ஞாயிறு, 21 ஜூன், 2015

தகர்ந்துபோன தற்கொலைத் தத்துவமும் 
நொறுங்கிப்போன சயனைடு குப்பிகளும்!
------------------------------------------------------------------------------------------
(10)ஈழ விடுதலைப் போரும் புலிகளின் வீழ்ச்சியும்!
ஒளிவீசும் உண்மைகளின் அணிவகுப்பு!!  
---------------------------------------------------------------------------------
வீரை பி இளஞ்சேட்சென்னி 
----------------------------------------------------------------------------------
வாழ்வையும் சாவையும் சமமாகவே கருதியவர்கள் 
புலிகள். வாழ்வைப் போலவே சாவையும்
கொண்டாடியவர்கள் புலிகள். விடுதலைப் போரில் 
இன்னுயிரை நீத்த புலித்தியாகிகள், மாவீரர் நினைவிடத்தில் 
நடுகற்கள் ஆனார்கள். ஆரம்பத்தில் வெகுசிலரின்  
நடுகற்களைக் கொண்டு அமைக்கப் பட்ட மாவீரர்
நினைவிடம், போகப் போக பெரும் எண்ணிக்கையிலான 
புலிகளின் நடுகற்கள் இடம்பெறும் அளவுக்கு விரிந்து
கொண்டே போனது. இது புலிகளின் சோக வரலாறு.
**
கரும்புலிகள் என்ற பெயரில் ஒரு தற்கொலைப் 
படையையே உருவாக்கி இருந்தனர் புலிகள். உடல் 
முழுவதும் வெடிமருந்துகளைக் கட்டிக்கொண்டு 
எதிரி இலக்குகளின் மீது பாய்ந்து, தானும் வெடித்துச் 
சிதறி, எதிரிகளையும் வெடித்துச் சிதறடிப்பதுதான்
கரும்புலிகளின் பணி. மிக்க இளம் வயதினரால் 
பெரும்பாலும் பதின் வயதினரால் (teen age) ஆனது 
இப்படை. மரணம் ஒன்றையே இலக்காகக் கொண்டு,
மரணத்தை நோக்கி மகிழ்ச்சியுடன் பீடுநடை போட்டுச் 
சென்றவர்கள் கரும்புலிகள்.
**       
கரும்புலிகள் மட்டுமின்றி, எந்த ஒரு புலியாக 
இருப்பினும், எதிரியிடம் சிக்க நேர்ந்தால், சயனைடு 
அருந்தி உயிர் துறக்க வேண்டும் என்பது புலிகள் 
இயக்கத்தின் நிலையாணை (standing order). புலிகள் 
இயக்கத்தில் சேர்ந்தவுடன், ஒவ்வொரு புலிக்கும்
சீருடை துப்பாக்கியுடன் கழுத்தில் சயனைடு குப்பியும் 
கட்டி விடப்படும். ராஜீவ் காந்தியின் கொலை வழக்கு 
விசாரணையின்போது, தமிழ்நாட்டிலும் 
பெங்களூரிலும் CBIஇடம் சிக்கிக்கொள்ள விரும்பாமல் 
சயனைடு அருந்தி உயிர் துறந்த புலிகள் 21 பேர் 
என்பதை இங்கு நினைவு கூர வேண்டும்.   
**
உலக வரலாற்றில் எந்த ஒரு விடுதலை இயக்கமும் 
கற்பனையில்கூடநினைத்துப் பார்க்க இயலாத அளவு 
உயிர்த் தியாகத்தைச் செய்தவர்கள் புலிகள் என்பது 
மானுட வரலாற்றில் பதிவு செய்யப் பட்டுள்ளது.
எனினும், இவை யாவும் விழலுக்கு இறைத்த நீராகிப் 
போயின என்பது சோகமுரண் (irony) ஆகும்.
**
தொடக்கம் முதலே புலிகளிடம்  கோலோச்சிய 
தற்கொலைத் தத்துவமும் சயனைடு குப்பிகளும் 
அனந்தபுரம் சமருடன் முடிவுக்கு வந்தன. சயனைடு 
அருந்திய கடைசிப் புலிகள், அனந்தபுரம் முற்றுகையில்  
சிக்கிய புலிகள்தாம். அதன்பிறகு, எவர் ஒருவரும் 
தற்கொலை செய்து கொள்ளவோ சயனைடு அருந்தவோ 
இல்லை; தயாராகவும்  இல்லை.
**
2009 ஏப்ரல் 5 அன்று முடிவுற்ற அனந்தபுரம் சமர் ஆயிரம் 
புலிகளுக்கு மேல் பலி கொண்டது; அதிகாரபூர்வ கணக்கு 
625 என்பது வெறும் சம்பிரதாயமே. இத்தோடு புலிகள் 
அமைப்பு, அமைப்புரீதியாக நொறுங்கிப் போனது.
மக்களின் மீதான புலிகளின் தலைமை என்பது 
முடிவுக்கு வந்தது. புலிகளின் தலைமைக்குக் கட்டுப்பட்டு  
இருக்க மக்கள் விரும்பவில்லை. இறுதிப் போரின் 
முடிவு எல்லோருக்கும் தெரிந்து விட்டது. புலிகளால் 
மக்களைக் கட்டுப் படுத்த முடியவில்லை. தளபதிகளால் 
புலிப்படை வீரர்களை, சக புலிகளைக் கட்டுப் படுத்த 
முடியவில்லை. 
**
இதன் நிகர விளைவு என்னவெனில், எந்த ஒரு புலியும் 
தற்கொலை செய்து கொண்டு சாக விரும்பவில்லை.
தற்கொலைத் தத்துவம் தகர்ந்து நொறுங்கியது.
சயனைடு குப்பிகள் விழுந்து நொறுங்கின. உயிரைக் 
காப்பாற்றிக் கொள்வது எப்படி என்ற ஒரு கேள்வியே 
எல்லாப் புலிகளின் மூளையையும் குடைந்து கொண்டு 
இருந்தது. சரண் அடைவது ஒன்றே தாரக மந்திரமாக 
ஆகிப் போனது.
**
ஒரு காலத்தில் மரணத்தை நோக்கி மகிழ்ச்சியுடன் 
துள்ளல் நடை போட்டுச் சென்ற புலிகள், இன்று 
சரண் அடையத் துடித்தார்கள். வீழ்ந்து விடாத வீரமும் 
மண்டியிடாத மானமும் காற்றில் கரைந்த கற்பூரம் 
ஆயின. கொடூரச் சிங்களப் படையினரிடம் கருணையை 
யாசித்து நின்றார்கள்.
**
ஆங்காங்கே சிறுகச் சிறுக, கொஞ்சம் கொஞ்சமாக 
வாய்ப்புள்ள இடங்களில் எல்லாம் புலிகள் சரண் 
அடையத் தொடங்கினார்கள். ( இங்கு சரண் அடைதல் 
என்பது புலிகள் சரண் அடைந்ததை மட்டுமே குறிக்கும்.
சாதாரண மக்கள் சிங்கள ராணுவம் அமைத்திருக்கும் 
பாதுகாக்கப்பட்ட பகுதிக்குள் (NO FIRE ZONE) செல்வதோ,
ராணுவத்திடம் தங்களை ஒப்படைப்பதோ சரண் 
அடைதல் ஆகாது. ஏனெனில், ஆயுதங்களுடன் போரில் 
ஈடுபட்டவர்கள் மட்டுமே எதிரியிடம் சரண் அடைய 
முடியும். போரில் ஈடுபடாத ஆயுதமற்ற பொதுமக்களுக்கு  
சரண் அடைதல் என்பது பொருந்தாது.)
**
புலிகளின் செய்தித் தொடர்பாளர் தயா மாஸ்டர் 2009
ஏப்ரல் 21 அன்று சரண் அடைந்தார். அவருடன் ஜார்ஜ் 
என்ற புலியும் சரண் அடைந்தார். சுப தமிழ்ச்
செல்வனின் உதவியாளராக இருந்தவர் இந்த ஜார்ஜ்.
நன்கு பிரபலமான இவர்களின் சரணடைவு, மற்றப் 
புலிகளையும் சரணடைவை நோக்கி உந்தித் தள்ளியது.
**
மே 17/18  தேதியில்தான் சரணடைவு தொடங்கியது என்று 
கருதும் எவரும் ஈழப்போரின் களநிலவரம் தெரியாத 
மூடர்களே ஆவார். ஏப்ரல் 5 அனந்தபுரம் முற்றுகையின் 
போதே சரணடைவு தொடங்கி விட்டது என்பதே உண்மை.
**
இறுதிப்போரின்போது, முள்ளிவாய்க்காலில் எஞ்சி இருந்த 
புலிகளின் எண்ணிக்கை அதிகம் போனால் 2000க்குச் 
சற்றுக் குறைவாக இருக்கலாம். கூண்டோடு சரணடைவு 
என்ற முடிவை புலித்தலைமை எடுத்த போது, உயிருடன் 
இருந்த புலிகள் அனைவரும் தலைமை உட்பட 
சரண் அடைந்தனர்.
**
இவ்வாறு கூண்டோடு சரண் அடைந்த புலிகளின் நிலை 
என்ன ஆனது?
1) சரண் அடைந்த பின்னர், புலித்தலைமை முற்றிலுமாக
(தேசியத் தலைவர் உட்பட) படுகொலை செய்யப்பட்டது.
2) சில தளபதிகள் மற்றும் முக்கியத் தலைவர்கள் 
தென்னிலங்கையில் ரகசியச் சிறைகளில் அடைக்கப் 
பட்டுள்ளனர். ( உதாரணம்: யோகரத்தினம் யோகி,
பேபி சுப்பிரமணியன் போன்றோர்).
3) அடையாளம் காணப்படாமல் தப்பித்த வெகு சில 
புலிகள் மக்களோடு மக்களாக வாழ்ந்து வருகின்றனர்.
---------------------------------------------------------------------------------------------
தொடரும் 
*************************************************************        

  
      
       

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக