வியாழன், 7 நவம்பர், 2019

எழுத்துச் சீர்திருத்தம் பெரியார் செய்யவில்லை!
--------------------------------------------------------------------------
எழுத்து சீர்திருத்ததை ஏதோ பெரியாரே கண்டுபிடித்து அதை செயல்படுத்தியது போல ஆளூர் ஷாநவாஸ் போன்றவர்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
முதலில் அதைப்பற்றிய கருதுகோளை உண்டு செய்து அதனை 1930 ல் புழக்கத்திற்கு கொண்டு வந்தது காரைக்குடி முருகப்பா செட்டியார்.இவர் நடத்திய குமரன் என்கிற இதழில்தான் முதன் முறையாக எழுத்து சீர்திருத்தம் செய்யப்பட்ட ஒரு கட்டுரை வெளி வந்தது.
முருகப்பா செட்டியார் யார் என்றால்? 1917 ல் ஹிந்து மதாபிமான சங்கம் என்ற ஒன்றை ராய.சொக்கலிங்கத்தை தலைமையாக வைத்து 20 தமிழ் அறிஞர் மற்றும் இளைஞர்களுடன் தொடங்கியவர்.
இந்த ஹிந்து மதாபிமான சங்கத்துடன் பாரதியார் நல்ல தொடர்பில் இருந்தார்.அந்த சங்கத்தை வாழ்த்தி "ஹிந்து மதாபிமான சங்கத்தார்" என்ற தலைப்பிலேயே அவருடைய கவிதை தொகுப்பில் பதிப்பித்துள்ளார்.
"துயர் நீக்கிக் கிருதயுகந்தனை
உலகில் இசைக்கவல்ல
புத்தமுதாம் இந்து மதப் பெருமைதனைப்
பாரறியப் புகட்டும் வண்ணம்
தத்துபுகழ் வளப்பாண்டி நாட்டினிற்
காரைக்குடியூர் தனிலே சால
உத்தமராந் தன வணிகர் குலத்துதித்த
இளைஞர் பலர் ஊக்கம் மிக்கார்
உண்மையே தாரகம் என்று உணர்ந்திட்டார்"
என அந்த சங்கத்தவர்களை புகழ்ந்து போற்றியிருக்கிறார்.இதில் முருகப்பா செட்டியார் நீதிகட்சியுடனும் நல்ல தொடர்பில் இருந்தார்.இவர்தான் முதலில் எழுத்து சீர்த்திருத்தத்தை செய்தவர்.பின்பு தமிழறிஞர்கள் சேர்ந்து 1933 ல் பச்சையப்பன் கல்லூரியில் தமிழன்பர் மாநாட்டில் எழுத்து சீர்த்திருத்தம் செய்வதென தீர்மானம் போட்டனர்.
அதன் பின்னால் 1933 தமிழ் வரிவடிவ மாற்றத்தை குறித்து சு.சி.சுப்பையா 'சிங்கப்பூர் முன்னேற்றம்' என்கிற இதழில் கட்டுரை எழுதினார்.அவரும் பயன்படுத்தினார்.இப்படி பலர் செய்து முடித்த ஆய்வுகளை பயன்படுத்த பத்திரிக்கைகள் முன் வரவில்லை.அப்படி அவர்களுக்கு கிடைத்தது குடியரசு மற்றும் சுயமரியாதை இயக்கத்தவர் நடத்திய பத்திரிக்கைகள்தான்.எனவே 1935 ல் பெரியாரின் குடியரசிலும் அதை பயன்படுத்த வைத்தனர்.
1950 ல் கல்வி அமைச்சராக இருந்த அவினாசி செட்டியார் வரி வடிவ மாற்றத்தை குறித்து ஆராய தனிக்குழு அமைத்தார்.ஆனால் சுதந்திரம் அடைந்து நடந்த தேர்தலுக்கு பிறகு அமைந்த காங்கிரசும் ஏற்கவில்லை.திமுக ஆட்சிக்கு வந்தும் அந்த எழுத்து சீர்திருத்தத்தை ஏற்கவில்லை.1977 ல் எம்ஜிஆர் ஆட்சிக்கு வந்து 1978 ல் தமிழக அரசே எழுத்து சீர்த்திருத்தத்தை ஏற்றது.
அதை எல்லோரும் பெரியாரின் எழுத்து சீர்திருத்தம் என்று அவர் தொடர்ந்து பயன்படுத்தி வந்ததாலும்,அதைப்பற்றி எழுதி வந்ததாலும் அவர் பெயரே நிலைத்துவிட்டது.எம்ஜிஆருக்கும் கருணாநிதியை விட நான்தான் திராவிட கொள்கையை அமுல்படுத்துபவன் என்ற அரசியல் பிம்பம் தேவைப்பட்டதால் அவரும் இதை செய்யவே விரும்பினார்.
முதன் முதலில் அந்த சட்டம் வந்து அதை தினமலர் நாளிதழ்தான் முதலில் பயன்படுத்த ஆரம்பித்தது.1978 ல் தினமலர் செய்த வேலையை 1935 லேயே செய்தவர் பெரியாரே தவிர அவர் சீர்த்திருத்தத்தை செய்தவர் அல்ல.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக