வியாழன், 14 நவம்பர், 2019

சென்னை ஐஐடியில் சமூகவியல் மாணவி (19 வயது) தற்கொலை!
தற்கொலைகளைத் தடுப்பது எப்படி?
--------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-----------------------------------------------------------------
1) சென்னை ஐஐடியில் பாத்திமா லத்தீப் என்ற மாணவி
தமது விடுதி அறையில் சனியன்று (09.11.2019)
மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து
கொண்டார். கேரள மாநிலம் கொல்லத்தைச்
சேர்ந்தவர் இவர்.

2) இவர் கலைப்பிரிவு (Arts group) மாணவி. இவர் சமூகவியல்
(Sociology) படித்து வந்தார். ஐந்தாண்டு பிஏ மற்றும் எம் ஏ
ஒருங்கிணைந்த படிப்பு  சென்னை ஐஐடியில் (Integrated MA)
உள்ளது. இதில் இம்மாணவி முதலாண்டு அதாவது
B.A Sociology first year படித்து வருகிறார். பலரும் நினைப்பது
போல இவர் B Tech அல்லது M Tech படிக்கும் மாணவி அல்ல.

3) இவர் ஐஐடியில் சேர்ந்து சில மாதங்களே ஆகின்றன.
இப்போதுதான் முதல் செமஸ்டர் தேர்வு நடைபெற்று
வருகிறது.

4) கடந்த வாரம் நடைபெற்ற அகமதிப்பீட்டுத் தேர்வில்
(internal assessment) தேர்வு நடந்த எல்லாப் பாடங்களிலும்
இம்மாணவி முதல் மதிப்பெண் (first rank)
பெற்றுள்ளாராம். ஆனால் ஒரே ஒரு பாடத்தில் மட்டும்
இரண்டாம் ரேங்க் பெற்றுள்ளார். அந்தப் பாடத்தை
நடத்தும் உதவிப் பேராசிரியர் திரு சுதர்சன் பத்மநாபனே
தமது மரணத்துக்குக் காரணம் என்று தமது அலைபேசியில்
எழுதி வைத்துள்ளார். அதே நேரத்தில் தமது பெற்றோருக்கோ உறவினருக்கோ அச்செய்தியை அனுப்பவில்லை.

5) இன்னொரு குறிப்பில் தமது மரணத்துக்குக் காரணம்
ஹேமச்சந்திரன் கரா மற்றும் மிலியன்ட் பிரமி ஆகிய
இருவருமே என்று தமது அலைபேசியில் எழுதி வைத்துள்ளார்.
இக்குறிப்பையும் அவர் எவருக்கும் அனுப்பவில்லை.

6) இக்குறிப்பில், மேற்கூறிய இருவருமே (ஹேமச்சந்திரன்,
மிலியன்ட்) தமது மரணத்துக்கு முழுமையான காரணம்
(the whole of blame will be unremittingly upon Mr Hemachandran Karah
and Mr Miliand Brahme). இது தமது "non nuncupative statement"
என்றும் அம்மாணவி குறிப்பிடுகிறார்.

7) இங்கு "whole of blame" என்ற தொடரும்
"unremittingly upon" என்ற தொடரும் ஹேமச்சந்திரன்,
மிலியன்ட் என்னும் இருவரை மட்டுமே குறிப்பிடுகின்றன.
அவர்கள் இருவருமே முழுமையான காரணம் எனும்போது,
வேறொரு இடத்தில் "சுதர்சன் பத்மநாபன்"  என்பவர்தான்
காரணம் என்று கூற வேண்டிய தேவை என்ன?
மாணவி மிகுந்த மனக்குழப்பத்தில் இருந்திருக்கிறார்
என்பதை மேற்கூறிய, யாருக்கும் அனுப்பப்படாத
குறிப்புகள் தெளிவு படுத்துகின்றன. இந்த மூன்று
பேராசிரியர்கள்தான் உண்மையிலேயே மரணத்துக்குக்  
காரணமாக இருந்திருந்தால், மாணவி அச்செய்தியை
தமது பெற்றோர்களுக்கு அனுப்பி வைத்திருப்பார் அல்லவா?

8)  இந்த வழக்கை சிபிஐ ஏற்று நடத்த வேண்டும் என்று
நியூட்டன் அறிவியல் மன்றம் கருதுகிறது. மாணவியின்
மரணத்துக்கு யாரேனும் காரணமாக இருக்கும் பட்சத்தில்,
அவர்கள் கடுமையான தண்டனைக்கு ஆளாக்கப்பட
வேண்டும். குற்றவாளி என்று உறுதியானால் தயக்கமின்றி
மரண தண்டனை வழங்க வேண்டும்.

9) இந்நிகழ்வுக்குச் சற்று முன்புதான், பாரிவேந்தர்
அவர்களின் SRM பல்கலையில் தொடர்ச்சியாக மூன்று
மாணவ மாணவிகள் மர்மமான முறையில் இறந்தனர்.
அது குறித்து பொதுச்சமூகம் துளியும் அக்கறை
கொள்ளவில்லை. இதைப்போல் கணக்கற்ற கல்விக்கூட 
மரணங்களை பொதுச்சமூகம் கண்டுகொள்ளவில்லை.

10) சோசியாலஜி போன்ற கலைப்பிரிவுப் பாடங்களை
தொழில்நுட்பப் பல்கலையான ஐஐடி நடத்தத்
தேவையில்லை. இது மக்களின் வரிப்பணத்தை
வீணடிக்கும் ஈனச் செயலாகும். டாக்டர் மன்மோகன்சிங்
தொடங்கி வைத்த இக்கயமையை மோடியும்
தொடர்ந்து வருகிறார். இது உடனடியாக நிறுத்தப்பட
வேண்டும்.

11) கலைப்பிரிவுப் படிப்புக்கு ஐஐடி எவ்விதத்திலும்
சிறந்தது அல்ல. இதை நியூட்டன் அறிவியல் மன்றம்
அடித்துக் கூறுகிறது. இதை நாங்கள் நிரூபித்து
இருக்கிறோம்.

12) நல்ல சைவ உணவு வேண்டுமெனில், சரவண பவனுக்கோ
அல்லது உடுப்பி ஓட்டலுக்கோ அல்லது திருவல்லிக்கேணி
அய்யர் மெஸ்சுக்கோ செல்ல வேண்டும். புஹாரி ஓட்டலில்
சென்று சைவ உணவு உண்பது அறிவுடைமை அல்ல.

13) அது போலவே ஐஐடியில் சென்று கலைப்பிரிவு
(Arts group) பாடத்தைப் படிப்பது சரியான தேர்வு அல்ல.
ஐஐடியை விட, ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள
மத்திய பல்கலைகளில் (central university) சிறந்த முறையில்
கலைப்பிரிவுப் படிப்புகள் சொல்லித்தரப் படுகின்றன.
கலைப்பிரிவுப் படிப்புக்குச் சிறந்த இடம் டெல்லி
JNU பல்கலைதான்.    
 
14) ஐஐடியில் உள்ள கல்விச் சூழல் கலைப்பிரிவு
மாணவர்களுக்கு ஏற்றதல்ல. அங்குள்ள சூழல்
ஏற்படுத்தும் இறுக்கம் கலைப்பிரிவு மாணவர்களுக்கு 
முற்றிலும் புதியது; அந்நியமானது; தேவையற்றது.
ஐஐடி வளாகத்தில் கலைப்பிரிவு மாணவர்கள் 
தனிமைப் படுத்தப்பட்டுள்ளதாக உணர்வார்கள்.
அவர்களின் இயல்பான உளவியல் பாதிக்கப்படும்.

15) அதே நேரத்தில் JNU வளாகம் கலைப்பிரிவு
மாணவர்களுக்கு ஒரு சொர்க்கம் போன்றது.
அது அவர்களின் தன்னம்பிக்கையைப் பெருக்கி
அவர்களுக்கு வளாகம் முழுவதும் நண்பர்கள்
கிடைக்கச் செய்யும். நண்பர்கள் கிடைத்திருந்தால்  
ரேங்க் குறைந்து விட்டது என்பதற்தாக எந்த
மாணவரும் தற்கொலை செய்து கொள்ள மாட்டார்கள்.

16) கலைப்பிரிவு மாணவர்களின் பெற்றோர்கள் ஐஐடி
என்ற brand nameல் மயங்கி, கனியிருப்பக் காய் கவர்ந்து
விடுகிறார்கள். இதில் பெற்றோர்களுக்குத் தவறாக
வழிகாட்டுகிற, ஆசை காட்டுகிற மத்திய அரசே
குற்றவாளி.    

17) நாட்டின் அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சிக்காகவே
ஜவஹர்லால் நேரு ஐஐடிகளை உருவாக்கினார்.
கலைப்பிரிவுப் படிப்புகளை நடத்துவதற்காக அல்ல.

18) மாணவியின் மரணம் குறித்து அறிந்ததும் ஐஐடியில்
உள்ள எமது பேராசிரிய நண்பர்கள் மற்றும்
மாணவர்களிடம் இத்துயர நிகழ்வு குறித்து
விசாரித்து அறிந்தோம். சுமார் 50 பேரிடம் இருந்து
தகவல் பெற்றோம். இக்கட்டுரையில் சொல்லியுள்ள
கருத்துக்களை அவர்கள் உறுதிப் படுத்தினார்கள்.
...............................தொடரும்................................
************************************************************       


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக