சனி, 26 மே, 2018

நியாம்கிரி கிழக்கு ஒரிஸ்ஸாவில் உள்ள ஒரு மலைப்பகுதி. வேதாந்தாவின் அலுமினா ரிபைனரி இங்கே 5000 கோடி ரூபாய் செலவில் சுரங்கம் தோண்டி பாக்ஸைட் தாது எடுக்க அனுமதி பெற்றது. இதற்கு எதிரான வழக்கில் 2008ல் உச்சநீதி மன்றம் வேதாந்தா சுரங்கப் பணிகளைத் தொடர உத்தரவிட்டது.
நியாம்கிரி மலைகள் டோங்கிரியா கோண்ட் (Dongria kondh) என்ற பழக்குடி மக்கள் வாழும் பகுதி. அவர்களால் தங்கள் தெய்வங்கள் உறையும் புனித இடமாகக் கருதப் பட்டது.
உச்சநீதி மன்ற உத்தரவுக்கு எதிராக இந்தப் பழங்குடி இனம் கிளர்ந்து எழுந்து போராடத் தொடங்கியது. அடர்காடுகளுக்குள் வெளியுலகம் அறியாத பழங்குடி மக்கள் தொடங்கிய போராட்டம் விரிந்து பரவியது.
மக்கள் வேதாந்தாவின் ஆலையையும் அங்கு செல்லும் சாலைகளையும் முற்றுகையிட்டனர். வேதாந்தா தனது புல்டோசர்களை இயக்கவே முடியாத நிலை ஏற்பட்டது.
போராட்டத்தின் தலைவர் போலீஸின் சித்திரவதையால் தற்கொலை செய்து கொண்டார். கைதுகள், மிரட்டல்கள்,தாக்குதல்கள், ஆசைகாட்டல்கள் மக்கள் அசையவில்லை.
இந்த நிறுவனம் ஏற்படுத்த இருக்கும் பேரழிவை உணர்ந்த சுற்றுச் சூழல் ஆர்வலர்களும் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டனர். மாவோயிஸ்டுகளும் இப்போராட்டத்தை ஆதரித்ததாகச் சொல்லப்பட்டது.
சுற்றிலுமுள்ள நகரங்களும் புவனேஸ்வரும் பழங்குடி மக்களின் ஊர்வலங்களால் கிடுகிடுத்தன. வேதாந்தாவின் புல்டோசர்களும் லாரிகளும் செயலிழந்து நின்றன. வெடிமருந்து நிபுணர்களால் மலைகளை வெடிவைத்துத் தகர்க்கும் வேலையையும் நடத்த முடியவில்லை.
இதே உச்ச நீதிமன்றம் 2013ல் வன உரிமைச் சட்டப்படி இந்த நிறுனத்துக்கு ஊர்சபைகளின் ஆதரவு இருக்கிறதா என்று அறியும்படி உத்தரவிட்டது. ஊர்சபைகள் வேதாந்தாவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றின.
மாபெரும் வல்லமை வாய்ந்ததாகவும், வெல்லப்பட முடியாததாகவும் கருதப்பட்ட வேதாந்தா வெளியுலகம் அறியாத பழங்குடி மக்களால் தோற்கடிக்கப்பட்டது. நியாம்கிரியில் தனது சுரங்கம் தோண்டும் முயற்சியை நிறுத்திக் கொண்டது.
வீரஞ்செறிந்த தூத்துக்குடியும் வெல்லும்.
வேதாந்தா இன்னொரு தோல்வியைச் சந்திக்கும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக