வியாழன், 14 நவம்பர், 2019

தமிழ்நாட்டில் அண்ணா பல்கலைக்கழகத்தின் அங்கீகாரத்துடன் இயங்கும் தனியார் பொறியியல் கல்லூரிகளின் மொத்த எண்ணிக்கை 557 (2019 கணக்கீட்டின்படி)
2018 ஆம் ஆண்டில் மட்டும் 38 பொறியியல் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன.
சமீபத்தில் அண்ணா பல்கலைக்கழகம் 537 பொறியியல் கல்லூரிகளை ஆய்வு செய்ததில் அதில் உள்கட்டமைப்பு வசதி இல்லாமல் 89 தரமற்ற பொறியியல் கல்லூரிகள் செயல்படுவதாக அறிவித்துள்ளது..
இந்த 557 கல்லூரிகளில் கிட்டத்தட்ட எல்லா கல்லூரிகளிலும் CSE மற்றும் IT பாட பிரிவுகள் உள்ளன.
சுமார் 480+ கல்லூரிகளில் ECE மற்றும் EEE பாட பிரிவுகள் உள்ளன.
CSEக்கும் ITக்கும் ஒன்றும் பெரிய அளவில் வித்தியாசங்கள் கிடையாது. வெறும் 8 Subjects மட்டுமே மாறும். மற்றபடி எல்லா Subjects அனைத்தும் ஒன்றாகதான் வரும்.
ECE, EEE, IT, CSE இவை நான்கும் வெவ்வேறு துறைகளாக இருந்தாலும், எப்படி ஆறு, கால்வாய், ஓடை, ஏரி என அனைத்தும் கடைசியில் கடலில் சென்று கலக்கிறதோ, அதேபோல் இந்த நான்கு துறைகளில் தேர்ச்சி பெற்று வரும் மாணவர்கள் வேலைவாய்ப்பு என்று வரும்பொழுது கடைசியில் IT மற்றும் ITe'S வேலைக்குதான் செல்கிறார்கள்.
இதில் நாம் கவனிக்கப்பட வேண்டிய விடயம் என்னவென்றால்,
அனைத்து கல்லூரிகளிலும் CSE, IT பாடப்பிரிவுகள் இருக்கிறது.
480க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் ECE, EEE பாடப்பிரிவு இடம் பெற்றிருக்கிறது.
ஆனால் தமிழ்நாட்டில் முதல் முதலில் (1859) ஆம் ஆண்டு துவங்கப்பட்ட CIVIL ENGINEERING துறை இப்போது பாதிக்கும் குறைவான பொறியியல் கல்லூரிகளில் மட்டுமே உள்ளது. அதேபோல் Aeronautical Engineering படிப்பும் மிக குறைவான கல்லூரிகளில் மட்டுமே உள்ளது.
CIVIL ENGINEERING படித்த மாணவர்களுக்கு உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் நல்ல வேலைவாய்ப்புகள் இருந்தும் CIVIL ENGINEERINGகளுக்கான தட்டுப்பாடு நாடு முழுவதும் நிலவும் சூழல் இருந்தும், ஏன் இதர 200+ கல்லூரிகளில் அந்த பாடபிரிவை மாணவர்களுக்கு தர இந்த கல்லூரி நிர்வாகங்களும், அரசாங்கமும் முன்வரவில்லை??
சரி CIVIL ENGINEERING படிப்பை விடுவோம்,
Automobile Engineering
Production Engineering
Printing Technology
Textile Technology
Bio Technology
Bio Medical
Architecture
Industrial Management
Food Technology
Polymer Technology
Robotics
Mechatronics
Petroleum Engineering
Chemical Engineering
இதுபோன்ற வேலைவாய்ப்புடன் கூடிய அறிவுசார்ந்த இன்ஜினியரிங் படிப்புகள் அனைத்தும் விரல்விட்டு என்னும் அளவில் மிக சொற்பமான கல்லூரிகளிலே உள்ளன.
மேல் சொன்ன படிப்புகளில் பல உற்பத்தி மற்றும் ஆராய்ச்சிக்கான படிப்புகள். இவை மற்ற கல்லூரிகளில் இடம் பெறாததற்கு காரணம் அதுவே.
இந்த TATAகளும், Bill Gatesகளும் நடத்தும் IT பெறும் நிறுவனங்களுக்கு மேல் சொன்ன இந்த படிப்புகள் எல்லாம் பிரோஜனப்படாது.
எனவே ஒப்புக்கு 33 இன்ஜினியரிங் பாட பிரிவுகளை நம் கண்ணில் காட்டிவிட்டு அந்த குறிப்பிட்ட நான்கு துறைகளை மட்டும் பெருமளவில் கல்லூரிகளில் வைத்திருக்கிறார்கள். அவர்களுக்கு தேவையான பயிற்சியை கல்வி என்ற பெயரில் நம்மீது திணிக்கிறார்கள்.
இந்த திணிப்பு நடவடிக்கைகள் 11வது படிக்கும் பொழுது பெரிய அளவில் பாடத்திட்டத்தில் பிரதிபலிப்பதாக இருக்கிறது.
என் சொந்த அனுபவத்தில் இருந்து சொல்கிறேன். நான் 11ஆம் வகுப்பு சேரும் போதே ஒரு கம்ப்யூட்டர் இன்ஜினியர் ஆக எப்படிப்பட்ட தகுதிகளை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று தெரியாது.
ஆனால் அப்பொழுது C, C++, HTML போன்ற Computer software பாடங்கள் வேலைக்கும், வாழ்க்கைக்கும் பயன்படாது என்று தெரிந்தே வேறு வழியில்லாமால் படித்தேன். என் மேல் அது திணிக்கப்பட்டது. காரணம், இந்த கார்ப்ரேட் கம்பெனிகளுக்கு அது தேவைப்பட்டது.
இந்த IT கம்பெனிகளுக்கு தேவையான பாடங்களை நம் மீது திணிக்கும் இந்த நடவடிக்கைகளுக்காக திட்டமிட்டே நம் பாடத்திட்டத்திலும் கல்வி முறைகளிலும் இந்த ஏகாதிபத்திய அரசாங்கத்தால் கொண்டுவரப்பட்ட மாற்றங்கள் இன்னும் உற்று கவனித்தால் இந்த சூழ்ச்சி புரியக்கூடும்.
தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான பொறியியல் கல்லூரிகள் 1997க்கு பிற்பாடு துவங்கப்பட்டவை.
1997க்கு முன்னால் வெறும் 66 பொறியியல் கல்லூரிகளே இருந்திருக்கிறது. 1997க்கு பிறகு திடீரென 580+ க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் துவங்கப்படுவதற்கான அவசியம் என்ன?
1996ல் தான் இந்த கார்ப்ரேட் IT கம்பெனிகள் இந்தியாவில் தொழில் துவங்குவதற்கான ஒப்பந்தம் இந்த பெறும் முதலாளிகளின் நலனுக்காக கையெழுத்தாகிறது.
இதற்கு ராஜிவ் காந்தி காலத்தில் கல்வி முறையில் மாற்றம் செய்யப்பட்டு புதிய கல்வி கொள்கை கொண்டுவரப்பட்டது.
தற்போது நடக்கும் நிகழ்வுகளையும், கல்விமுறை சீர்கேட்டையும் பார்த்தால், மேல் குறிப்பிட்டிருக்கும் இந்த மூன்று நிகழ்விற்கும் ஒன்றுக்கு ஒன்று தொடர்புடையதாக தோன்றும்.
அமெரிக்காவில் 1 ஆண்டிற்கு பொறியியல் கல்லூரி படிப்பு முடித்து வெளியேறும் மாணவர்களின் எண்ணிக்கை வெறும் 70 ஆயிரம் தான்.
ஐரோப்பிய ஒன்றியம் முழுவதையும் சேர்த்து 1 ஆண்டிற்கு 1 லட்சம் பொறியியல் மாணவர்கள்தான் கல்லூரி படிப்பு முடித்து வெளியேறுகிறார்கள்.
ஆனால், இந்தியாவிலோ 1 ஆண்டிற்கு 20 லட்சம் பொறியியல் மாணவர்கள் கல்லூரி படிப்பு முடித்து வெளியேறுகிறார்கள்.
இது அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய நாடுகளில் ஒராண்டிற்கு உருவாக்கும் பொறியியல் மாணவர்களின் கூட்டுத்தொகையை காட்டிலும் இது மிக மிக அதிகம்.
இவ்வளவு பொறியாளர்கள் உற்பத்தியாவதால் நாட்டின் பொருளாதாரம் உயர்கிறதா என்று பார்த்தால் அதுவும் கிடையாது.
பொறியியல் படித்துவிட்டு வேலை செய்பவர்களை இரண்டாகப் பிரிக்கலாம்.
1)Service Sector (IT & ITe'S)
2)Manufacturing sector
முதலில் சொன்ன இந்த Service IT sectorன் கீழ் தான் பெரும்பாலான இந்திய பொறியாளர்கள் வேலை செய்கிறார்கள்.
இவர்களின் உழைப்பால் அமெரிக்காவும், இங்கிலாந்தும் மற்றும் இவர்கள் பணிபுரியும் பெரும் நிறுவனங்களும் தான் வளர்கிறதே தவிர இவர்களால் இந்தியாவுக்கு பெரிய வளர்ச்சி இல்லை.
அதிக அளவில் மாணவர்கள் இன்ஜினியரிங் படிப்பை எடுத்து படிப்பதால் நாடு பொருளாதாரத்தில் வளர்கிறது என்று சிலர் நினைக்கலாம்.
அப்படி பார்த்தால் 1 ஆண்டிற்கு 2 லட்சத்திற்கும் மேல் பொறியாளர்களை உருவாக்கும் BIHAR மற்றும் Jharkhand மாநிலங்கள் ஏன் இன்னும் நாட்டிலே பின் தங்கிய மாநிலங்களாக உள்ளது என்ற கேள்வி எழுகிறது.
உண்மையில் பெரும்பான்மையான பொறியாளர்கள் தங்கள் தற்சார்பே பூர்த்தியாகாத நிலையில்தான் வாழ்கிறார்கள்.
வெறும் 20% பொறியாளர்கள் தான் நல்ல வேலையில் நல்ல ஊதியத்தோடு வேலையில் இருக்கிறார்கள். 31% பேர் வேலை இல்லாமலும் மற்றவர்கள் குறைந்த சம்பளத்திற்கு வேலை செய்வதாக சமீபத்திய புள்ளிவிவரம் நமக்கு கூறுகிறது.
சுருக்கமாக சொல்லப்போனால் அமெரிக்காவின் வளர்ச்சிக்கும், இங்கிலாந்தின் வளர்ச்சிக்கும் பன்னாட்டு முதலாளிகளின் வர்க்க நலனிற்காகவும் இந்த தரகு முதலாளிகளிடம் கூலித் தொழிலாளிகளாக இந்த நாட்டின் மனிதவளம் பாழாக்கப்பட்டு கொண்டிருக்கிறது.
இந்த கார்ப்ரேட் IT கம்பெனிகளுக்கு பெருமளவில் ஆட்கள் தேவை என்பதற்காக நம்மீது இந்த பாடத்திட்டங்களை திணித்து குறிப்பிட்ட சில துறைகளுக்கு மட்டும் போலியான தட்டுப்பாட்டை உருவாக்கி அந்த மாயையை மக்களிடம் உண்டாக்கி எல்லா கல்லூரிகளிலும் குறிப்பிட்ட அந்த சில துறைகள் மட்டும் இருக்கும்படி செய்த மக்கள் விரோத அரசாங்கம் இந்த தரகு வேலையை தவிர்த்துவிட்டு,
Printing Technology படிப்பை ஊக்குவித்திருந்தால் குட்டி ஜப்பான் என்றழைக்கப்படும் நமது சிவகாசி அச்சு மற்றும் காகித உற்பத்தியில் ஜப்பானுக்கு (டோக்கியோ, டோகுஷிமாவுக்கு) போட்டியாக வளர்ந்திருக்கும்.
Textile Technology படிப்பை ஊக்குவித்திருந்தால் திருப்பூர் இன்னும் சிறப்பாக முன்னேறியிருக்கும். சுய தொழில் துவங்கும் தமிழ் முதலாளிகள் பெருகி இருப்பார்கள்.
Chemical Engineering, Bio Technology மற்றும் Petroleum Engineering படிப்புகளை இந்த அரசாங்கம் ஊக்குவித்திருந்தால் இந்த துறை சார்ந்த நிறைய கண்டுபிடிப்புகள் நிகழ்ந்திருக்கும். நாட்டின் பொருளாதாரம் உயர்ந்திருக்கும். மக்களின் வாழ்க்கை நிலை, வாழ்வாதாரம் மேம்பட்டிருக்கும்.
ஆனால் இதை செய்யாமல் பொறியியல் என்ற பெயரில் ஒரு சில குறிப்பிட்ட பாட பிரிவுகளை மட்டும் பெரும்பான்மை கல்லூரிகளில் வைத்திருக்கும் இந்த நிலை மாற வேண்டும். மக்கள் மனநிலையில் மாற்றம் வர வேண்டும். அதற்கு இந்த குறிப்பிட்ட சில பாட பிரிவுகளில் பெயரால் கட்டப்பட்டிருக்கும் இந்த மாயை உடைத்தெறியப்பட வேண்டும்.
பொதுவாகவே Engineering க்கான முக்கியத்துவம் குறைந்து மற்ற கலை அறிவியல் சார்ந்த படிப்புகளும் முக்கியத்துவம் அடையும் பொழுதுதான் எல்லா துறைகளிலும் பரவலாக படித்து மாணவர்கள் சிறந்து விளங்கும் பொழுதுதான் ஆரோக்கியமான கல்வி மற்றும் பொருளாதார சூழலை நாம் அடைய முடியும்.
நாம் ஒவ்வொருவரும் பொறுப்புணர்ந்து இந்த கல்விமுறையை நாம் தூக்கி எறியாவிட்டால் கல்வி முறையில் மாற்றம் கொண்டுவராவிட்டால் விரைவில் நாம் அனைவரும் கார்ப்ரேட் அடிமைகளாக மாற்றப்பட்டு சொந்த நாட்டிலே அடிமையாக்கப்படுவோம்.
தமிழ்நாட்டில் தொழில் முனைவோர் வெகுவாக குறைந்து பொருளாதாரத்தில் பெரிய பின்னடைவை இந்த தமிழ் சமூகம் விரைவில் சந்திக்க நேரிடும்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக