செவ்வாய், 29 அக்டோபர், 2019

குழந்தை சுர்ஜித் மீட்புப்பணிகள்!
ஜோதிமணி எம்பி என்ன செய்ய வேண்டும்?
------------------------------------------------------ 
நியூட்டன் அறிவியல் மன்றம்
---------------------------------------------------
2004 சுனாமிக்குப் பிறகுதான் இந்தியாவில்
தேசியப் பேரிடர் மேலாண்மை அமைப்பு உருவாக்கப்
பட்டது. இது ஒரு மூன்றடுக்கு (three tier) அமைப்பு.
மாவட்ட, மாநில, தேசிய அடுக்குகளைக் கொண்டது.

இந்தியாவில் அடிக்கடி ஏற்படும் இயற்கைப் பேரிடர்களான
மழை, வெள்ளம், புயல் ஆகியவற்றின்பொது மீட்புப்
பணிகளை மேற்கொள்ளுவதில்தான் நமது பேரிடர்
மேலாண்மை அமைப்புகள் பயிற்சி பெற்றுள்ளன.

ஜப்பான் நாடு பூகம்ப முறிவுப்பாதையில் (fault line)
அமைந்துள்ளது. எனவே அங்கு அடிக்கடி பூகம்பம்
ஏற்பட வாய்ப்பு உண்டு. எனவே ஜப்பான் நாடு
பூகம்பம், சுனாமி போன்ற பேரிடர்களின்போது
மிகுந்த திறமையுடன் செயலாற்றுவதில் நல்ல
பயிற்சியும் அனுபவமும் பெற்றுள்ளது.

அமெரிக்காவில் டார்பிடோ எனப்படும் சூறாவளி
அடிக்கடி ஏற்படும். இது எப்போது ஏற்படும் என்பதை
அரை மணி நேரத்திற்கு முன்னர்தான் கூற இயலும்.
எனவே அரை மணி நேர அவகாசத்தில், பாதுகாப்பான
இடம் நோக்கி மக்கள் நகர வேண்டும். எனவே
அமெரிக்காவில் உள்ள பேரிடர் மேலாண்மை
அமைப்புகள் இவற்றில் பயிற்சியும் நிபுணத்துவமும்
பெற்றுள்ளன.

நாம் முன்னர்க் கூறியபடி, இந்தியாவின் பேரிடர்
மேலாண்மை அமைப்புகள் மழை வெள்ளம் புயல்
ஆகிய பேரிடர்களின்போது மட்டும் திறம்படச்
செயலாற்றும் அனுபவம் பெற்றவை.

மணப்பாறையில் குழந்தை சுர்ஜித் ஆழ்துளைக்
கிணற்றில் விழுந்தது மிகவும் துயர நிகழ்வு. உடனே 
தீயணைக்கும் படைக்குத் தகவல் சொல்லப்பட்டு
அவர்கள் குழந்தையை மீட்கும் முயற்சியில்
ஈடுபட்டனர். அப்போதெல்லாம் இது மிகவும் சிக்கலான
மீட்புப்பணி என்று யாரும் கருதவில்லை. எளிதில்
குழந்தையை மீட்டு விடலாம் என்ற புரிதலே
அனைவருக்கும் இருந்தது.

ஆரம்ப முயற்சிகள் தோற்று, குழந்தை இன்னும்
ஆழத்துக்குச் சென்றுவிட்ட பிறகே, நிலைமையின்
தீவிரத்தை அனைவரும் உணர்ந்து பேரிடர் மேலாண்மை
அமைப்புக்குத் தகவல் கொடுத்து, அவர்களும்
வந்து சேர்ந்தனர். எனவே பேரிடர் மேலாண்மை அமைப்பு
நிலைமைகளைத் தன் கட்டுப்பாட்டுக்குள் எடுப்பதற்குள்
மீட்புப்பணியில் பொன்னான நேரம் (golden hour) எனப்படும்
நேரம் பெருமளவு கழிந்து விட்டது.

தற்போது மீட்புக் குழுவினர் தீவிரமாக மீட்புப் பணியில்
ஈடுபட்டுள்ளனர். மொத்த அரசு எந்திரமும் முடுக்கி
விடப்பட்டுள்ளது. குழந்தை மீட்கப்படுவதற்கான
நிகழ்தகவு appreciableஆக இருக்கிறது.

கரூர் எம்பி செல்வி ஜோதிமணி அங்கு சென்றுள்ளார்.
அங்கேயே தங்கியும் இருக்கிறார். அவரின் அக்கறை
பாராட்டுக்குரியது. அதே நேரத்தில் அவர் ஒரு வீடியோவை
வெளியிட்டு உள்ளார். அதில் அவர் கூறிய சில
கருத்துக்கள் முற்றிலும் தவறானவையாக உள்ளன.

எந்திரங்களைக் கொண்டு மேலும் தோண்டுவது தவறு
என்கிறார் செல்வி ஜோதிமணி. எந்திரங்களைப்
பயன்படுத்தாமல் வேறு எதைப் பயன்படுத்துவது?
மீட்புப்பணி என்பது கைக்குத்தல் அரிசியில்
தீபாவளிப் பலகாரம் செய்வது போன்றதல்ல.

அடுத்து plan A தோற்று விட்டால்,  plan B கைவசம் இல்லை
என்றெல்லாம் பெரிய தொழில்நுட்ப நிபுணர் போல்
பேசுகிறார். ஜோதிமணி அறிவியலோ தொழில்நுட்பமோ  
கற்றவர் அல்லர். ஒரு தொழில்நுட்ப விவகாரத்தில்
கருத்துச் சொல்ல எள்ளளவும் அருகதை அற்றவர்.

ஒரு எம்பி என்ற முறையில் தமக்கான ஒரு அறிவியல்
ஆலோசகரை ஜோதிமணி அமர்த்திக் கொள்ளலாம்.
அந்த ஆலோசகருக்கான சம்பளத்தை அரசு கொடுத்து .
விடும். ஜோதிமணிக்கு எந்தச் செலவும் கிடையாது.

இவ்வாறு அரசின் செலவில் ஒரு அறிவியல் ஆலோசகரை
அமர்த்திக் கொண்டு, அவரிடம் ஆலோசனை பெற்று
விஷயம் தெரிந்து கொண்டு, அதன் பிறகு அவர்
கருத்துக் கூறுவதுதான் முறை. 

குழந்தை உயிருடன் மீட்கப்பட வேண்டும் என்று
பிரார்த்தனை செய்யும் இந்து கிறிஸ்துவ இஸ்லாமிய
மக்களின் நல்லெண்ணம் போற்றத் தக்கது. அதே நேரத்தில்
பிரார்த்தனைகளால் அணுவளவும் பயன் இல்லை என்ற
உண்மையையும் சொல்ல வேண்டி உள்ளது. இல்லாத
கடவுளிடம் வேண்டுதல் செய்வதால் என்ன பயன் விளையும்?

மீட்புப்பணிகள் முடிந்தவுடன், டாக்டர் மயில்சாமி
அண்ணாத்துரை தலைமையில் ஒரு குழுவை அமைத்து
இது போன்ற நிகழ்வுகள் எதிர்காலத்தில் ஏற்பட்டால்
என்ன செய்ய வேண்டும் என்ற வழிமுறைகளை
தமிழக அரசு பெற வேண்டும்.
*************************************************    

குரங்குகளைப் பயன்படுத்த இயலாது.
அவை சொன்ன பேச்சைக் கேட்கும் தன்மை
இல்லாதவை. ரோபோக்களை உருவாக்கி அனுப்பலாம்.

  


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக