ற பொய்மையை வைத்துக் கொண்டு
இருக்கின்றன. இது பெருங்கயமை. இது கூடாது.
திராவிடம் என்ற சொல்லும் திராவிடம் என்ற கோட்பாடும்
தமிழர்களை ஏய்ப்பதன் அடையாளம்.  திராவிடம் என்பது
தமிழர்களின் அவமானச் சின்னம்.

எனவே திமுக அதிமுக தேமுதிக மதிமுக ஆகிய
கட்சிகளும் பல்வேறு திராவிடர் கழகங்களும்
தங்களின் கட்சிகளில் உள்ள திராவிடம் என்ற
பெயரை நீக்க வேண்டும். அதற்குப் பதிலாக
தமிழர் என்ற பெயரைச் சூட்டிக் கொள்ள வேண்டும்.

அதாவது திமுக என்பது தமிழர் முன்னேற்றக்
கழகமாக தமுகவாக ஆக வேண்டும். ஏனைய
கட்சிகளும் இவ்வாறே பெயரை மாற்றிக் கொள்ள
வேண்டும்.

தென்னிந்திய நடிகர் சங்கம் என்ற பெயரையே
தமிழக நடிகர் சங்கம் என்று பெயர் மாற்ற வேண்டும்
என்ற கோரிக்கை வலுத்து வரும் காலம் இது. எனவே
திராவிடம் என்ற இழிந்த பெயரை அரசியல் கட்சிகள்
நீக்கிவிட்டு வேறு நல்ல பெயரை வைத்துக் கொள்ளட்டும்.
இது எட்டுக்கோடித் தமிழ் மக்களின் கோரிக்கை.
*****************************************************


  





 
   







  

  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக