ஞாயிறு, 3 நவம்பர், 2019

வள்ளுவரைத் தவறாக மேற்கோள் காட்ட வேண்டாம்!
---------------------------------------------------------------------------------
ஒளவியம் பேசேல் என்கிறது ஆத்திசூடி.

அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்
கேடும் நினைக்கப் படும்
என்கிறது குறள்.  

இரண்டு இடங்களிலும் (ஒளவியம், அவ்வியம்)
பொருள் ஒன்றுதான். (ஒளவியம் = பொறாமை.
வள்ளுவர் அவ்வியம் என்று இக்குறளில் எழுதியமைக்குக்
காரணம் என்ன? எதுகைப் பொருத்தம் கருதியே.

இக்குறளில் மோனையும் எதுகையும் அறவே
இல்லாமற்போன நிலையில், செவ்வியான் என்பதற்கு
எதுகையாக அவ்விய என்று எழுதுகிறார். இப்படி
எழுதும்போதுதான் வெண்பாவுக்குரிய செப்பலோசை
பயில்கிறது என்பதை நாம் உணரலாம்.
இது செய்யுட்களில் இயல்பு.

ஈசன் எந்தை இணையடி நீழலே என்ற தேவாரப்
பாடலில் நீழல் என்ற சொல் நீட்டல் விகாரமாக
அமைந்துள்ளது ஏன்? ஓசை நயம் கருதியே. 
ஈசன் என்பதில் ஈ நெடில்; நீழலே என்பதில் நீ நெடில்.
தேவாரத்திலேயே நீழல் என்று எழுதி விட்டமையால்
நிழல் என்று வரும் இடத்தில் எல்லாம் நீழல்
என்று எழுத முற்படுவது சரியாகுமா?

ஆங்கில மரபிலும் poetic licence என்று ஒன்று உண்டு.

வள்ளுவரோ இளங்கோவடிகளோ ஐ என்ற உயிரெழுத்தை
பன்னிரு உயிர்களில் இருந்து நீக்கும் எண்ணத்துடன்
அவ்விய என்று எழுதவில்லை. எல்லா இடங்களிலும்
ஐ என்ற எழுத்தை நீக்கி விட்டு, அய் என்று எழுதுவதற்கு
வள்ளுவரோ இளங்கோவடிகளோ எவருக்கும் உரிமம்
வழங்கவில்லை. இதை உணர்க.





குறுக்கம் எல்லா இடத்துக்கும் உரியதன்று!
-------------------------------------------------------------------
வெட்கம் என்ற சொல் பேச்சு வழக்கில் வெக்கம்
என்றே ஒலிக்கப் படுகிறது. கட்சி என்ற சொல்லை
கச்சி என்றே ஒலிக்கிறோம்.
தொல்காப்பியம் இதை மெய்மயக்கம் (consonant cluster)
என்கிறது.

இது போல உயிர் மயக்கம் (vowel cluster) என்பதையும்
காப்பியர் குறிப்பிடுகிறார். அது போலவே
மகரக் குறுக்கம், ஒளகாரக் குறுக்கம் என்பனவற்றையும்
காப்பியர் குறிப்பிடுகிறார்.

"நலங்கேழ் முறுவல் நகைமுகம் காட்டி
 சிலம்புள கொண்ம் என" (சிலப்பதிகாரம், புகார்க்காண்டம்)
இங்கு கொண்ம் என்பது மகரக் குறுக்கம்.
ம் என்ற எழுத்து தனக்குரிய அரை மாத்திரையில்
குறுகி கால் மாத்திரையாக ஒலிக்கிறது.

அது போலவே ஒளகாரக் குறுக்கத்தின்போது,
ஒள என்பது அவ் என்று ஒலிக்கும்.

இது பொதுப்பண்பு அல்ல.
இதை வைத்துக் கொண்டு, ஐ ஒள வரும்
இடங்களில் எல்லாம் அய் என்றும் அவ் என்றும்
எழுதக் கூடாது. அது பெருந்தவறு.
             
முப்பது எழுத்துக்கள் பற்றி தொல்காப்பியர்!
------------------------------------------------------------------
"எழுத்தெனப் படுவது
அகர முதல் னகர இறுவாய்
முப்பது என்ப"
என்கிறார் தொல்காப்பியர்.
உயிரும் மெய்யும் சேர்ந்து (12+ 18 = 30)
என்கிறார் காப்பியர். உயிர் பன்னிரண்டில்
ஐ ஒள ஆகிய இரண்டும் உண்டு.

எனவே அவற்றை நீக்க எவர்க்கும் உரிமை இல்லை.
ஐ ஒள ஆகிய இரண்டு எழுத்துக்களுக்கும்
முத்தலாக் சொல்ல இயலாது. அவை தமிழ் உள்ளவரையிலும்
இருக்கும்.

அவற்றைப் பயன்படுத்தத் தேவையில்லை என்றும்
விரும்பினால் பயன்படுத்தலாம் என்றும்
அவற்றுக்குப் பதிலாக அய் அவ் ஆகியவற்றைப்
பெய்வதில் தவறில்லை என்றும் வாதம் செய்வது
ஏற்புடைத்தன்று.

ஊக்கமது கைவிடேல் என்றால்
"ஊக்கத்தைத் தருகின்ற மது அருந்துதலைக்
கைவிடாதீர்" என்று பொருள் என்பது பொருந்தாவாதம். 
    


       

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக