திங்கள், 28 மே, 2018

ஸ்டெர்லைட் நிரந்தரமாக மூடல்!
அடுத்து என்ன செய்ய வேண்டும்?
------------------------------------------------------------
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக
மூடுவதாக தமிழக அரசு அரசாணை பிறப்பித்து
உள்ளது. இதைத் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட
கலெக்டர் ஆலைக்கு சீல் வைத்தார்.

போராடிய தூத்துக்குடி மக்களுக்கு இது ஆறுதலையும்
நிம்மதியையும் தரும். இந்த ஆலைமூடலை எதிர்த்து
ஸ்டெர்லைட் நிர்வாகம் உச்ச நீதிமன்றத்துக்குச்
செல்லும். தீர்ப்பு எப்படி வேண்டுமானாலும் வரும்.

ஸ்டெர்லைட் நிறுவனத்திடம் சூழலை மாசு படுத்திய
குற்றத்துக்காக ரூ 5000 கோடி நஷ்ட ஈடு கேட்டு
தமிழக அரசு உச்சநீதி மன்றத்தில் வழக்குத்
தொடர வேண்டும். இக்கருத்தை ஏற்கனவே
தெரிவித்தோம். அதை மீண்டும் வலியுறுத்துகிறோம்.
**************************************************************
ஸ்டெர்லைட்டை இழுத்துமூட அரசால் முடியுமா?
கிட்டத்தட்ட இருபது வருடகாலம் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ...அதன் அதிகாரங்கள்:...செயல்பாடுகள்,,..அது சார்ந்த நடைமுறைகளோடு தொடர்பில் இருந்தவன் என்ற முறையில் எனக்குத்தெரிந்த சில விஷயங்களை பகிர்ந்துகொள்கிறேன்...
தமிழகத்தைப்பொறுத்தவரை மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தொழிற்சாலைகளை மூன்றுவிதமாக பிரித்திருக்கிறது... சிவப்பு , ஆரஞ்சு மற்றும் பச்சை... [ எந்தெந்த தொழில்கள் எந்த பிரிவில் வரும் என்ற பட்டியலுக்கான லிங்கை பதிவின் இறுதியில் கொடுத்திருக்கிறேன்...]
அதிக‌ப்படியான , சுற்றுச்சூழலை பாதிக்கக்கூடிய கழிவுகளை வெளியேற்றும் தொழிற்சாலைகள் ரெட் கேட்டகரியில் வருகின்றன...
ரெட் பிரிவில் வரும் நிறுவனம் ஆரம்பிப்பது முன்பாக , மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடம் இசைவாணை பெறவேண்டும்... அதன்பிறகுதான் அந்த தொழிற்சாலைக்கு மின் இணைப்பே வழங்கப்படும்....
முதலில் நீர் மாசுபாட்டை எடுத்துக்கொள்வோம்...
இசைவாணை பெறுவது சுலபமல்ல... முதலில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படவேண்டும்... வெளியேறும்கழிவுகளைப்பொறுத்து அதில் பலகட்ட அமைப்புகள் உண்டு...ஒவ்வொரு கட்டத்திலும் புகைப்படங்கள் எடுத்து வாரியத்திடம் ஒப்புதல் பெற்ற பிறகே அடுத்த கட்டத்துக்கு செல்ல முடியும்...ஒவ்வொரு கட்டத்திலும் டி.இ அல்லது ஜே.இ ஆகியோர் ஆய்வு செய்வர்...
கழிவுநீர் சேகரிக்கப்படும் இடத்தில் இருந்து , சுத்திகரிப்புக்குச்செல்லும் ஒவ்வொருகட்டத்திலும் , ஒவ்வொரு பைப்பிலும் டிஜிட்டல் மீட்டர்கள் பொருத்தப்படும்...எல்லா மீட்டர்களின் ரீடிங்குகளும் பதிவுசெய்யப்படவேண்டும்...எல்லா ரீடிங்குகளும் ஒருங்கிணைக்கப்ப்பட்டு , டேலி செய்யப்பட வேண்டும்...
அதாவது கழிவு நீர் சுத்திகரிப்பின் ஒவ்வொரு கட்டமும் முறையாக ஆவணப்படுத்தப்பட்டு , சீரான இடைவெளிகளில் மா.க வாரியத்திடம் ஒப்புதல் பெற்றே ஆகவேண்டும்...
ரீடிங் டேலி செய்வது எப்படி?
நம் ஆலையின் உற்பத்தி ஆகும் பொருள் என்ன... அதற்கு மொத்தம் ஒரு நாளைக்கு எத்தனை லிட்டர் தண்ணீர் செலவாகும் என்பதன் அடிப்படையில்தான் இசைவாணை வழங்கப்படும்... அதற்குமேல் நம் உற்பத்தி கொள்ளளவை அதிகரிக்க முடியாது...
ஒரு லட்சம் லிட்டர் கழிவு நீர் சுத்திகரிப்பு செய்யப்பட எடுத்துக்கொள்கிறோம்... முதல் கட்ட சுத்திகரிப்பில் அறுபதாயிரம் லிட்டர் சுத்தம் செய்யப்பட்டு ஆலையின் மறுபயன்பாட்டுக்கு அல்லது வெளியேற்றப்படுகிறது...அதற்கான மீட்டர் ரீடிங் பதிவு செய்யப்படும்...
மீதி நாற்பதாயிரம் லிட்டர் இரண்டாம் கட்ட சுத்திகரிப்புக்குச்செல்கிறது...அதில் இருபத்தைந்தாயிரம் லிட்டர் சுத்திகரிக்கப்பட்டு மறுபயன்பாட்டுக்குச்செல்லும்...அந்த மீட்டர் ரீடிங்கும் பதிவாகியிருக்கும்...
மீதமுள்ள பதினைந்தாயிரம் லிட்டர் மூன்றாவது கட்ட சுத்திகரிப்புக்குச்செல்லும்... இதில் பத்தாயிரம் லிட்டர் மறுபயன்பாட்டுக்கு செடுத்துச்செல்லப்படும்... [ இங்கும் மீட்டர் - ரீடிங் இருக்கும்...] மீதி உள்ள ஐந்தாயிரம் லிட்டர் கூழ் போன்ற கரைசல் இறுதியாக உலர்களம் மூலமாகவோ , எவாப்பொரேட்டர் தொழில்நுட்பம் மூலமாகவோ ஆவியாக்கப்படும்... இறுதியாக மிஞ்சும் உப்பு அல்லது உலர்ந்த மண் தனியாக சேமிக்கப்படும்...
இந்த எல்லா மீட்டர்களின் ஆரம்பம் - முடிவு ரீடிங்குகள் தினந்தோறும் பதிவுசெய்யப்பட்டு , பரமாரிக்கப்படவேண்டும்... வாராவாரமோ , அல்லது திடீர் சோதனைக்கு வரும் மா. க. வாரிய பொறியாளர்களிடமோ ஒப்புதல்பெறவேண்டும்... கழிவுநீரில் ஆரம்பித்து , ஒவ்வொரு கட்ட ரீடிங்கும் மற்றதோடு டேலி ஆகவேண்டும்...இல்லாவிட்டால் முறைகேடு நடந்தது உறுதியாகிவிடும்... பெரும் தொழிற்சாலைகளில் இந்த மீட்ட்ர்கள் ஆன்லின் மூலம் இணைக்கப்ட்டு மா.க.வாரியத்தில் இருந்தே கண்காணிக்கும் வசதியும் உண்டு..இவையெல்லாம் போக முறைகேடுகளை கண்காணிக்க பறக்கும் படையும் உண்டு...
[ மிக முக்கியமான விஷயம்... இந்த ஒப்புதல் விவகாரத்தில் கணிசமாக லஞ்சம் விளையாடும்... ]
காற்று மாசு அளவைக்கண்காணிக்கவும் கிட்டத்தட்ட இதேபோன்ற நடைமுறைகள்தான்...
இனி ஸ்டெர்லைட்டுக்கு வருவோம்...
நான் மேலே சொன்ன நடைமுறைகளை அவர்கள் நிச்சயம் பின்பற்றியிருப்பார்கள்... அதாவது முறையான சுத்திகரிப்பு நடைமுறைகளை பின்பற்றினார்களோ இல்லையோ , எல்லாம் பக்காவாக ஆவணப்படுத்தப்பட்டிருக்கும்... அதன் ஒவ்வொரு கட்டத்திலும் தூத்துக்குடி மாவட்ட மா.க வாரிய செயற்பொறியாளரின் ஒப்புதலும் பெறப்பட்டிருக்கும்...
அரசு தடைவிதித்தால் அவர்கள் சும்மா இருக்கப்போவதில்லை... உடனடியாக நீதிமன்றம் செல்வார்கள்...அங்கு செண்டிமென்ட்டெல்லாம் செல்லுபடியாகாது...ஆதாரங்கள் வேண்டும்... இந்த நிமிடம் வரை அவர்கள் சரியாக செயல்பட்டதற்கான எல்லா ஆதாரங்களையும் சமர்ப்பிப்பார்கள்...ஒவ்வொரு கட்டத்திலும் தமிழக அரசு அதிகாரிகளின் ஒப்புதலைப்பெற்றதையும் காட்டுவார்கள்...
அப்போது தமிழக அரசு என்ன செய்யமுடியும்? தவறு நடந்திருக்கிறது என்று ஒப்புக்கொண்டால் , ஒட்டுமொத்த அரசு நிர்வாகமும் தவறு செய்ததை , லஞ்சம் பெற்றுக்கொண்டு கடமை தவறியதை ஏற்றுக்கொண்டதாக ஆகிவிடும்...இல்லாவிட்டால் ஸ்டெர்லைட் செயல்பட நீதிமன்றம் உத்தரவிடும்...
பிடிவாதமாக அந்த ஆலையை மூடியே ஆகவேண்டும் என்று தமிழக அரசு பிடிவாதமாக நின்றால் , வேதாந்தா குழுமத்துக்கு பல ஆயிரம் கோடிகள் நஷ்ட ஈடு கொடுக்கவேண்டும்...சம்பளம் போடவே சிங்கியடிக்கும் மாநில அரசிடம் ஏது அவ்வளவு பணம்..?.


எனவே.. நடப்பதெல்லாம் நாடகம்... நாம் வேடிக்கை பார்ப்போம்...


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக