புதன், 9 அக்டோபர், 2019

இயற்பியல் நோபல் பரிசு 2019.
----------------------------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன்
நியூட்டன் அறிவியல் மன்றம்
---------------------------------------------
ஒரு அமெரிக்கர், இரண்டு சுவிஸ் நாட்டவர் ஆக மொத்தம்
மூவருக்கு இயற்பியல் நோபல் பரிசு 2019 பகிர்ந்து
வழங்கப் பட்டுள்ளது.

ஜேம்ஸ் பீபிள்ஸ், அமெரிக்கா (வயது 84)
மிஷேல் மேயர், ஜெனீவா, சுவிஸ் (வயது 72)
திதியர் குவெலாஸ், ஜெனிவா, சுவிஸ் (வயது 53).
ஆகிய மூவருக்கும் 2:1:1 என்ற விகிதத்தில் பரிசு
பகிர்ந்து அளிக்கப் பட்டுள்ளது.

 ஜேம்ஸ் பீபிள்ஸ் பிரபஞ்சம் (universe) பற்றிய தமது
ஆராய்ச்சியை 1960களின் நடுவில் தொடங்கினார்.
20 ஆண்டுகளாக உழைத்து ஒரு பிரபஞ்ச மாதிரிச் சித்திரத்தை
(theoretical model) உருவாக்கினார். நமது பிரபஞ்சத்தில்
அறியப்பட்ட பகுதியாக 5 சதமும், அறியப்படாத
பகுதியாக 95 சதமும் இருக்கின்றன என்று
கண்டறிந்தார் ஜேம்ஸ் பீபிள்ஸ்.

69 சதம் கரும் ஆற்றல் (dark energy), 26 சதம் கரும்பொருள்
(dark matter), இரண்டும் சேர்ந்து பிரபஞ்சத்தில் 95 சதம்
கொண்டுள்ள பகுதி, கரும்பொருளாலும் கரும் ஆற்றலாலும்
ஆன பகுதி அறியப்படாத பிரபஞ்சம் என்றும்
5 சதம் மட்டுமே அறியப்பட்ட பிரபஞ்சம் என்றும்
ஒரு கோட்பாட்டை முன்வைத்தார் ஜேம்ஸ் பீபிள்ஸ்.

பல ஆண்டுகளுக்கு முன்பு கண்டறிந்த
முடிவுகளுக்காக, சுமார் 25 ஆண்டுகள் கழித்து
ஜேம்ஸ் பீப்பிள்ஸ் பரிசு பெறுகிறார். நியாயமான
அங்கீகாரத்தை காலம் கடந்து பெறுகிறார். மேலும்
ஐன்ஸ்டினின் பிரபஞ்ச மாறிலிக்கும் (cosmological constant)
உயிர்கொடுத்துள்ளார் ஜேம்ஸ் பீபிள்ஸ்.

புதிய கோள் கண்டுபிடிப்பு!
----------------------------------------------
சுவிஸ் விஞ்ஞானிகள் மிஷேல் மேயர், திதியர் குவெலாஸ்
இருவரும் சேர்ந்து 1995ல் ஒரு புதிய கோளைக் கண்டு பிடித்தனர்.
இது நமது சூரிய மண்டலத்துக்கு அப்பால் உள்ளது. அதே நேரத்தில்
நமது காலக்சியான பால்வீதியில்தான் உள்ளது.

இவர்கள் கண்டு பிடித்த இந்தப் புதிய கோள் ஒரு புறக்கோள்
(exoplanet) ஆகும். நமது சூரிய மண்டலத்துக்கு அப்பால்
உள்ள கோளே புறக்கோள் எனப்படுகிறது. இது நமது
சூரியனைப் போன்ற ஒரு நட்சத்திரத்தைச்
சுற்றிக் கொண்டிருக்கிறது. இதன் முக்கியத்துவம்
என்னவெனில், முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட
புறக்கோள் (exoplanet) இதுதான். இதைக் கண்டு
பிடித்தவர்கள் என்ற அடிப்படையில் இவர்களுக்கு
நோபல் பரிசு வழங்கப் படுகிறது. இன்று 4000க்கும்
மேற்பட்ட இத்தகைய புறக்கோள்கள்
கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. இதற்கு உந்துவிசையாக
இருந்தது இவர்களின் கண்டுபிடிப்பே.

இவர்கள் கண்டுபிடித்த புறக் கோளின் பெயர்
"51 Pegasi b" என்பதாகும். இந்தக் கோளானது ஒரு
நட்சத்திரத்தைச் சுற்றி வருகிறது. அந்த
நட்சத்திரத்திற்கு   51 Pegasi என்று பெயரிடப் பட்டுள்ளது.

இவர்கள் இருவருக்கும் காலம் கடந்த அங்கீகாரமாக
நோபல் பரிசு கிடைத்துள்ளது. 1995ல் கண்டுபிடிக்கப்
பட்ட புறக்கோளுக்கு 2019ல் இவர்கள் பரிசு பெறுகின்றனர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக