சனி, 26 மே, 2018

ஸ்டெர்லைட் போராட்டத்திற்குத் தத்துவார்த்தத்
தலைமை வழங்குவது பின்நவீனத்துவமே!
ஸ்டெர்லைட் பிரச்சினைக்குத் தீர்வு என்ன?
ஆலையை மூடுவது தீர்வாகுமா?
கட்டுரையின் இரண்டாம் பகுதி!
----------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
--------------------------------------------------------------------------
தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில்
NGOகளின் பங்கு இருந்ததா? இந்தக் கேள்விக்கு கண்ணை
மூடிக்கொண்டு ஆம் என்று பதில் சொல்லி விடலாம்.
இந்தியாவில் நடக்கும் எந்தவொரு மக்கள்
போராட்டத்திலும் NGOகள் கலந்து விடுவார்கள்.

மறைந்த லெனின் உயிருடன் மீண்டு வந்து, ஸ்டெர்லைட்
போராட்டத்தை நடத்தினாலும், அந்தப் போராட்டத்திலும்
லெனினுக்குத் தெரியாமல் NGOகள் பங்கு பெற்று
விடுவார்கள். லெனினால் அதை அறியவோ தடுக்கவோ
இயலாது.ஜீரணிக்கக் கடினமாக இருந்தாலும் இதுதான்
உண்மை. காற்று நுழையாத இடத்தில் கூட NGOகளும்
அவர்களின் ஆட்களும் நுழைந்து விடுவார்கள்.

NGOகள் செயல்படும் விதம் (modus operandi) பற்றி எதுவும்
தெரியாதவர்கள் மட்டுமே நாம் கூறியதை ஏற்கத்
தயங்குவார்கள்.எனவே ஸ்டெர்லைட் போராட்டத்தில்
NGOகளும் பங்கெடுத்தார் என்பது உண்மையே. அதே
நேரத்தில், அவர்கள் பத்தோடு பதினொன்று என்ற
விதத்தில் மற்றவர்களைப் போல் பங்கேற்றார்களே
தவிர, விஷயங்களைத் தீர்மானிக்கிற இடத்தில்
இல்லை என்ற உண்மையையும் நாம் காணத்
தவறக் கூடாது.  (It is true that the NGOs did not dictate the terms).

அடுத்து பங்குத் தந்தைகளின் பங்கு ஸ்டெர்லைட்
போராட்டத்தில் எவ்வளவு இருந்தது என்பதும்
விவாதத்துக்கு உரியதாகி உள்ளது. பங்குத்
தந்தைகள், பங்கு கிடைக்காத தந்தைகள்,
பாதிரியார்கள் என்று பலருக்கும் ஸ்டெரிலைட்
போராட்டத்தில் செயலூக்கமுள்ள பங்கு இருந்தது.

தூத்துக்குடியில் வாழும் பிரதான சமூக மக்களில்
பலர் கிறிஸ்துவர்கள். எனவே பாதிரியார்கள் இந்தப்
போராட்டத்தில் பங்கேற்பதில் குறை காண முடியாது.

லெனின் காலத்திலேயே ரஷ்யப் புரட்சிக்கு முன்னதாக
கப்போன் பாதிரியார் என்பவர் ஜார் மன்னனின்
நல்லெண்ணத்தை நம்பி மக்களை ஊர்வலமாக
அழைத்துச் சென்றார். போல்ஷ்விக்குகளின்
அறிவுரையை மீறி மக்கள் கப்போன் பாதிரியாரின்
தலைமையில் திரண்டனர். ஜார் மன்னன் மக்களை
ரத்த வெள்ளத்தில் மூழ்கடித்தான்.

மக்கள் தங்களின் சொந்த அனுபவங்கள் மூலமாகவே
பாடம் கற்றுக் கொள்கின்றனர் என்றார் லெனின்.
இந்த நிகழ்வுக்குப் பின்னரே மக்கள்
போல்ஷ்விக்குகளின் தலைமையில் அணி திரண்டனர்.

ஸ்டெர்லைட்டைக் காப்பாற்றுவதற்காக சாதிக்
கலவரங்கள் தூண்டி விடப்பட்டன என்பது
தூத்துக்குடியின் வரலாறு. இது உள்ளூர்
அரசியல்வாதிகளின் கைங்கரியம் ஆகும்.
ஸ்டெர்லைட்டால் விலைக்கு வாங்கப் படாத
அரசியல்வாதி தூத்துக்குடி மாவட்டம் முழுவதும்
ஒருவர்கூட இல்லை.

ஸ்டெர்லைட் ஆலையை மூடி விட்ட பிறகும்
தூத்துக்குடியில் காற்று மாசு குறையும் என்றோ
சுற்றுச் சூழல் மேம்படும் என்றோ கூற இயலாது.
ஸ்டெர்லைட் தவிர வேறு பல ரசாயன ஆலைகளும்
தூத்துக்குடியில் உள்ளன. ஸ்பிக் (SPIC) என்னும் ரசாயன
உரம் தயாரிக்கும் ஆலை உள்ளது. அனல் மின்
நிலையங்கள் உள்ளன. அவை  வெளியேற்றும்
புகையும், காற்றில் பரவும் சாம்பலும் கரித்துகளும்
தொடர்ந்து தூத்துக்குடியில் வளி மண்டலத்தை நச்சுப்
படுத்திக் கொண்டே இருக்கும்.

தூத்துக்குடி ஊரிலும் சுற்றியுள்ள கிராமங்களிலும்
வாழும் மக்கள் சுவாசக் கோளாறுகள், மூச்சுத்
திணறல் முதல் தோல் நோய்கள், புற்றுநோய் வரை
எல்லா விதமான நோய்களுக்கும் இலக்காகி
உள்ளனர். இது கண்கூடாகத் தெரிகிற உண்மை.
நிலத்தடி நீர்மட்டம் கணிசமாகக் குறைந்துள்ளதும்
குடிநீர் மாசு பட்டிருப்பதும் உண்மை.

அனால் இவை அனைத்துக்கும் ஒரே காரணம்
ஸ்டெர்லைட் மட்டுமே என்று கருதுவதும்,
ஸ்டெர்லைட்டை மூடுவதே சர்வரோக நிவாரணி
என்று கருதுவதும் சரியல்ல. இது அறிவியலுக்கு
எதிரான போக்கு ஆகும்.

ஸ்டெர்லைட்டை மூடிய பிறகும் காற்று மாசும்
நோய்களும் கொஞ்சமும் குறையாமல் முன்பிருந்த
அளவிலேயே இருக்கும். இதுதான் உண்மை.

எனவே ஸ்டெர்லைட்டை மூடுவது என்பது எதற்கும்
தீர்வாகாது.தூத்துக்குடியில் உள்ள எல்லா ரசாயன
ஆலைகளையும், அனல் மின் நிலையங்களையும்
மூட வேண்டும். ஏனெனில் அவையும் காற்றை,
சூழலை மாசு படுத்துகின்றன. இது சாத்தியமா?

இவ்வாறு எல்லாவற்றையும் மூடிவிட்டு, நிலப்பிரபுத்துவ
காலத்தின் உற்பத்தி முறைக்குத் திரும்ப முடியாது.
சமகாலத்தின் பொருளுற்பத்தி முறை முதலாளியப்
பொருள் உற்பத்தி முறை ஆகும். அதாவது
தொழிற்சாலைகளைத் தொடங்கி பண்டங்களை
உற்பத்தி செய்வதாகும். இதைத் தடுத்து நிறுத்த
வேண்டும் என்று கோருவது மார்க்சியப் பார்வை
ஆகாது. அது பிற்போக்குத்தனமான பார்வை ஆகும்.

தொழிற்சாலை என்றாலே பண்ட உற்பத்தியோடு
கூடவே மாசையும் உற்பத்தி செய்துதான். சூழலை
மாசு படுத்தாத எந்த ஒரு ஆலையும் உலகில்
எங்கும் இல்லை. மாசு படுத்துகிறது என்பதற்காக
ஆலையை மூட வேண்டும் என்று கிளம்பினால்,
உலகில் எந்த ஆலையையும் நடத்த முடியாது.
எனவே ஸ்டெர்லைட்டை மூடுவது என்பது தீர்வல்ல.

ஆலையை மூடு என்பதன் பொருள் உற்பத்தியை
நிறுத்து என்பதாகும். அதாவது உற்பத்தியே கூடாது
என்பதாகும்.இது பின்நவீனத்துவப் பார்வை.
ஸ்டெர்லைட் சிக்கலுக்கு பின்நவீனத்துவம் வழங்குகிற
தீர்வு ஆலையை மூடு, உற்பத்தியை நிறுத்து,
உற்பத்தியே கூடாது என்பதுதான். இதை
ஏற்க இயலாது.

பின்நவீனத்துவம் கட்டமைக்க விரும்பும் உற்பத்தி
உறவானது உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சிக்கு
பெரும் முட்டுக்கட்டை போடுவதாகும். இது சமூக
வளர்ச்சியை பின்னுக்குத் தள்ளும் முயற்சியாகும்.

கூடங்குளத்தில் அணுஉலையை மூடு என்று தவறான
தீர்வு கூறிய பின்நவீனத்துவம், தூத்துக்குடியிலும்
ஸ்டெர்லைட்டை மூடு என்று அதே பாணியிலான
தீர்வை முன்வைக்கிறது. ஸ்டெர்லைட் மட்டுமல்ல,
தமிழகத்தில் நிகழும் சுற்றுச் சூழல் என்ற பெயரிலான
பல்வேறு போராட்டங்களுக்கு பின்நவீனத்துவமே
தத்துவார்த்தத் தலைமை வழங்குகிறது. பின்தங்கிய
உற்பத்தி உறவுகளுக்கு சமூகத்தை இட்டுச் செல்வதும்,
உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சிக்கு பெருந்தடையாக
இருப்பதுமே பின்நவீனத்துத்தின் நோக்கம்.
    
மக்களின் பின்தங்கிய உணர்வு நிலைக்கு வால்
பிடிப்பது மார்க்சியம் அல்ல. மாறாக அறிவியல்
பார்வையுடன் பிரச்சனைகளை அணுகித் தீர்வு
காண்பதே அறிவுடைமை ஆகும். அதுவே மார்க்சிய
வழிமுறை ஆகும்.

எடப்பாடி அரசின் அரைப்பாசிச அடக்குமுறைகள்
முறியடிக்கப்பட்டு வேண்டியவை. ஆனால் அந்த
அடக்குமுறையை வைத்துக் கொண்டு ஸ்டெர்லைட்
ஆலை பற்றித் தீர்மானிக்க முடியாது.

அப்படியானால் என்ன செய்ய வேண்டும்?
ஸ்டெர்லைட் ஆலையானது மாசுக்கட்டுப்பாடு
குறித்த சட்ட திட்டங்களை, விதிகளை ஒழுங்காகப்
பின்பற்றுகிறதா என்று கண்காணிக்க வேண்டும்.
இதற்காக ஒரு மக்கள் கமிட்டியை அமைக்க
வேண்டும். அக்குழுவில் சுற்றுச் சூழல் மற்றும்
மாசுக் கட்டுப்பாடு நிபுணர்களும் இடம் பெற
வேண்டும். இந்தக் குழுவுக்கு அரசு தேவையான
அதிகாரம் வழங்க வேண்டும். ஸ்டெர்லைட் ஆலை
நிர்வாகம் இந்த மக்கள் கமிட்டிக்கு கட்டுப்
பட்டதாகவும், அதற்குப் பதில் சொல்லக் கடமைப்
பட்டதாகவும் இருக்குமாறு சட்டம் இயற்ற வேண்டும்.

ஸ்டெர்லைட் ஆலை தற்காலிகமாக ஒரு ஆறு மாத
காலம் மூடியிருக்கலாம். மீண்டும் திறக்கும்போது,
மாசு கட்டுப்படுத்தப் பட்டு, சூழலுக்கு இணக்கமாக
அந்த ஆலை செயல்பட வேண்டும். அதை உத்தரவாதம்
செய்ய மக்கள் போராட வேண்டும்.

எடப்பாடி அரசின் அடக்குமுறைகள், காவல் துறையின்
அத்து மீறல்கள் ஆகியவை மக்களின் விசாரணைக்கு
உட்படுத்தப்பட்டு குற்றவாளிகள் கடுமையாகத்
தண்டிக்கப்பட வேண்டும். இது மக்களின்
போராட்டத்தால் மட்டுமே சாதிக்க முடியும்.
**************************************************************

 
.

  



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக