ஞாயிறு, 10 நவம்பர், 2019

வடகலை தென்கலை நாமங்களில் எதை ஆதரிப்பது?
ராமர் கோவில்-பாபர் மசூதி பிரச்சினையில்
எந்தத் தரப்பை ஆதரிப்பது?
ஒரு பொருள்முதல்வாதியின் நிலைபாடு என்ன?
-----------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-----------------------------------------------------------------------
இந்திய மக்களுக்குத் தேவை பொருளாதார உணர்வு
(economic awareness). பொருளியல் உணர்வே இல்லாத
நிலையில் வர்க்க உணர்வோ வர்க்க விழிப்புணர்வோ
தோன்ற இயலாது.

வர்க்க விழிப்புணர்வு மக்களுக்கு ஏற்பட்டு விடக்கூடாது
என்று கங்கணம் கட்டிக்கொண்டு பூர்ஷ்வா அரசியல்
கட்சிகள் செயல்படும். மத உணர்வு, சாதிய உணர்வு 
ஆகிய பிற்போக்கு உணர்வுகளைத் தட்டி எழுப்பி
வர்க்க உணர்வு ஏற்பட்டு விடாமல் தடுப்பதே பூர்ஷ்வா
அரசியல் கட்சிகளின் வேலைத்திட்டம்.  

மதம் சார்ந்த விஷயங்களை மகாப்பெரிய விஷயங்களாக
மக்கள் கருத வேண்டும் என்பதே பூர்ஷ்வா கடசிகளின்
லட்சியம். இது அப்பட்டமான கருத்துமுதல் வாதம்.

காஞ்சிபுரம் கோவில் யானைக்கு வடகலை நாமம்
போடுவதா அல்லது தென்கலை நாமம் போடுவதா
என்பது நூறாண்டுகளாக நீடித்து வரும் சர்ச்சை.
பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் லண்டனில் உள்ள
பிரிவி கவுன்சில் வரை இந்த விஷயம் சென்றது.

சுதந்திரம் அடைந்த பிறகும், பிரச்சினை தீராமல்
உச்சநீதிமன்றம் வரை சென்றது. வாரத்துக்கு
ஒருமுறை மாற்றி மாற்றி வடகலை தென்கலை
நாமங்களை போடலாம் என்று தீர்ப்பு வந்தது.

இந்த நாமம் பற்றிய விஷயத்தில் ஒரு மார்க்சியவாதி,
ஒரு பொருள்முதல்வாதி என்ன நிலையை எடுக்க
வேண்டும்? எந்த நாமத்தை ஆதரிப்பது?

இதைப் போலவே, உபியில் அயோத்தியில், ராமர்
கோவிலா அல்லது பாபர் மசூதியா என்ற பிரச்சினை
நூறாண்டு காலமாக நீடித்து வருகிறது. இதில் ஒரு
பொருள்முதல்வாதி என்ன நிலைபாட்டை
எடுக்க வேண்டும்?

மதங்களுக்கு இடையில் தகராறு ஏற்படும்; பகைமை
நிலவும்.இதை inter religion rivalry என்பார்கள்.
ஒரு மதத்துக்கு உள்ளேயே தகராறு ஏற்படும்;
பகைமை நிலவும். இதை intra religion rivalry என்பார்கள்.
(உதாரணம்: சன்னி-ஷியா தகராறு, வடகலை-தென்கலை
தகராறு).
     
இத்தகைய தகராறுகளில் ஒரு பொருள்முதல்வாதி
என்ன நிலைபாட்டை எடுக்க வேண்டும்?

அ) தென்கலையை ஆதரிக்க வேண்டுமா? அல்லது
வடகலையை ஆதரிக்க வேண்டுமா?
ஆ) பாபர் மசூதியை ஆதரிக்க வேண்டுமா? அல்லது
ராமர் கோவில் கட்டுவதை ஆதரிக்க வேண்டுமா?

நாமப் பிரச்சினையில் வடகலையை ஆதரிப்பனும் சரி,
அல்லது தென்கலையை ஆதரிப்பவனும் சரி
ஒருபோதும் பொருள்முதல்வாதியாக இருக்க முடியாது.
எந்தத் தரப்பை ஆதரித்தாலும் சரி, அவன் ஒரு இழிந்த
கருத்துமுதல்வாதியே.

அது போலவே, ராமர்கோவிலை ஆதரிப்பவனும் சரி,
அல்லது பாபர் மசூதியை ஆதரிப்பவனும் சரி
கருத்துமுதல்வாதியே. அவன் ஒருபோதும் ஒரு
பொருள்முதல்வாதியாக இருக்க முடியாது.

ஆளும் வர்க்கத்தின் பிரதிநிதிகளாகிய அரசியல்
கட்சிகள் உருவாக்கிய சட்டகத்துக்குள் (template)
புகுந்து கொண்டு, ஆளும் வர்க்க அஜெண்டாவை
நிறைவேற்றித் தரும் முழுமூடனே, இவ்விரு தரப்பில்
ஒன்றை ஆதரிப்பான். அவன் ஒரு கருத்துமுதல்வாதியே.

இந்த மொத்த விவகாரத்திலும் இருந்து ஒரு சரியான
பொருள்முதல்வாதி விலகி நிற்க வேண்டும்.
சண்டையிடும் இரு மதப் பிரிவுக்குள் ஏதேனும்
ஒரு பிரிவை ஆதரிப்பவன் எப்படி ஒரு
முற்போக்காளனாக இருக்க முடியும்? முடியாது.
நிலப்பிரபுத்துவச் சிந்தனையை  மூளைக்குள்
அடைத்துக் கொண்டிருப்பவனே, இவ்விரு தரப்பில்
(இந்து மற்றும் முஸ்லீம் தரப்பு) ஏதேனும் ஒரு தரப்பை
ஆதரிப்பான்.

சரியான ஒரு பொருள்முதல்வாதி மதப்பூசலுக்குள்
மூக்கை நுழைக்கக் கூடாது. அவன் இரு தரப்பில்
இருந்தும் சமதூரத்தில் விலகி நிற்க வேண்டும்.
இந்துக்களுடன் சேர்ந்து கொண்டு முஸ்லிம்களை
எதிர்ப்பதும், முஸ்லிம்களுடன் சேர்ந்து கொண்டு
இந்துக்களை எதிர்ப்பதும் ஒரு பொருள்முதல்வாதியின்
வேலை அல்ல.

இரு தரப்பையும் ஊக்கம் குன்றச் செய்வதும்
இரு தரப்பையும் ஒரு இணக்கத்தை நோக்கி
நிர்ப்பந்திப்பதுமே ஒரு பொருள்முதல்வாதியின்
வேலை.

முஸ்லீம் தரப்பின் அதிகாரபூர்வ பிரதிநிதிகளே
அயோத்தி தீர்ப்பை ஏற்றுக் கொண்டுள்ளனர்.
தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு போடப்போவதில்லை
என்று சன்னி வக்ப் வாரியம் தெளிவாக அறிவித்து
உள்ளது.

அயோத்தியிலும் உபியிலும் இந்துக்களும் முஸ்லிம்களும்
அமைதியுடன் இத்தீர்ப்பை ஏற்றுக் கொண்டு
மதநல்லிணக்கம் பேண உறுதி பூண்டுள்ளனர்.

மதநல்லிணக்கத்துடன் வாழ இந்து முஸ்லீம் மக்கள்
முடிவு செய்துள்ள நிலையில், மக்களுடன் ஒன்றி நின்று
மதநல்லிணக்கத்தை வலுப்படுத்தவுவதே
பொருள்முதல்வாதியின் கடமை.
***************************************************


 

   






 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக