வெள்ளி, 18 மே, 2018

பேராசிரியர் சுதர்சனின் மறைவு
குவான்டம் இயற்பியலுக்குப் பேரிழப்பு!
----------------------------------------------------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன்
நியூட்டன் அறிவியல் மன்றம்
---------------------------------------------------------------------
இயற்பியல் அறிஞர் பேராசிரியர் சுதர்சன் கடந்த வாரம்
(மே 13, 2018) டெக்சாஸ் நகரில் தமது 86ஆவது வயதில்
மறைந்தார் என்னும் செய்தி அறிவியலை நேசிக்கும்
அனைவரையும் மீளாத்துயரில் ஆழ்த்தியது. நோபல்
பரிசுக்கு பலமுறை பரிந்துரைக்கப் பட்டவர் சுதர்சன்.
ஆனால் கைக்கெட்டியது வாய்க்கு எட்டாமல் போயிற்று
ஒவ்வொரு முறையும்.

இந்தியரான சுதர்சன் (1931-2018) கேரள மாநிலம்
கோட்டயத்திலுள்ள பள்ளம் என்னும் கிராமத்தில்
பிறந்தவர். தாம்பரம் கிறிஸ்துவக் கல்லூரியிலும்
சென்னைப் பல்கலையிலும் இயற்பியல் பயின்றார்.
சிறிது காலம் ஹோமி ஜஹாங்கீர் பாபாவுடன்
பணியாற்றிய பின்னர் நியூயார்க் சென்று
டாக்டர் பட்டம் பெற்றார். தமது மறைவு வரை
டெக்சாஸ் பல்கலையில்  பேராசிரியராகப்
பணியாற்றி வந்தார். 

கோட்டயத்தில் ஒரு பாரம்பரியம் மிக்க சிரியன்
கிறிஸ்துவக் குடும்பத்தில் பிறந்த ECG சுதர்சன்
(எண்ணக்கல் சாண்டி ஜார்ஜ் சுதர்சன்) அறிவியலைக்
கற்கக் கற்க தமது மத நம்பிக்கைகளுடன் முரண்பட்டு
மதத்தில் இருந்து வெளியேறினார். தம்முடன் படித்த
லலிதா என்ற பெண்ணைக் காதலித்து மணந்தார்.
இத்தம்பதியருக்கு மூன்று  குழந்தைகள் பிறந்தன.

1980களில் சென்னையில் உள்ள கணித அறிவியல் கழகத்தின்
(Institute of Mathematical Sciences)  இயக்குனராகப் பணிபுரிந்தார்
சுதர்சன். 2011இல் சுதர்சனின் 80ஆவது பிறந்தநாள்
கணித அறிவியல் கழகத்தில் சிறப்பாகக்
கொண்டாடப் பட்டது. அந்நிகழ்வில் நியூட்டன் அறிவியல் மன்றத்தின் சார்பாக, இக்கட்டுரை ஆசிரியர் பங்கேற்ற
நினைவுகளில் திளைத்து அவர் இல்லாத இன்றைய
துயரத்தை மறக்க முயல்கிறோம்.  .

2005ஆம் ஆண்டுக்கான இயற்பியல் நோபல் பரிசு
மொத்தம் மூவருக்குப் பகிர்ந்து வழங்கப் பட்டது.
இதில் அமெரிக்கரான ராய் ஜே கிளாபருக்கு
(Roy J Glauber) வழங்கப்பட்ட பரிசானது, நியாயமாக
சுதர்சன், கிளாபர் இருவருக்கும் பகிர்ந்து
வழங்கப் பட்டிருக்க வேண்டும். ஆனால் சுதர்சனை
ஒதுக்கி விட்டு, அமெரிக்கரான கிளாபருக்கு
மட்டும் பரிசு வழங்கியது ராயல் ஸ்வீடிஷ் அகாடமி.
ஒளியியல் ஒத்திசைவு பற்றிய குவான்டம்
கோட்பாட்டுக்குத்தான் (quantum theory of optical coherence)
பரிசு. ஆனால் அக்கோட்பாட்டின் முக்கிய அம்சமான
மூலைவிட்டக் குறியீட்டை (diagonal representation) உருவாக்கிய
சுதர்சனை ஒதுக்கி விட்டு, அவரின் குறியீட்டைப்
பயன்படுத்திக் கொண்ட கிளாபருடன் பரிசை நிறுத்திக்
கொண்டது நோபல் குழு.

நோபல் பரிசுக்குழுவின் இந்த பாரபட்சத்தைக்
கண்டித்து அறிவியல் உலகில் அதிர்வலைகள் வெடித்தன.
சுதர்சனுக்கு உரிய பரிசையும் சேர்த்து கிளாபருக்கு
வழங்கி விட்டு, சுதர்சனைக் கைவிட்டதைக் கண்டித்து
பல்வேறு இயற்பியலாளர்கள் ராயல் ஸ்வீடிஷ்
அகாடமிக்கு கடிதங்கள் எழுதினர். தன்னுடைய
பங்களிப்பை கிளாபரின் கணக்கில் சேர்ப்பதா
என்று கொதித்த சுதர்சனும், ராயல் ஸ்வீடிஷ்
அகாடமிக்கு கண்டனக் கடிதம் எழுதினார்.
சுதர்சன் ஒரு இந்தியர் என்பதால்தான் அவர்
புறக்கணிக்கப்பட்டார். ஒரு வெள்ளையருக்குச்
சமமாகவோ அல்லது அவரைவிட உயர்ந்தவராகவோ
ஒரு இந்தியர் இருப்பதை ஏற்க மறுக்கும்
உளவியல் கோணல் இந்த இருபத்தோராம்
நூற்றாண்டிலும் இருப்பதை மறுப்பதற்கில்லை.

சுதர்சனின் மகத்தான பங்களிப்பான மூலைவிட்டக்
குறியீடு (diagonal representation) பற்றிப் பேசாமல் அவரைப்
பற்றி எந்தக் கட்டுரையும் எழுத இயலாது. குவான்டம்
ஒளியியலில், ஒளியியல் புலங்களின் (optical fields)
ஒத்திசைவான நிலைகளை (coherent states) வர்ணிக்க
சுதர்சன் கண்டுபிடித்த மூலைவிட்டக்
குறியீடுதான் (diagonal representation) அன்று முதல் இன்று
வரை அனைத்து இயற்பியலாளர்களாலும்
பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதை 1963இல்
கண்டுபிடித்த சுதர்சன் அப்போதே அதைப்
பிரசுரித்துள்ளார்.

சுதர்சனின் மூலைவிட்டக் குறியீட்டை அப்படியே
பயன்படுத்திக் கொண்ட கிளாபர், அதைத் தம்முடையது
போலக் காண்பிக்கும் பொருட்டு. அதற்கு
P குறியீடு (P representation) என்று பெயரிட்டார்.
ஒளிப்புலங்களின் அடிப்படைக் கூறுகளாக
ஒத்திசைவான நிலைகளை (coherent states as basic entities)
முன்மொழிந்தது மட்டுமே கிளாபரின் பங்களிப்பு.
அவற்றை வர்ணிக்க உதவும் மூலைவிட்டக்
குறியீடும் அதற்கான கணித முறைமையும்
(mathematical formalism) சுதர்சனின் பங்களிப்பு. இவ்விரு
பங்களிப்புகளுமே பரிசுக்கு உரியவைதான். மூலைவிட்டக்
குறியீடு இல்லாமல் மேற்கொண்டு நகரவே இயலாது.
ஆனால் இவற்றில் ஒன்றைப் புறக்கணித்து மற்றொன்றை
மட்டும் பரிசுக்குரியதாக ஆக்கியது நோபல் குழுவின்
ஓரவஞ்சனையைப் புலப்படுத்தும்.

நோபல் குழு வெளியிட்ட 2005க்கான  நோபல் பரிசுக்கான
சிறப்புத் தகவல் குறிப்பில் (Advanced information), சுதர்சனின்
மூலைவிட்டக் குறியீடானது P குறியீடு அல்லது
சுதர்சன்-கிளாபர் குறியீடு என்று குறிப்பிடப்
பட்டுள்ளது. இது முறையற்றது. ஒரு குழந்தைக்கு
இரண்டு தந்தைகள் இருக்க முடியாது. மூலைவிட்டக்
குறியீடு முற்ற முழுக்க சுதர்சனைத் தவிர வேறு
யாருக்கும் சொந்தம் கிடையாது. எனவே நோபல்
குழுவின் இந்த அறிக்கை திருத்தப்பட வேண்டும்
என்று அகாடமிக்கு கடிதம் எழுதினார் சுதர்சன்.

2005இல் மட்டுமல்ல, 1979ஆம் ஆண்டிலும் சுதர்சனுக்கு
நோபல் பரிசு வழங்கப் பட்டிருக்க வேண்டும்.
அப்துஸ்  சலாம், வெயின்பெர்க், கிளாஸோ ஆகிய
மூவருக்கும் 1979க்கான நோபல் பரிசு வழங்கப் பட்டது.
அணுக்கரு மெல்விசையை மின்காந்த விசையுடன்
இணைக்கும் ஒன்றிணைப்புக் கொள்கைக்கான
(unification theory) பரிசு அது. இந்தப் பங்களிப்புக்கான
அடிப்படை சுதர்சனும் அவரின் ஆசிரியர்
'ராபர்ட் மார்ஷக்'கும் இணைந்து முன்மொழிந்த
வெக்டர் மைனஸ் ஆக்சியல் வெக்டர் கோட்பாடே
(V-A theory) ஆகும். இக்கோட்பாட்டை மேலும்
வளர்த்தெடுத்தே சலாம், வெயின்பெர்க், கிளாஷோ
ஆகிய மூவரும் நோபல் பரிசு பெற்றனர்.என்றாலும்
மூலக் கதையின் நாயகன் சுதர்சன் அங்கீகரிக்கப்
படவில்லை.

1905இல் ஐன்ஸ்டின் முன்மொழிந்த சிறப்புச் சார்பியல்
கோட்பாட்டின்படி, இந்தப்  பிரபஞ்சத்தில் ஒளியின்
வேகமே (நொடிக்கு 3 லட்சம் கி.மீ) அதிகபட்சமானது;
அதை மிஞ்சும் வேகம் எதுவுமில்லை. ஆனால் ஒளியின்
வேகத்தை மிஞ்சும் டாக்கியான் (tachyon) என்னும்
துகள்கள் இருப்பதாக 1962இல் சுதர்சன் வேறு இருவருடன்
இணைந்து முன்மொழிந்தார். இது ஒரு கற்பனைத்
துகள்தான். இதன் இருப்பு இந்த நிமிடம் வரை
பரிசோதனைகளில் நிரூபிக்கப் படவில்லை.எனினும்
அதனால் ஒன்றும் குறையில்லை. ஏனெனில்
இழைக்கொள்கை (string theory) கூறும் கிராவிட்டான்
என்ற துகளின் இருப்பும் கூட இன்று வரை
நிரூபிக்கப் படவில்லை. எதிர்காலத்தில் இவற்றின்
இருப்பு உறுதி செய்யப்படக் கூடும்.

குவான்டம் ஜீனோ விளைவு (quantum Zeno effect) என்பது
1977இல் சுதர்சன் முன்மொழிந்த மற்றுமொரு அரிய
கோட்பாடு. இதில் வரும் ஜீனோ என்பவர் கிமு ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த கிரேக்கத் தத்துவஞானி.
இவரின் புகழ்பெற்ற அம்பு முரண்பாட்டை (arrow paradox) நினைவுகூரும் விதத்தில் சுதர்சன் தமது கோட்பாட்டுக்கு இப்பெயரை வைத்தார். அளவிடுதல் உள்ளிட்ட பல்வேறு
காரணிகளால் ஒரு குவான்டம் சிஸ்டம்
பாதிப்படையும் என்பதே குவான்டம் ஜீனோ விளைவு.

அளவிடுவதால், அதாவது அளந்து பார்ப்பதால்
ஒரு சிஸ்டம் எப்படி பாதிப்படைய முடியும் என்பது
இன்றுவரை கேட்கப்படும் கேள்வி. குவான்டம்
விசையியலில் உள்ள அளவிடும் சிக்கலானது
(measurement problem) ஏற்கத்தக்க விளக்கத்தை
இன்றளவும் கோரி நிற்கிறது.The more watch, less work என்பது
ஓர் ஆங்கிலப் பழமொழி.மேலதிகாரி உறுத்து
உறுத்துப் பார்த்துக் கொண்டிருந்தால், பணியாளால்
சிறப்பாக வேலை செய்ய முடியாது அல்லவா! அதைப்
போல, அதிகமாக அளக்க அளக்க, புறச்சூழலுடன்
அதிகமாக வினை புரியப் புரிய ஒரு குவான்டம்
சிஸ்டம் பாதிப்படையும் என்பதே சுதர்சன் தரும்
விளக்கம்.

குவான்டம் இயற்பியல் என்பதே கணக்கற்ற அதிர்ச்சி
மதிப்புகளை (shock values) உடைய ஓர் அறிவியல்தான்.
எனவே சுதர்சனின் ஜீனோ விளைவும் சராசரி
வாசகர்களுக்கு அதிர்ச்சி அளிப்பதில் வியப்பில்லை.

உலக அளவில் பல்வேறு விருதுகளையும் கெளரவத்தையும்
சுதர்சன் பெற்றுள்ளார். குவான்டம் இயற்பியலில்
அவரது பங்களிப்பு நெடிய வீச்சு கொண்டது. இந்திய அரசு
அவருக்கு பாரத ரத்னா வழங்கிப் பெருமை அடைந்திருக்க வேண்டும். ஆனால் 2007இல் வழங்கிய பத்ம விபூஷண்
விருதுடன் நம் நாடு நிறைவடைந்து விட்டது.

விருதுகளால் அல்ல, தமது அளப்பரிய
பங்களிப்புகளால் சுதர்சன் என்றென்றும் நினைவு
கூரப் படுவார். குவான்டம் இயற்பியல் உள்ளவரை
சுதர்சனின் புகழ் நிலைத்து நிற்கும்.
******************************************************************

கட்டுரை ஆசிரியரின் முகவரி, மின்னஞ்சல், அலைபேசி

பி இளங்கோ சுப்பிரமணியன்
தலைவர், நியூட்டன் அறிவியல் மன்றம்,
சுபிக்சா அடுக்ககம்,
5/5, ஆறாவது தெரு, சௌராஷ்டிரா நகர்,
சூளைமேடு, சென்னை 600 094.

அலைபேசி: 94442 30176
மின்னஞ்சல்: ilangophysics@gmail.com
-----------------------------------------------------------------            



 






  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக