ஞாயிறு, 27 மே, 2018

ஸ்டெர்லைட்டிடம் இருந்து ரூ 5000 கோடி
நஷ்ட ஈடு வசூலிக்க வேண்டும்!
ஸ்டெர்லைட் பிரச்சினைக்குத் தீர்வு என்ன?
ஆலையை மூடுவது தீர்வாகுமா?
கட்டுரையின் மூன்றாவது மற்றும் இறுதிப் பகுதி!
---------------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
------------------------------------------------------------------------------------
அணு  உலைகளும் அணு மின்சாரமும்  மானுட
வரலாற்றில் புதிய வரவுகள். இரண்டாம்  உலகப்
போருக்குப் பின்னரே அணு மின்சாரம் வந்தது.

ஆனால் மூலத்தாதுவில் இருந்து தாமிரத்தைப்
பிரித்தெடுப்பது  மூவாயிரம் ஆண்டுகளாக
நடந்து கொண்டிருக்கிறது. 3000 ஆண்டுகளுக்கு
முந்திய நம் முன்னோர்கள் நம்முடன் ஒப்பிடும்
போது காட்டு மிராண்டிகளே. ஆனால் அவர்கள்
மூலத்தாதுவில் இருந்து தாமிரத்தை அழகாகப்
பிரித்தெடுத்தார்கள். மானுட வரலாற்றில்
வெண்கல யுகம் (bronze age) என்று படிக்கிறோம்.
வெண்கலம் என்பது தாமிரமும்  தகரமும்
கலந்து செய்யப்பட ஒரு கூட்டு உலோகம் (alloy).
தாமிர உற்பத்தி என்பது மானுட வரலாற்றை
அடையாளப் படுத்தும் முதன்மைக் காரணியாக
இருந்தது என்பதை வெண்கல யுகம் என்ற பகுப்பு
உணர்த்துகிறது.

ஆக, தாமிர உற்பத்தி என்பது 3000 ஆண்டுத் தொன்மை
மிக்கது.இன்றைய உலகில் பல நாடுகளில் தாமிரம்
பிரித்தெடுக்கப் படுகிறது. சீனா இதில் முதல்
இடத்தில் உள்ளது. 2016, 2017 ஆண்டுகளில் சீனாவின்
தாமிர உற்பத்தி முறையே 19 லட்சம் டன், 18,60,000 டன்
என்பதாக இருந்தது.

தென்னமெரிக்க நாடான சிலியும், ஜப்பானும்
இன்னும் சில நாடுகளும் தாமிர உற்பத்தியில்
முன்னணியில் உள்ளன. இந்தியாவின் தாமிர
உற்பத்தி அண்மைக் காலங்களில் 6 லட்சம் டன்
என்ற அளவில் உயர்ந்துள்ளது.

இந்தியாவில் குஜராத், ஜார்கண்ட், ராஜஸ்தான் ஆகிய
மாநிலங்களில் தாமிரம் பிரித்தெடுக்கும் ஆலைகள்
உள்ளன. குஜராத்தில் உள்ள பிர்லா குழுமத்தின்
ஹிண்டால்கோ ஆலையில் தூத்துக்குடியின்
ஸ்டெர்லைட்டை விட. பல மடங்கு அதிகமாக
தாமிரம் எடுக்கப் படுகிறது என்பதை முந்தைய
கட்டுரையில் பார்த்தோம்.

குஜராத்திலோ ஜார்கண்டிலோ ராஜஸ்தானிலோ
தாமிரம் பிரித்தெடுத்தலில் எந்தப் பிரச்சினையும்
இல்லை. காற்றை நீரை மண்ணை சுற்றுச் சூழலை
மாசு படுத்துகிறது என்று எந்தப் புகாரும் இல்லை.
ஆனால் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் நிறுவனம்
பற்றி மட்டுமே புகார்கள் வந்துள்ளன. இதன் பொருள்
என்ன? சுற்றுச் சூழல் விதிகளையும் மாசுக் கட்டுப்பாடு
விதிகளையும் முறையாகக் கடைப்பிடித்தால்
தாமிர உற்பத்திக்கான தொழில்நுட்பம்
பாதுகாப்பானதே என்பதுதானே!
 
ஆனால் தூத்துக்குடியிலும் அதன் சுற்றுப்புற
கிராமங்களிலும் சுற்றுச்சூழல் மிகக் கடுமையாக
மாசு பட்டுக் கிடக்கிறது என்பதும் மக்கள் நோய்களுக்கு
இலக்காகி இருக்கின்றனர் என்பதும் உண்மை.
இதன் பொருள் என்ன? ஸ்டெர்லைட் நிறுவனம் சுற்றுச்
சூழல் விதிகளையும் மாசுக் கட்டுப்பாடு விதிகளையும்
கடைப்பிடிக்காமல், சூழலை நச்சுப் படுத்துகிறது
என்பதுதானே!

ஆக குற்றவாளி யார்? தாமிரம் பிரித்தெடுக்கும்
தொழில்நுட்பமா? அல்லது விதிகளைப் பின்பற்றாத
ஸ்டெர்லைட்டா?   ஸ்டெர்லைட்தான் குற்றவாளி.
(அடுத்த பத்தியில் விரிவாகப் பார்ப்போம்)
அப்படியானால், ஸ்டெர்லைட்டின் குற்றத்துக்காக
தாமிர உற்பத்தியே கூடாது, தொழிற்சாலைகளே
கூடாது என்று சொல்லுவது எப்படிச் சரியாகும்?
அது அறிவியலுக்கு எதிரான பிற்போக்கான நிலை
அல்லவா?

மூலத்தாதுவில் இருந்து தாமிரம் பிரித்தெடுத்தல்
பற்றிய பாடம் பத்தாம் வகுப்பு அறிவியல் புத்தகத்தில்
வேதியியல் பகுதியில் (chemistry portion) உள்ளது.
வாசகர்கள் அதைப் படிப்பது நல்லது.
 
தாமிரத் தாதுவில் (copper ore) பல்வேறு வகைகள் உண்டு.
பெரும்பாலும் காப்பர் பைரைட்ஸ் (copper pyrites, CuFeS2)
என்னும்   தாதுவில் இருந்துதான் தாமிரம்
பிரித்தெடுக்கப் படுகிறது. மூலத்தாதுவில் இருந்து
தாமிரத்தைப் ,பிரிக்கும்போது,
1. கந்தகம் (sulphur) 2. பாஸ்வரம் (phosphorous) 3.ஆர்செனிக்
(Arsenic) ஆகிய தனிமங்கள் தாதுவில் இருந்து நீக்கப் பட வேண்டும்.இத்தனிமங்கள் ஆக்சைடுகளாக
(SO2,  P2O5, As2O3)  மாற்றப்பட்டு வெளியேற்றப் படும்.
எஞ்சியிருக்கும் தேவையற்ற பிற பொருட்களும்
நீக்கப்பட்ட பிறகு தனிமமாக உள்ள தாமிரம்
(elemental copper) கிடைக்கும். இவ்வளவுதான் டெக்னாலஜி!
(Copper extractionஐ முழுமையாக விவரிப்பதற்கு இல்லை;
தகுந்த பாடப் புத்தகங்களைப் படிக்கலாம்).

கந்தக டை ஆக்ஸைடை (SO2) வளிமண்டலத்தில்
கலந்தால், காற்று மாசுபடும். எனவே அதை
ஆலையிலேயே (plant) தக்க வைத்துக் கொண்டு,
அதை கந்தக அமிலமாக (Suphuric acid H2SO4) மாற்றி
விடுவார்கள். தாமிர உற்பத்தி செய்யும் ஒரு
ஆலையில், கூடவே ஏன் அமிலத்தையம்  உற்பத்தி
செய்கிறார்கள் என்ற கேள்விக்கு விடை இதுதான்.
அது போலவே பாஸ்பாரிக் அமிலம் உற்பத்தி
செய்யப்படும்.

மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அறிக்கை மற்றும்
நீரி என்னும் சூழல் காப்பு அமைப்பின் அறிக்கை
(NEERI = National Environmental Engineering Research Institute)
ஆகியவற்றின் தரவுகளின் படி, தூத்துக்குடியில்
வளிமண்டலத்தில் உள்ள கந்தக டை ஆக்ஸைடின்
அளவு அனுமதிக்கப்பட்ட அளவை விட மிகப்
பல மடங்கு அதிகமாக இருந்தது என்ற உண்மை
தெரிய வந்தது. இந்த அதிகரித்த அளவுக்கு பல
நிறுவனங்கள் காரணமாக இருக்கக் கூடும்.
என்றாலும் இதில் ஸ்டெர்லைட்டின் பங்கு மிக
அதிகம் என்று உணர காமன் சென்ஸ் போதுமானது.

அதாவது கந்தக டை ஆக்ஸைடை கந்தக அமிலமாக
மாற்றாமல், வளி மண்டலத்தில் திருட்டுத் தனமாக கலந்து விடுகிறது ஸ்டெர்லைட் என்பதை நாம் புரிந்து
கொள்ள முடியும்.

அடுத்து ஆர்செனிக். இது மிகவும் நச்சுத்தன்மை உள்ளது.
மேலும் புற்று நோயை உண்டாக்க வல்லது (toxic and carcinogenic).
பாதுகாப்பாகக் கையாளாமல் போனால் புற்றுநோய்
ஏற்படும்.  ஸ்டெர்லைட்டால்தான் புற்றுநோய்
ஏற்படுகிறது என்று நிரூபிக்க எம்மிடம் தரவுகள்
இல்லை. அதே நேரத்தில், ஸ்டெர்லைட்டாக
இருக்கக்கூடும் என்று கூறுவதற்கு அதிகபட்ச
நிகழ்தகவு (probability) உள்ளது.

ஆக, குற்றவாளி ஸ்டெர்லைட் என்னும் நிறுவனத்தின்
ஆணவமும் அசட்டையும்தான். மாசுக்கட்டுப்பாடு
விதிகளை மதிக்காமல் செயல்பட்டு சூழலை
நச்சுப்படுத்திய ஸ்டெர்லைட்டை சும்மா விட முடியாது.
ஸ்டெர்லைட்டை மூடினாலும், உச்சநீதிமன்றம்
சென்று ஆலை இயங்குவதற்குரிய தீர்ப்பை அவர்கள்
பெற்று விடலாம்.

எனவே ஸ்டெர்லைட்டிடம் சூழலை நச்சுப்
படுத்தியதற்காக  5000 கோடி ரூபாய் நஷ்டஈடு
வாங்க வேண்டும். ஆலையை மூடிவிட்டுத்
தப்பித்துச் செல்ல அனுமதிக்கக் கூடாது.  
உயிரிழந்தோருக்கும் காயம் அடைந்தோருக்கும்
தமிழக அரசு தரும் நஷ்ட ஈட்டை ஸ்டெர்லைட்
நிர்வாகத்திடம் இருந்து வசூலிக்க வேண்டும்.

ஸ்டெர்லைட் என்பது ஒரு அறிவியல் விஷயம்.
(science subject). இதில் வேதியியல் நிபுணர்களின்
கருத்தைக் கேட்ட பிறகே, ஆலையை மூடுவதா
வேண்டாமா என்று முடிவெடுக்க வேண்டும்.
ஸ்டெர்லைட்டை மூடு என்று முழங்குகிறார்
செயல் தலைவர் மதிப்புக்குரிய ஸ்டாலின் அவர்கள்.
இந்த முடிவை அவரும் துரைமுருகனும் சேர்ந்து
எடுக்க இயலாது. செயல் தலைவர் அவர்கள்
கெமிக்கல் என்ஜினியர் அல்ல. அறிவியல்
நிபுணர்களுடன் கலந்து  ஆலோசித்து அவர்களின்
அறிவுரையின் பேரில்தான் இந்த விஷயத்தில்
எல்லா அரசியல் கட்சிகளும் முடிவு எடுக்க
வேண்டும்.

ஸ்டெர்லைட்டை ஏன் மூட வேண்டும் என்பதற்கான
காரணங்களை சமூகத்தின் முன் வைக்க வேண்டிய
கடமை, மூட வேண்டும் என்று சொல்லும்
ஒவ்வொருவருக்கும் உள்ளது. மற்றப்படி மழைக்காலத்
தவளைக் கூச்சல்களால் யாருக்கும் பயன் இராது.
மாறாக, அது ஸ்டெரிலைட்டின் தரப்பை
வலுப்படுத்தி விடும்.
**************************************************************

 


 
            








       

     

   
       

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக