வெள்ளி, 11 அக்டோபர், 2019

சிந்தனைத் துறையில் இந்தியா மிக மிகப் பின் தங்கிய நிலையில் இருப்பதற்குக் காரணம், கல்வித் துறை. எல்லோரும் பெரும் பணம் சம்பாதித்துத் தரக் கூடிய வேலைக்குத் தகுதியாக்கிக் கொள்கிறார்கள். மாதம் ஐந்து லட்சம் சம்பாதிக்கிறார்கள். ஆனால் அவர்கள் மாணவப் பருவத்தில் கார்ப்பொரேட் குருமார்களிடம் உரையாடிக் கொண்டிருக்கிறார்கள். இந்தியாவில் உள்ள அத்தனை elite கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்களும் - உதாரணமாக, IIT, IIM - ஜக்கியை வரவழைத்து உரையாடுகிறார்கள். ஆன்மீகம் தேவையா என்று ஒரு மாணவன் கேட்கிறான். நன்றாகக் கால் மேல் கால் போட்டபடியே கேட்கிறான். யாருமே சத்குரு என்று அழைப்பதில்லை. சார் என்றே அழைக்கிறார்கள். கடுமையான கேள்விகளெல்லாம் கேட்கிறார்கள். you guys என்று ஜக்கியைக் குறிப்பிடுகிறான் ஒரு மாணவன். அது எல்லாவற்றுக்குமே மிகப் பொறுமையாக, மிக விளக்கமாக பதில் சொல்கிறார் ஜக்கி. சூரியனுக்குக் கீழே உள்ள அத்தனை விஷயங்களுக்கும் அவர் பதில் வைத்திருப்பதால் அவரை ஜீனியஸ் என்றே அழைக்கலாம். கொஞ்சம் கூட யோசிக்காமல் பதில்களை பாக்கெட்டிலிருந்து எடுத்து எடுத்துக் கொடுக்கிறார்.
ஆனால் உலக அளவில் சிந்தனைத் துறையில் இந்தியா நக்கிக் கொண்டு கிடப்பதற்கு கார்ப்பொரேட் குருமார்களிடம் கேள்வி கேட்டு, உரையாடிக் கொண்டிருக்கும் மாணவர்களே காரணம். இந்த மாணவர்கள் யாருக்கும் ஒரு இந்திய எழுத்தாளனைக் கூட தெரியாது என்பதே எதார்த்தம். இண்டெலெக்சுவல் விஷயங்களையும் ஆன்மீகவாதிகளிடம்தான் பேசுவோம், உரையாடுவோம் என்று நினைக்கும் இளைய சமுதாயத்தை என்னவென்று சொல்வது? ஜே.என்.யூ.வில் எண்பதுகளில் ஃப்ரெஞ்ச் சிந்தனையாளர் ஜாக் தெரிதாவோடு உரையாடினார்கள். என் காலத்தில் கல்லூரிகளில் ஜெயகாந்தன் பேசினார். இப்போது சினிமா நடிகர்களும் தொலைக்காட்சி நிகழ்ச்சி நடத்துபவர்களும் பேசுகிறார்கள். இன்னும் தமிழ்நாட்டுக் கல்லூரிகளில் கார்ப்பொரேட் குருமாரை அழைக்கும் அளவுக்குக் கூட உயரவில்லை. அதெல்லாம் ஐஐடி ஐஐஎம் போன்ற ரொம்ப உயர்தர ஐந்து நட்சத்திர கல்வி நிறுவனங்களில் மட்டுமே நடக்கிறது. அதாவது, அவர்கள்தான் ஜக்கியோடு உரையாடுகிறார்கள். அவர்களைப் பொறுத்தவரை சினிமா நடிகர்களும், தொலைக்காட்சி ஆட்களும் லும்பன். கார்ப்பொரேட் குருமார் இண்டெலெக்சுவல்.
ஆனால் அந்த எலீட் மாணவர்களும் என்னைப் பொறுத்தவரை லும்பன் தான். படித்த லும்பன்கள். educated philistines. ஏனென்றால், இவர்களுக்கும் எழுத்தாளர்கள் என்று ஒரு இனம் இருப்பதே தெரியவில்லை. யாரிடம் எதைப் பேசுவது, உரையாடுவது என்றும் தெரியவில்லை. இப்படிப்பட்ட படித்த லும்பன்கள்தான் - அதாவது ஜக்கி போன்ற மிக மிக intelligent குருமார்களிடம் கால் மேல் கால் போட்டபடி you guys என்று கேள்வி கேட்பவர்கள்தான் நாளை ஐஐஎம் டிகிரியும் ஐந்து லட்சம் சம்பளமும் வாங்கிய நிலையில் இஸ்கானிலோ, ஈஷாவிலோ சரண் அடைகிறார்கள்.
இன்னும் இரண்டு மூன்று நூற்றாண்டுகளுக்கு இந்த நாட்டுக்கு கதி மோட்சம் இல்லை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக