வியாழன், 31 மே, 2018

ரஜனிக்கு செல்வாக்கு இருப்பது ஏன்?
இளைஞர்களும் மக்களும் ரஜனி மீது
நம்பிக்கை வைத்திருப்பது ஏன்?
---------------------------------------------------------------
சுதந்திரப் போராட்ட காலத்தில் மகாத்மா காந்தி, நேரு
ஆகிய தலைவர்களால் ஈர்க்கப்பட்டு இளைஞர்கள்
காங்கிரசின் மீது பற்றுக் கொண்டனர்.

திராவிட இயக்கத்தை பெரியார் ஆரம்பித்தபோது,
பெரியார், அண்ணா ஆகிய தலைவர்களின் சமூக
சீர்திருத்தக் கருத்துக்களால் ஈர்க்கப்பட்ட இளைஞர்கள்
திராவிட இயக்கங்களில் இணைந்தனர்.

1969இல் வசந்தத்தின் இடி முழக்கமாக நக்சல்பாரி
ஆயுதம் தாங்கிய எழுச்சி ஏற்பட்டபோது, சாரு மஜூம்தார்
பின்னால் மொத்த தேசமும் அணிதிரண்டது.
இளைஞர்கள் கல்லூரிப் படிப்பைத் துறந்து
நக்சல்பாரி இயக்கத்தில் அணிதிரண்டனர். இந்திய
அரசியலில், மகாத்மா காந்திக்குப் பின்னர் நாடு
முழுவதும் கோடிக்கணக்கான மக்களையும்
லட்சக் கணக்கான இளைஞர்களையும் ஈர்த்த
ஒரே தலைவர் சாரு மஜூம்தார் மட்டுமே.

ஆக, தத்துவ வெற்றிடமோ, அரசியல் வெற்றிடமோ
மேற்கூறிய காலக்கட்டத்தில் இல்லை. 1990களில்
இந்த நிலைமை மாறுகிறது. அடுத்த தலைமுறை
வந்து விடுகிறது. அத்தலைமுறை அரசியலற்ற
போக்கைக் கொண்டிருக்கிறது.

இதற்கு என்ன காரணம்?
அத்தனை அரசியல் தலைவர்களும் அம்பலப்பட்டு
நிற்கிறார்கள்.அவ்வளவு பேரும் முழு நிர்வாணமாக
நிற்கிறார்கள். ஒரு காலத்தில் இளைஞர்களின் ஆதர்சமாக
இருந்த தலைவர்கள் ஊழல் பேர்வழிகளாக, வாரிசு
அரசியலையும் குடும்ப அரசியலையும் மேற்கொண்டு
சுயநலப் பிண்டங்களாக இழிந்து போய் நிற்கிறார்கள்.

அரசியல்வாதி என்றால், எந்தக் கட்சியாக இருந்தாலும்,
அவன் ஊழல் பேர்வழி என்பதையும் , ஊரைக்
கொள்ளையடிக்கவே அரசியலில் இருக்கிறான்
என்பதையும் மக்கள் நன்கு உணர்ந்து விட்டனர்.

உலகிலேயே அரசியல்வாதிகளை மிகவும் கீழ்த்தரமாக
மதிக்கும் நாடு இந்தியா என்று ஒரு ஆய்வு
கூறுகிறது.

தலைசிறந்த பொருளாதார அறிஞரும் சட்ட நிபுணருமான
ப சிதம்பரம், உலகெங்கும் சொத்துக்களை வாங்கிக்
குவித்து விட்டு, இன்று ஒவ்வொரு கோர்ட்டிலும்
முன்ஜாமீனுக்கு  அலைந்து கொண்டு இருப்பதை நாடு
பார்த்துக் கொண்டிருக்கிறது.

அத்தனை அரசியல்வாதிகளும் கல்வித் தந்தைகளாக
மாறி, நாட்டைக் கொள்ளை அடித்துக் கொண்டிருப்பதை
மக்கள் தெளிவாக உணர்ந்து இருக்கிறார்கள்.

எனவே மக்களுக்கோ இளைஞர்களுக்கோ ஆதர்சமாக
உள்ள தலைவரோ, அரசியல் கட்சியோ இல்லை.

1980களில் புற்றீசல் போல் NGOகள் இந்தியா முழுவதும்
பரவின. பின்நவீனத்துவம் தத்துவ அரங்கில்
பெரிதாகத் தன்னை  வெளிப்படுத்திக் கொண்டது.
அனைத்தையும் மறுவாசிப்புச் செய்வது, கட்டுடைப்பது
என்று களமிறங்கிய பின்நவீனத்துவம் எல்லாத்
தத்துவங்களையும் கேள்விக்கு உள்ளாக்கியது.
எல்லாத் தலைவர்களையும் விமர்சனத்துக்கு
உள்ளாக்கியது. இதன் விளைவாக அனைத்தும்
அம்பலப் பட்டன.

எனவே இன்றைய இளைஞர்களுக்கு  எந்தத் தலைவர் மீதும்
அல்லது எந்தக் கட்சி மீதும் மதிப்பு இல்லாத நிலை
உருவாகி விட்டது. இப்படிப்பட்ட சூழலில் ரஜனிகாந்த்
போன்ற அரசியலற்ற தலைவர்கள் மக்களின்
நாயகர்களாக உருவாகிறார்கள்.

இளைஞர்கள் மட்டுமல்ல மக்களும் அரசியல் கட்சிகள் மீது
முற்றிலுமாக நம்பிக்கை இழந்து விட்டார்கள்.
கூடங்குளம் அணுஉலை எதிர்ப்புப் போராட்டம்,
ஜல்லிக்கட்டுப் போராட்டம், ஸ்டெர்லைட் போராட்டம்,
கதிராமங்கலம் மீத்தேன் எதிர்ப்புப் போராட்டம்
ஆகிய இவை யாவும் எந்த ஒரு அரசியல் கட்சியின்
தலைமையிலும் நடைபெறவில்லை. ஏன்?
என்ன காரணம்? அரசியல் கட்சிகள் மீது மொத்த
சமூகமும் நம்பிக்கை இழந்து விட்டது என்பதுதானே
காரணம்!

கட்சிசாரா மக்கள் எழுச்சியை (Non party upsurge) இன்று
அநேகமாக இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திலும்
காணலாம். எல்லாக் கட்சிகளும் மக்களிடம்
அம்பலப் பட்டுப்போய் நிற்கின்றன.

இது போன்ற புறச்சூழல் ரஜனிகாந்த் போன்ற
தலைவர்களிடம் மக்களைப் புகலிடம் தேட
வைக்கிறது. இதுவே உண்மை!
***************************************************
  
       தன்னை
       

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக