வியாழன், 24 அக்டோபர், 2019

சோஷலிசம் சொத்துரிமையை ஏற்பதில்லை!
(திரு சமஸ் கட்டுரைக்கு மறுப்பு!)
----------------------------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன்
நியூட்டன் அறிவியல் மன்றம்
-----------------------------------------------
கம்யூனிஸ்ட் அல்லாத ஒருவர், கம்யூனிசம் பற்றிய
மிகவும் பாமரத்தனமான புரிதலுக்கு மேல் ஏதுமற்ற
ஒருவர் திரு சமஸ். இவர் "தமிழ் இந்து திசை" ஏட்டில்
(23.10.2019) "அடுத்த நூற்றாண்டின் பொதுவுடைமை
இயக்கம்" என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதி
கம்யூனிசம் குறித்த தமது அறியாமையை ஊரறியச்
செய்துள்ளார்.

மார்க்சியத்தின் அடிப்படை நிலைபாடுகளைக்கூட
அறிந்திராத, இந்தியக் கம்யூனிஸ்ட் இயக்கத்தின்
வரலாற்றை நுனிப்புல் அளவேனும் அறிந்திராத திரு சமஸ்
ஒட்டுமொத்தக் கம்யூனிஸ்ட் இயக்கத்துக்கும்
மிகுந்த அகந்தையோடு அறிவுரை வழங்க முன்வந்துள்ளார்.

குட்டி முதலாளிய சிந்தனைக் குள்ளரும், மார்க்சியத்தைக்
கற்றிராத கல்லாக் களிமகனுமான சமஸ் எழுதிய
கட்டுரை எவ்விதத்திலும் பரிசீலிக்கவோ மறுப்புரைக்கவோ
அருகதையற்றது. எனினும் அவரின் கட்டுரை திரளான
வாசகர்களைக் கொண்ட ஒரு தினசரியில் வெளிவந்துள்ளதால்
பதிலளிக்க நேருகிறது.

வசந்தத்தின் இடி முழக்கம்!
------------------------------------------
இந்திய அரசியல் அரங்கில் வசந்தத்தின் இடிமுழக்கமாக
எழுந்த நக்சல்பாரி விவசாயிகளின் ஆயுதம் தாங்கிய
எழுச்சியையும், அதைத் தொடர்ந்து சாரு மஜூம்தார் தலைமையில்
1969 ஏப்ரலில் மார்க்சிய லெனினியக் கட்சி உதயமானதையும்
கொஞ்சமும் அறியாதவர் கட்டுரையாளர் சமஸ்.

சீனாவில் மாவோ ஆட்சி நடத்திய காலம் அது. நக்சல்பாரி
எழுச்சியை வசந்தத்தின் இடிமுழக்கம் (Spring thunder) என்றும்
சாரு மஜூம்தாரை புரட்சியின் சுடரொளி என்றும்
சீனக்  கம்யூனிஸ்ட் கட்சி பாராட்டியது.

சுதந்திரப் போராட்ட காலத்தில் மகாத்மா காந்தியின்
அறைகூவலை ஏற்று கல்லூரி மாணவர்கள் படிப்பைத்
துறந்து விடுதலைக்காகப் போராட வந்தார்கள். மகாத்மா
காந்திக்குப் பிறகு, வேறெந்தத் தலைவரின் அறைகூவலுக்கு
இசைந்து, மாணவர்கள் படிப்பைத் துறந்தார்கள் என்றால்,
அது சாரு மஜூம்தாருக்கு மட்டும்தான்.

"எழுபதின் பத்தாண்டுகளை விடுதலையின் பத்தாண்டுகளாக
மாற்றுவோம்" (The decade of 70s will be the decade of liberation)
என்ற சாரு மஜூம்தாரின் அறைகூவலை
ஏற்று கணக்கற்ற கல்லூரி மாணவர்கள் படிப்பைத்
துறந்து நக்சல்பாரி இயக்கத்தில் இணைந்தார்கள்.

போஜ்புரிலும் ஸ்ரீகாகுளத்திலும் செந்தளங்கள் உருவாக்கப்
பட்டன. நிலப்பிரபுத்துவச் சுரண்டல், கந்து வட்டிக்
கொடுமைகள் ஆகியவை ஒழிக்கப்பட்டன. மக்கள்
நீதிமன்றங்கள் நிறுவப்பட்டு மக்களின் எதிரிகளான
பண்ணையார்கள் தண்டிக்கப் பட்டனர். செந்தளங்களில்
போலீசின் அதிகாரம் செல்லுபடியாகவில்லை.

தமிழ்நாட்டிலும் தர்மபுரியில் மக்கள் யுத்தக்குழுவின்
தலைமையில் தோழர் பாலனின் செயல்பாடுகளால்
கந்துவட்டிக் கொடுமைகள், சாதியக் கொடுமைகள்
ஒழிக்கப் பட்டன. நாடு முழுவதும் வர்க்க எதிரிகளை
அழித்தொழிப்பது என்ற செயல்தந்திர முழக்கம் நடைமுறைப்
படுத்தப் பட்டு கொடிய நிலப்பிரபுக்கள் அழித்தொழிக்கப்
பட்டனர்.

இந்தியக் கம்யூனிச இயக்கத்தின் வரலாறு ந.மு, ந.பி
(நக்சல்பாரிக்கு முன், நக்சல்பாரிக்குப் பின்) என்றே
அமைந்துள்ளது.இத்தகைய நக்சல்பாரியைப் பற்றி
எதுவுமே தெரியாமல் பெருத்த அறியாமையுடன் எழுதுகிறார்
சமஸ். கம்யூனிஸ்ட் அல்லாத ஒருவரின் சராசரி
மூடத்தனம் என்று கருதி இதைக் கடந்து விட முடியாது.
தான் எப்பேர்ப்பட்ட முட்டாள் என்று கூட அறியாத
முட்டாள்தனம் சமசினுடையது/

முதலாளித்துவம் உலகளாவியது!
----------------------------------------------------
லெனின் ஸ்டாலின் மாவோ ஹோசிமின் பிடல் காஸ்ட்ரோ
என்று இந்திய நிலத்துக்கு வெளியே தங்களுக்கான
முன்னுதாரணங்களைத் தேடுகிறார்கள் கம்யூனிஸ்டுகள்
என்று குறைகூறுகிறார் சமஸ். மூலதனம் உலகளாவியது;
முதலாளித்துவமும் உலகளாவியது. அது போலவே
மார்க்சியமும் உலகளாவியது; அப்படித்தான் இருந்தாக வேண்டும்.
மார்க்ஸ் எங்கல்ஸ் லெனின் ஸ்டாலின் மாவோ ஆகிய ஐவரும் மார்க்சியத்தின் மூல ஆசான்கள். இவர்களைத் தவிர்த்து விட்டு
மார்க்சியம் என்பது கிடையாது.

நியூட்டன், ஐன்ஸ்டின், மாக்ஸ் பிளாங் ஆகியோர் நவீன
அறிவியலின் முன்னோடிகள். இவர்கள் வெளிநாட்டினர்
என்பதற்காக இவர்களைத் தவிர்த்து விட்டு அறிவியலைப்
பேச இயலாது. தாமஸ் ஆல்வா எடிசனை இந்தியா
கொண்டாடுவதும், இந்தியாவின் கணித மேதை ராமானுஜனை
உலகம் கொண்டாடுவதும் எதனால்?

ஆப்பிரிக்கக் கறுப்பின மக்கள் மகாத்மா காந்தியைப்
போற்றுவதும் நெல்சன் மண்டேலா காந்தியத்தைப்
பின்பற்றியதும் எதனால்? இதெல்லாம் மானுடத்தின் இயல்பு!
மானுடத்துக்கே உரிய பொதுப்பண்பு!

மானுட சமூகத்தின் பொருள் உற்பத்தி உலகளாவியது.
உள்ளூர்த் தன்மை மட்டும் கொண்ட பொருள் உற்பத்தி
என்பது என்றோ காலாவதி ஆகிப்போன ஒன்று.
முதலாளித்துவமானது ஏகாதிபத்தியமாக வளர்ச்சி
அடைந்த பின்னர், பொருள் உற்பத்தியின் சர்வதேசத்
தன்மை மேலோங்கி விட்டது. இந்தியச் சந்தையில்
சீனப்பொருட்களும் பிற அந்நிய நாட்டுப் பொருட்களும்
இறைந்து கிடப்பது இதற்கு மிகவும் பிரபலமான உதாரணம்.

உலகளாவிய உற்பத்தி தோன்றி விட்டதாலேயே, உலகளாவிய
உற்பத்திக் கருவிகளை உருவாக்கியோரை அங்கீகரிக்கும்
நோக்கில், உலகம் தழுவிய அளவில் நோபல் பரிசுகள்
வழங்கும் நடைமுறை ஏற்பட்டது. உற்பத்திக் கருவிகளான
அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு இதனால்தான் நோபல் பரிசு
வழங்கப் படுகிறது.

உலகளாவிய உற்பத்தி, உலகளாவிய சந்தை,
உலகளாவிய வணிகம் ஆகியவையே இன்றைய
உலகை இயக்கும் சக்திகள். எனவே உலகம் முழுமைக்குமான
சாதனைகளை நிகழ்த்திய அறிஞர்ளை நாடுகளின்
எல்லைகளைத் தாண்டி உலகம் போற்றுகிறது.
இந்திய இளைஞர்களின்  மனம் கவர்ந்தவர்களாக
பிடல் காஸ்ட்ரோ, சே குவேரா மட்டுமல்ல, பில் கேட்ஸ்,
ஸ்டீவ் ஜாப்ஸ் ஆகியோரும்தான் இருக்கிறார்கள்.

தமிழரின் தத்துவ மரபு!
-----------------------------------
இன்றைய ஏகாதிபத்திய யுகம் தோன்றுவதற்கு முன்னரே,
பண்டைத் தமிழகம் உலகளாவிய சிந்தனை மரபைக்
கொண்டிருந்தது.

"உலகம் யாவையும் தாமுள வாக்கலும்" என்றுதான் கம்பர்
தமது ராமாயணத்தின் முதலடியை எழுதுகிறார்.
" உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்" என்றுதான்
சேக்கிழார் பெரிய புராணத்தின் முதலடியை எழுதுகிறார்.
"வையகம் பணிப்ப வலனேர்பு வளைஇ" என்றுதான்
நக்கீரர் நெடுநல்வாடையைத் தொடங்குகிறார்.

சிந்தனைக் குள்ளரான சமஸ் மானுடத்தின் பொதுப் பண்புகளை
அறிய மாட்டார்.  தமிழரின் உலகம் தழுவிய சிந்தனை மரபை அறிய மாட்டார். வெளிநாட்டைச் சேர்ந்த லெனின், ஸ்டாலின்,
மாவோ  ஆகியோரை இந்தியக் கம்யூனிஸ்டுகள் போற்றுவது
தேச விரோதம் என்பதற்கு மேல் அவரின் மூளையால்
சிந்திக்க இயலாது.

சோஷலிசமும் கம்யூனிசமும் வேறானவை அல்ல!
----------------------------------------------------------------------------
சோசலிசம், கம்யூனிசம் பற்றிய திரு சமஸின் புரிதல்
மிகவும் இழிந்த பிறழ்புரிதல் ஆகும். சோசலிசமும்
கம்யூனிசமும் ஒன்றுக்கொன்று முரண்பட்ட தத்துவங்கள்
என்ற தவறான புரிதலின்மீது தொடர்ந்து எழுதிக்
கொண்டே போகிறார்.

முதலாளித்துவமும் ஏகாதிபத்தியமும் ஒன்றுக்கொன்று
முரண்பட்டவை அல்ல. ஏகாதிபத்தியம் என்பது
முதலாளித்துவத்தின் உச்ச கட்டம் என்றார் லெனின்.
அதைப்போலவே கம்யூனிசம் என்பது சோசலிசத்தின்
உச்ச கட்டம் ஆகும். இவை இரண்டும் ஒன்றுக்கொன்று
முரண்பட்டவை அல்ல.

திரு சமஸ் போன்றவர்களுக்கும் புரியும்படி சொல்ல
வேண்டுமென்றால், இளங்கலை பட்டப் படிப்பில்
சேருவது சோசலிசம் என்றால், பிஹெச்டி பயில்வது
கம்யூனிசம் ஆகும். இவ்விரண்டும் முரண்பட்டவை அல்ல.

சோசலிசம் தனிச் சொத்துரிமையை ஏற்றுக் கொள்கிறது
என்றும் கம்யூனிசம் முரட்டடியாக தனிச்சொத்துரிமையை
ஏற்க மறுக்கிறது என்றும் கூறி தனது தற்குறித் தனத்தை
வெட்கமின்றிப் பிரகடனம் செய்கிறார் சமஸ்.

சோசலிசம் கம்யூனிசம் இரண்டுமே முதலாளிய
வர்க்கத்தினரின் சொத்துரிமையை அங்கீகரிக்கவில்லை.
சோஷலிஸக் கட்டுமானத்தின்போது, எடுத்த எடுப்பிலேயே
முதலாளிகளின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும்.
சொத்துக்களைப் பறிமுதல் செய்ய கம்யூனிச சமுதாயம்
மலரும் வரை காத்திருக்க வேண்டும் என்ற தேவை அறவே இல்லை.

கியூபாவில் புரட்சிக்குப் பின் 1959ல் ஆட்சிக்கு வந்த பிடல்
காஸ்ட்ரோ, பதவிக்கு வந்த உடனேயே, பெரும் நிலவுடைமையைக்
கொண்டிருந்த பண்ணையார்களின் நிலத்தைப் பறிமுதல்
செய்தார். அவை லட்சக் கணக்கான  நிலமற்ற
விவசாயிகளுக்கு விநியோகிக்கப் பட்டன.
சோசலிஷத்தைக் கட்டுவதற்கான முதல் நிபந்தனையே
பெரு முதலாளிகள், பெரும் பண்ணையார்களின்
சொத்துக்களைப் பறிமுதல் செய்வதுதான்.

"கம்யூனிஸ்டுகளின் கொள்கையை ஒரு வரியில்
சொல்வதானால், தனிச்சொத்துரிமையை ஒழிப்பதுதான்
என்று கூறலாம்" என்கிறார் காரல் மார்க்ஸ்.
(கம்யூனிஸ்ட் அறிக்கை, அத்தியாயம்-2, பாட்டாளிகளும்
கம்யூனிஸ்டுகளும்).

சோஷலிசமும் சரி, கம்யூனிசமும் சரி இரண்டுமே
முதலாளிகளின் சொத்துக்களைப் பறிமுதல் செய்வதை
கோட்பாடாக ஏற்றுக் கொண்டவை. இதுவே மார்க்சியத்தின்
அடிப்படை. ஆனால் இந்த அடிப்படை உண்மை தெரியாமல்
சோசலிசம் தனிச்சொத்துரிமையை ஏற்பதாக சமஸ் கூறுவது
இந்த நூற்றாண்டின் ஆகப்பெரிய தற்குறித்தனம்.

உலகமயச் சூழலில் உள்ளூர் மட்டத்தில் கட்சியா?
------------------------------------------------------------------------------
கம்யூனிஸ்ட் கட்சிக்கு சோஷலிஸ்ட் கட்சி என்ற பெயர்தான்
பொருத்தமானது என்ற சமஸின் அபத்தங்கள் பதிலளிப்பதற்கே
அருகதை அற்றவை. அடுத்து அகில இந்திய அளவிலான
கட்சி கட்டக் கூடாது என்றும் அந்தந்த மாநில அளவிலேயே
கட்சியைக் கட்ட வேண்டும் என்றும் மூத்த மார்க்சிய
அறிஞர் எஸ் என் நாகராஜன் கூறியதை மேற்கோள்
காட்டும் சமஸ், அவரின் கேள்விக்கு இன்னும் கம்யூனிஸ்டுகள்
பதிலளிக்கவில்லை என்றும் பொய்யுரைக்கிறார்.

சமஸ் கூறுவது உண்மை அல்ல. அகில இந்தியக் கட்சியும்
ஏக இந்தியப் புரட்சியுமே இந்தியாவுக்குச் சரி என்ற
முடிவை பல்வேறு கம்யூனிஸ்ட் கட்சிகள் எடுத்துள்ளன.
உலகமயச் சூழலை எதிர்கொள்ள வேண்டிய நிலையில்
உள்ளூர் அளவில் கம்யூனிஸ்ட் கட்சி கட்ட வேண்டும்
என்ற போதனை பிற்போக்குத் தனமானது.

ஒரு கம்யூனிஸ்ட் கட்சியை எப்படிக் கட்ட வேண்டும் என்பது
குறித்த லெனினிய போதனைகள் எல்லா நாட்டுக்கும்
பொருந்துவன. ஒரு கம்யூனிஸ்ட் கட்சியானது கட்டுறுதி
வாய்ந்த அமைப்பாக இருப்பதற்குப் பதிலாக
சம்மேளனத் தன்மையுடன் (federation or confederation setup)
இருக்க இயலாது. அப்படி இருக்குமானால் அதனால்
புரட்சியை நடத்த இயலாது.

அதே நேரத்தில், கட்சியின் மக்கள் திரள் அமைப்புகளான
தொழிற்சங்கம், விவசாயிகள் சங்கம், பெண்கள், மாணவர்கள்,
இளைஞர்கள் ஆகியோருக்கான அமைப்புகள் ஆகியவை சம்மேளனத் தன்மையுடன்தான் (federation setup) கட்டப் படுகின்றன.
மக்கள் திரள் அமைப்புகளின் நெகிழ்ச்சியான அமைப்பு வடிவம்
கட்சிக்குப் பொருந்தாது.

சமூகத்தின் புறநிலைத் தேவைகளில் இருந்துதான் அமைப்பு
வடிவம் தீர்மானிக்கப் படுகிறது. இந்திய ஆளும் வர்க்கமும்
அரசும் ஏக இந்தியத் தன்மையுடன் மத்தியில் சகல
அதிகாரத்தையும் குவித்து வைத்துக் கொண்டிருக்கும் நிலையில்,
மாநில அளவில் கட்சி கட்டுவது என்ற ஆலோசனை
கேலிக்கூத்தானது. எஸ் என் நாகராஜன் அவர்களின் புரிதல்
தவறானது என்று ஆயிரம் முறை சொல்லியாகி விட்டது.

உலகமயப் பொருளாதாரத்தை அணுகுவது, மதத்தை
அணுகுவது, தேசியத்தை அணுகுவது, அரசியத்தை
அணுகுவது ஆகிய நான்கு சிக்கல்களுக்கு இந்தியக்
கம்யூனிஸ்ட் கட்சிகளிடம் தீர்வு இல்லை என்கிறார் சமஸ்.
தீர்வில்லை என்ற முடிவுக்கு வந்த அவர் அதற்கான எந்த
உதாரணத்தையும் காட்டவில்லை. எனவே அவரின் கூற்று
வெற்று அவதூறாக மட்டுமே நிற்கிறது. போகிற போக்கில்
ஏதேனும் அவதூற்றைத் தெளித்து விட்டுப் போவது
குட்டி முதலாளிய லும்பன்களின் வேலை.

இடதுசாரிக் கட்சிகள் ஒரே அமைப்பில் திரளாமல் பிரிந்து
கிடப்பது பற்றி அதிகமாகவே கண்ணீர் சிந்துகிறார் சமஸ்.
அவர் குறிப்பிடுகிற கம்யூனிஸ்ட் (CPI) மற்றும் மார்க்சிஸ்ட்
(CPM) கட்சிகளிடையே ஏற்கனவே செயல்பாட்டு ஒற்றுமை
(functional unity) சிறப்பாகவே உள்ளது. அமைப்பு ரீதியான
ஒற்றுமையை (organisational unity) புறநிலைத் தேவையை ஒட்டி
எப்போது வேண்டுமோ அப்போது அவர்களே ஏற்படுத்திக்
கொள்வார்கள். அதெல்லாம் ஒரு பிரச்சினையே இல்லை.
திமுக அதிமுக ஏன் இரண்டாகப் பிரிந்து கிடைக்க வேண்டும்
என்று கவலைப் படுவதுதான் சமஸின் அறிவெல்லைக்கு
உட்பட்டது.

வர்க்கப் போருக்குப் பதிலாக வர்க்க சமரசமா?
-----------------------------------------------------------------------
மகாத்மா காந்தி, அம்பேத்கார், பெரியார், அண்ணாத்துரை
ஆகியோரை கம்யூனிஸ்டுகள் சுவீகரித்துக் கொள்ள
வேண்டும் என்று அறிவுரை கூறுகிறார் சமஸ். ஏன் இந்த
நாலு பேருடன் நிறுத்தி விட்டார்? கருணாநிதி, மு க ஸ்டாலின்,
உதயநிதி, இன்பநிதி வரை சுவீகரித்துக் கொள்ளலாமே!
வட இந்தியாவில் லல்லு பிரசாத் யாதவ் முதல் ராபரி தேவி வரை
சுவீகரித்துக் கொள்ளலாமே!

மார்க்சியம் வர்க்கப் போராட்டத்திற்கான தத்துவம்.
காந்தியமோ வர்க்க சமரசத் தத்துவம். முதலாளிய
எதிர்ப்பை காந்தியம் ஏற்கவில்லை. தனிச் சொத்துரிமை
ஒழிப்பை காந்தியம் ஏற்கவில்லை. இந்நிலையில் காந்தியத்திடம்
இருந்து எதை சுவீகரிப்பது?

ஜோதிராவ் புலே, அம்பேத்கார், பெரியார் ஆகியோர்,
நிலவுகிற சமூக அமைப்பைத் தக்க வைத்துக் கொண்டே
அதில் உடனடியான சிற்சில மாற்றங்களைக் கோரிச்
செயல்பட்டனர். இவர்கள் அனைவரும் சீர்திருத்தவாதிகள்.
இவர்களின் பங்களிப்பை எவரும் மறுக்க இயலாது.
ஆனால் மார்க்சியம் மேலெழுந்தவாரியான
சீர்திருத்தங்களுக்காக அல்ல, ஒட்டு மொத்த சமூக
மாற்றத்துக்காக நிற்கிறது. அது நிலவுகிற சமூக அமைப்பைத்
தக்க வைப்பதை அல்ல, தகர்த்து எறிவதையே தனது
லடசியமாகக் கொண்டது.

மார்க்சியத்தை மானுடம் சுவீகரிக்க வேண்டும்!
---------------------------------------------------------------------------
மக்களை நேசிக்கும் யார் எவரும் அல்லது எந்தக் கட்சியும்
சுவீகரித்துக் கொள்ள வேண்டிய பலரை கம்யூனிஸ்ட்
இயக்கம் மட்டுமே பெற்றிருக்கிறது. அந்தப் பலரின்
பட்டியல் மிக நீளமானது. சுருக்கம் கருதி, ஒரே ஒருவரை
மட்டும் இங்கு குறிப்பிடுகிறேன். அவர்தான் சீனிவாச ராவ்.

வசதிமிக்க குடும்பத்தில் பிறந்து, கம்யூனிஸ்ட் கட்சியில்
சேர்ந்து, கீழ்த்தஞ்சைப் பகுதியில் நிலமற்ற விவசாயக்
கூலிகளின் நடுவில் வேலை செய்து, சேரிகளில் குடிசைகளில்
தங்கி, அமைப்பைக் கட்டி, சவுக்கடி சாணிப்பால் போன்ற
நிலப்பிரபுத்துவக் கொடுங்கோன்மையை எதிர்த்துப்
போராடி முறியடித்து, அடிமைத்தனத்தை ஒழித்து,
நிலமற்ற எளிய மக்களின் கூன் முதுகை நிமிர்த்திய
தோழர் சீனிவாச ராவ் ஒரு சிறந்த கம்யூனிஸ்ட். அவர்தான்
ஒட்டு மொத்த மானுடமும் சுவீகரித்துக் கொள்ள வேண்டிய
அருகதையைப் பெற்றவர். இதெல்லாம் சமசுக்குத் தெரியுமா?

திரு சமசின் கட்டுரை இன்னும் பல அருவருக்கத்தக்க
அபத்தங்களைத் தாங்கி நிற்கிறது. அவை பரிசீலிக்கவே
அருகதை அற்றவை. அவற்றுக்கெல்லாம் point to point rebuttal
அளிக்க இயலாது. மொத்தக் கம்யூனிஸ்டுகளுக்கும் அறிவுரை
வழங்கும் தலைமை ஸ்தானத்தில் தான் இருப்பதாகப் பாவித்துக்
கொண்டு, சுயஇன்பம் துய்த்துள்ளார் சமஸ். பேதை ஒருவன்
கழுவாத காலைப் படுக்கையில் வைத்தது போன்றது அவரின்
கட்டுரை.

கழாஅக்கால் பள்ளியுள் வைத்தற்றால் சான்றோர்
குழாஅத்துப் பேதை புகல்.
************************************************************
             

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக