ஞாயிறு, 24 நவம்பர், 2019

BSNL VRS 2019: ஒளி வீசும் உண்மைகளும்
VRS குறித்த வழிகாட்டுதல்களும்!
------------------------------------------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன்
முன்னாள் மாவட்டச் செயலர், NFTE, சென்னை.
நியூட்டன் அறிவியல் மன்றம்.
---------------------------------------------------------------------
BSNL நிறுவனம் லாபம் ஈட்ட இயலாமல் தொடர்ந்து பல
ஆண்டுகளாகவே நஷ்டத்தில் இயங்கி வருகிறது. ஒரு
கட்டத்தில் நெருக்கடியானது மிகவும் வெளிப்படையாகப்
புலப்பட்டது. ஊழியர்களுக்கு உரிய நேரத்தில் சம்பளம்
வழங்க இயலாமல் BSNL தலைகுனிந்து நின்றது. கடந்த
பல ஆண்டுகளாகவே வளர்ச்சிப்பணிகள் என்று எதுவும்
இல்லை; நடக்கவில்லை; அதற்கான நிதி இல்லை.

சந்தையிலோ கடும் போட்டி. பிற நிறுவனங்களுடன்
போட்டி போட இயலாமல் BSNLன் சந்தாதாரர்
அடித்தளம் (subscriber base) மெல்ல மெல்ல அரிக்கப்பட்டு
விட்டது. மழை வெள்ளத்தின் பின், மண் அரிப்பு ஏற்பட்ட
இடம் போல BSNL ஆகிப்போனது.

நலிவுற்ற பொதுத்துறை நிறுவனங்களை என்ன செய்யலாம்
என்பதை முடிவு செய்ய இந்தியாவில் சட்ட திட்டங்கள்,
முன்னுதாரணங்கள், வழிமுறைகள் ஆகியன உள்ளன.
அதன்படி அமைக்கப்பட்ட நிபுணர் குழு தனது
பரிந்துரைகளை அரசிடம் வழங்கியது.

அ) BSNLஐ மூடி விடுவது (closure)
ஆ)  BSNLஐப் புதுப்பித்து உயிர் கொடுப்பது (revival)
என்ற இரண்டு வழிகள் முன்வைக்கப் பட்டன. இந்த
இரண்டில் எதை வேண்டுமானாலும் மத்திய அரசு
மேற்கொள்ளட்டும் என்று நிபுணர் குழு கூறியது.

உலக நாடுகளிலேயே இந்தியாவுக்கு ஒரு தனிப்பெரும்
சிறப்பு உண்டு. வேறெந்த நாட்டையும் விட, அதிகமான
கெடுநம்பிக்கையாளர்கள் (pessimists) இங்குதான் உண்டு.
அவர்கள் தாங்களாகவே BSNL மூடப் படுகிறது என்று
முடிவெடுத்து விட்டு, புதைப்பதா எரிப்பதா என்று
பட்டி மன்றம் நடத்தத் தொடங்கி விட்டனர்.

ஊடக முட்டாள்களும் பெசிமிஸ்டுகளும் கூட்டணி
அமைத்துக் கொண்டு BSNLன் இறுதி ஊர்வலத்துக்கு
ஆயத்தம் ஆகினர்.

BSNLஐ மூடுவதா அல்லது புதுப்பிப்பதா என்று மத்திய
அரசு தனது துறைகளிடம் (departments) கருத்துக் கேட்டது.
மத்திய அரசில் 50 துறைகள் உள்ளன என்பதை நாம்
அறிவோம்.

அநேகமாக எல்லாத் துறைகளுமே BSNLஐ மூடி
விடலாம் என்று கருத்துத் தெரிவித்தன. ஒரே ஒரு
துறை மட்டும் "BSNLஐ மூடக்கூடாது; அதன் சேவை
எங்களுக்கு வேண்டும்; BSNL இருந்தால்தான் அரசின்
ரகசியங்கள் பாதுகாக்கப்படும்" என்று கூறியது.
இப்படிக் கூறியது யாரெனில் அது பாதுகாப்புத் துறையே.

ஒற்றைக்குரல் எனினும் பாதுகாப்புத் துறையின் குரல்
ஓங்கி ஒலித்த குரல்; காடுகளை அதிர வைத்த
சிங்கத்தின் குரல். தீர்மானம் செய்கிற குரல்
(decisive voice). எனவே மத்திய அரசு பாதுகாப்புத்
துறையின் கருத்தை ஏற்றுக் கொண்டு BSNLஐ
மூட வேண்டாம் என்று முடிவெடுத்தது. மூட வேண்டாம்
என்று முடிவெடுத்த பின்னால், அடுத்து புதுப்பிக்க
வேண்டும் என்பதே கண்முன் இருக்கும் ஒரே வழி.
அதன் விளைவாகவே இன்றைய புதுப்பித்தல்
திட்டம் (REVIVAL PLAN).

இந்த இடத்தில் BSNL ஊழியர்களும் அதிகாரிகளும்
ஒரு விஷயத்தைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
பாதுகாப்புத் துறையின் பரிந்துரையை அலட்சியப்
படுத்தி விட்டு, BSNLஐ மூடுவது என்று மோடி அரசு
முடிவெடுத்து இருந்தால் நமது நிலை என்ன?
அனைவருக்கும் COMPULSORY RETIREMENT வழங்கப்
பட்டிருக்கும். இன்று வழங்கப்பட்ட VRSக்குப் பதில்
CRSல் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளப்பட்டு
இருப்போம்.

அரசு VRSஐ அறிவிப்பதற்கு முன்னால், BSNLன் நிலைமை
எவ்வாறு இருந்தது? அதன் மரணத்துக்குத் தேதி குறிக்கப்
பட்டு இருந்தது. இதுதானே உண்மை?

இந்த நிலையில் தொழிற்சங்கங்கள் என்ன செய்திருக்க
வேண்டும்? BSNLஐ மூடக்கூடாது என்றும் அதைப்
புதுப்பிக்க வேண்டும் என்றும் கோரி, நாடு தழுவிய
வலிமையான வேலைநிறுத்தம் செய்து அரசை
நிர்ப்பந்தம் செய்திருக்க வேண்டும். செய்தனவா
தொழிற்சங்கங்கள்? இல்லை.

இவ்வளவுக்கும் BSNLல் இடதுசாரித் தொழிற்சங்கங்கள்
மட்டுமே ஊழியர்களின் செல்வாக்கைப் பெற்றவை.
அங்கீகரிக்கப் பட்டவை. காங்கிரசின் FNTOவும்
பாஜகவின் BMSம் இங்கு வெறும் லெட்டர் பேட்
சங்கங்களே. இடதுசாரிச் சங்கங்களான NFTE, BSNLEU
ஆகிய இரண்டு ஊழியர் சங்கங்கள் மட்டுமே
ஊழியர்களின் 90 சதம் ஆதரவைப் பெற்றவை.
NFTE சங்கத்திற்கு CPI கட்சியும், BSNLEU
சங்கத்திற்கு CPM கட்சியும் அரசியல் வழிகாட்டுதலை
வழங்குகின்றன. அதிகாரிகள் சங்கங்களான SNEA,
AIBSNLOA, AIBSNLEA ஆகியவையும் மிக மெலிதான
இடதுசாரிச் சாயல் கொண்ட சங்கங்களாகவே
இவ்விடத்தில் கருதலாம்.

ஆனால் பாரம்பரியம் மிக்க இந்த இடதுசாரிச் சங்கங்கள்
கிழித்தது என்ன? ஒன்றுமில்லை என்பது நம் கண்ணில்
வந்து உறுத்துகிறது அல்லவா?

ஆக, BSNLஐ மூட வேண்டாம் என்றும் அதற்கு உயிர்
கொடுப்போம் என்றும் அரசு எடுத்த முடிவு முற்ற முழுக்க
அரசின் முடிவு மட்டுமே! அரசின் நல்லெண்ணத்தால்
விளைந்த முடிவு மட்டுமே. இந்த முடிவை எடுப்பதில்
எந்த ஒரு தொழிற்சங்கத்திற்கும் 0.00000001 சதவீதம்
பங்கு கூட இல்லை என்பதும்தானே உண்மை!

வெறுமனே BSNLக்கு வெளியில் உள்ள சராசரி இந்தியப்
பிரஜை போல,  வெறும் மௌனப் பார்வையாளராக
மட்டும்தானே தொழிற்சங்கங்கள் இருந்தன! இதை
எவராலும் மறுக்க முடியுமா?

VRS அறிவிக்கப் பட்டதுமே ஊழியர்கள் என்ன செய்திருக்க
வேண்டும். சங்கங்களின் வழிகாட்டுதலுக்குக் காத்திருக்க
வேண்டும். சங்கம் சொன்ன பின்னால்தான் நான்
VRSக்கு விண்ணப்பம் செய்வேன் என்றோ அல்லது VRSல்
போக மாட்டேன் என்றோ அமைதி காத்திருக்க வேண்டும்.
ஆனால் நடந்தது என்ன?

VRS அறிவிக்கப்பட்ட ஒன்றிரண்டு நாட்களில் மட்டும்
இருபதாயிரம், முப்பதாயிரம் என்று ஊழியர்கள்
விண்ணப்பம் செய்தனர். செம்பரம்பாக்கம் ஏரியைத்
திறந்து விட்டபோது கூட, இந்த வேகத்தில் நீர்மட்டம்
உயரவில்லை. இன்று 80,000 என்ற அளவில் விண்ணப்பம்
செய்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்து நிற்கிறது.
யார் எவராவது சங்கத்தின் ஆலோசனையைக்
கேட்டார்களா? சங்கத்தின் கிளைக் கூட்டமோ,
மாவட்டச் செயற்குழுவோ அவசரமாகக் கூட்டப் பட்டதா?
VRSன் சாதக பாதகங்கள் விவாதிக்கப் பட்டதா?
இல்லையே!

இவையெல்லாம் இதைக் காட்டுகின்றன?
இந்த VRS திட்டத்திலும், BSNLன் புத்தாக்கத்திலும்
தொழிற்சங்கங்களுக்கு எந்தவொரு சிறு பங்கும் கூட
இல்லை என்பதைத்தானே நிரூபிக்கின்றன!

புத்தாக்கத் திட்டத்தைக் கொண்டு வந்ததற்காக,
அமைச்சருக்கு நன்றி தெரிவிக்க முண்டியடித்துக்
கொண்டு போய், அமைச்சருக்கு மாலையும் பூங்கொத்தும்
அளித்ததைத் தவிர தொழிற்சங்கங்களால் என்ன செய்ய
முடிந்தது? தொழிற்சங்கங்களால் ஒரு bargaining counterஐ
ஏற்படுத்த முடிந்ததா? இல்லையே.

நிற்க. தொழிற்சங்கங்களை விமர்சிப்பது இக்கட்டுரையின்
நோக்கம் அல்ல. VRS திட்டம் குறித்துப் பார்ப்போம்.

BSNL VRS என்னும் தங்கக் கைகுலுக்கல் திட்டம்!
-------------------------------------------------------------------------
BSNL VRS 2019 என்பது இத்திட்டத்தின் அதிகார பூர்வமான
பெயர். உண்மையில் இது வெறும் VRS அல்ல, மாறாக
அதிகப் பயன்களை வழங்கும் Golden Shake திட்டம் ஆகும்.
இந்த உண்மையை முதலில் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

இந்தத் திட்டத்தில் ஏதேனும் மறைமுகமான படுகுழிகளோ
அல்லது வேறெந்த ஆபத்தோ இல்லை. 37A பிரிவு இந்த
VRS திட்டத்தின் ஒவ்வொரு அம்சத்திலும் பொருந்தும்.
இத்திட்டம் அதை explicitஆகச் சொல்லவில்லை என்று
சிலர் முணுமுணுக்கக் கண்டேன். அப்படி எல்லாவற்றையும்
explicitஆகச் சொல்லத் தேவையில்லை. Many things go without
saying! இவையெல்லாம் frivolous objections.

இருப்பினும் 23.11.2019 அன்று BSNL Boardன் Director HR
அரவிந்த் வட்னேர்கர் அவர்கள் வெளியிட்ட அறிக்கை
VRS திட்டத்தில் 37A உள்ளடங்கவில்லை என்பது போன்ற
அர்த்தமற்ற ஐயங்களுக்கு முடிவு கட்டுகிறது. அந்த
அறிக்கையில் Director HR மிகத் தெளிவாகச் சொல்லுகிறார்:
"Here it is clarified that for BSNL employees, retirement on
VRS (VRS 2019) is neither a distinct nor a separate group but
will be at par with retirement on superannuation".

ஒரு ஊழியர் 60 வயது நிறைவடைந்தபின் எப்படி
இயல்பாக ஒய்வு பெறுவாரா, அதைப் போன்றதே இந்த
VRS என்று அவர் தெளிவாகக் கூறுகிறார். சுருங்கக் கூறின்,
VRS 2019 = Superannuation என்கிறார்.

உயிர்த்தெழுந்த இயேசுநாதர் வீதியில் நடந்து சென்றபோது
தாமஸ் என்னும் அவரின் சீடர் அவர்தான் இயேசுநாதர் என்று
நம்பாமல் இருந்தார் என்பது வரலாறு. எனவே தாமஸ்
மக்களால் doubting Thomas என்று அழைக்கப் பட்டார்.
அதிர்ஷ்டவசமாக BSNLல் "Doubting Thomas" ஆசாமிகள்
அபூர்வமாகவே உள்ளனர்.

2012ல், எட்டு ஆண்டுக்கு முன்பு, BSNLல் ஒரு VRS திட்டம்
வருகிறது என்று மிகத் தீவிரமான ஒரு சூழல் இருந்தது.
அன்றைய PACKAGEஐ விட இன்றைய VRS 2019  அதிகமான
பயன்களைக் கொண்டது. இதை அன்றைய PACKAGEஐ
நன்கறிந்தவன் என்ற முறையில் என்னால் உறுதியாகக்
கூற இயலும். ஆனால் அன்றைய பிரதமர் டாக்டர்
மன்மோகன் சிங் அவர்கள் VRSக்குத் தேவையான நிதியை
BSNLக்கு வழங்க முன்வரவில்லை. எனவே அன்றைய
VRS வெறும் கனவாகவே முடிந்தது. இன்றைய VRS 2019
அப்படி அல்ல. இது இன்னும் ஒன்றிரண்டு மாதத்தில்
நனவாகப் போகிறது.

அப்போது 2012ல், அன்றைய VRS குறித்து "Greet the exodus"
என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதினேன். அகில இந்திய
அளவில் அக்கட்டுரை அனுப்பப் பட்டதால்  அது ஆங்கிலத்தில்
உள்ளது. அது இன்றைக்கும் பொருந்தும் அதை மீண்டும்
படிக்குமாறு வேண்டுகிறேன்.

கடந்த பத்தாண்டுகளாக நஷ்டத்தில் இயங்குகிற, நலிவுற்று
விட்ட ஒரு நிறுவனத்தின் VRS Package  இவ்வளவு
கவர்ச்சிகரமாக இருப்பது BSNLல் மட்டுமே. பல்வேறு
தொழில்களில் வழங்கப்பட்ட VRS திட்டத்தை
நன்கறிந்தவன் என்ற முறையில் இதைக் கூறுகிறேன்.

Post VRS Scenario என்பது முடிவெடுக்க உதவும் ஒரு
முக்கியமான காரணி. பல SSAகளில் அந்த SSAவில்
உள்ள மொத்த ஊழியர்களுமே VRSக்கு விண்ணப்பித்து
உள்ளனர். பல SSAகளில் 80 சதம், 90 சதம் என்ற அளவில்
ஊழியர்கள் VRSக்கு விண்ணப்பித்து உள்ளனர். VRS
செயல்படுத்தப்பட்ட பின்னர், மிச்சம் மீதி இருப்பவர்கள்
முற்றிலும் புதிய சூழலில் வேலை செய்ய நேரிடும்.
மானவாரியாக இடமாற்றல்கள் நிகழும். SSA கேடர்கள்
CIRCLE கேடர் ஆகும்; CIRCLE கேடர் All India கேடர் ஆகும்.
இதை நான் ஏற்கனவே கூறினேன். தற்போது இதற்கான
உத்தரவும் வந்து விட்டது.

புதிய சூழலும் புதிய வேலையும் அதிகபட்ச தொழில்நுட்ப
அறிவைக் கோருபவை.ஒரு sluggish work forceஆல்
புதிய சவால்களை ஒருபோதும் எதிர்கொள்ள இயலாது.
DOTயில் இருந்து BSNLக்கு வந்த promotee அதிகாரிகளுக்கும்
GATE தேர்வில் தேறி BSNLல் வேலைக்கு வரும் பொறியியல்
பட்டதாரி இளைஞர்களுக்குமான பாரதூரமான
வேறுபாட்டை கணக்கில் கொண்டு முடிவெடுக்க வேண்டும்.
இதற்கு மேல் இதை விளக்க விரும்பவில்லை. நீங்களே
சிந்தித்துப் பாருங்கள்.

Unceremonious exit என்பதை இந்த VRS 2019 தடுக்கிறது.
இது ஊழியர்களை விட அதிகாரிகளுக்கே அதிகப்பயன்
அளிக்கும் வாய்ப்பு.

மென்மேலும் அறிவியல்-தொழில்நுட்ப மயமாகும்
BSNL நிறுவனம் அதற்கேற்ற கல்வித் தகுதியம்
தொழில்நுட்ப அறிவும் கொண்ட ஊழியர்கள் மற்றும்
அதிகாரிகளை வேண்டி நிற்கிறது. ஏற்கனவே BSNLல்
1.10.2000த்துக்குப் பின்னர் வேலைக்கு வந்த, BSNLல்
நேரடி நியமனம் செய்யப்பட ஊழியர்கள்-அதிகாரிகளுக்கும்,
DOTயில் இருந்து வந்த Lower rank promotee அதிகாரிகளுக்கும்
இடையே மனக்கசப்பும் வெறுப்புணர்வும் நிலவி வருகின்றன.
இது VRS 2019ன் மூலமாக மட்டுமே களையப்பட முடியும்.

யாரினும் கூடுதலாக, அதிகாரிகளுக்கே இந்த VRS 2019
திட்டம் வரப்பிரசாதமாக உள்ளது.

எனவே 50 வயதான ஊழியர்களும் அதிகாரிகளும்
BSNL VRS 2019ஐ ஏற்றுக் கொண்டு, விருப்ப ஒய்வு
பெறுவதே சாலச் சிறந்தது என்று நியூட்டன் அறிவியல்
மன்றம் தெளிவு படுத்துகிறது. இதனால் எதிர்காலத்தில்
பாதகங்கள் விளைய வாய்ப்பில்லை. அப்படி ஏதேனும்
ஏற்படினும், 80,000 பேரைக் கொண்ட ஒரு கூட்டம்
கணிசமான கூட்டு பேர சக்தியைத் தன்னகத்தே
கொண்டுள்ளது என்பது குறிப்பிடத் தக்கது.

இந்தக் கட்டுரையில் கூறப்படும் வழிகாட்டுதல்கள்
DOTயில் இருந்து BSNLக்கு வந்தவர்களுக்கு மட்டுமே
பொருந்தும். அதிகாரிகளைப் பொறுத்த மட்டில்
DOTயில் இருந்து BSNL க்கு வந்த Promotee officersக்கு
மட்டுமே பொருந்தும். இதைக் கவனத்தில் கொள்க.
********************************************************


    
     
  .          




         
        

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக