செவ்வாய், 23 ஜூன், 2015

குலைநடுங்கும் ராஜபக்சே சகோதரர்கள்!
உண்மையை வெளிச்சம் போட்டுக் காட்டிய சந்திர நேரு!!
------------------------------------------------------------------------------------------
(12) ஈழ விடுதலைப் போரும் புலிகளின் வீழ்ச்சியும்!
ஒளிவீசும் உண்மைகளின் அணிவகுப்பு!!  
---------------------------------------------------------------------------------
வீரை பி இளஞ்சேட்சென்னி 
----------------------------------------------------------------------------------
2014 மார்ச்சில் ஐ.நா மன்றத்தின் மனித உரிமைக் குழு (UNHRC)
சிங்கள அரசு நிகழ்த்திய போர்க்குற்றங்களை விசாரிக்க
வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியது. அப்போது
ராஜபக்சே இலங்கை சனாதிபதியாக இருந்தார். அடுத்து
நடந்த தேர்தலில், ராஜபக்சே தோற்று, மைத்ரிபால சிறிசேன
சனாதிபதியாகப் பொறுப்பேற்ற பின், அவரது அரசு போர்க்குற்ற
விசாரணையை எதிர்கொள்ள வேண்டியதாயிற்று.
**
ஐ.நா மன்றத்திடம், தங்களின் அரசு புதிதாகப் பொறுப்பேற்றுக்
கொண்டிருப்பதால், விசாரணையை எதிர்கொள்ள ஆறு மாத
கால அவகாசம் வேண்டும் என்று மைத்ரி அரசு கோரியது.
இதை ஐ.நா மன்றம் ஏற்றுகொண்டு 16 பிப்ரவரி 2015 அன்று
ஆறு மாத அவகாசம் வழங்கியது. இந்த அவகாசம் வரும்
ஆகஸ்ட் இறுதியில் முடிவடைகிறது. எனவே எதிர்வரும்
செப்டம்பர் 2015இல் போர்க்குற்ற விசாரணையை மைத்ரி
அரசு எதிர்கொள்ள வேண்டும்.
**
இந்தப் போர்க்குற்ற விசாரணை முறையாகவும்
நியாயமாகவும் நடைபெறும் என்றால், ராஜபக்சே
சகோதரர்களும், சரத் பொன்சேகா உள்ளிட்ட ராணுவத்
தளபதிகளும் தண்டிக்கப் படுவது உறுதி.
**
இசைப்பிரியா, பாலச்சந்திரன் படுகொலை மட்டுமின்றி,
சரண் அடைந்த புலித்தலைவர்களைப் படுகொலை
செய்ததும் போர்க்குற்ற விசாரணையில் முக்கிய இடம்
பெறும். இதனால் கதிகலங்கிப் போயிருக்கும் ராஜபக்சே
குடும்பம், புலித்தலைவர்கள் எவரும் சரண் அடையவில்லை
என்று தடாலடியாக அன்றும் மறுத்தது; இன்றும் மறுத்து
வருகிறது.
**
சரண் அடைந்தபின் கொல்லப்பட்ட நடேசன் புலித்தேவன்
உள்ளிட்ட புலித்தலைவர்கள் போர் நடக்கையில் ராணுவத்
தாக்குதலில் கொல்லப் பட்டார்கள் என்ற பொய்யைத்
திட்டமிட்டுப் பரப்பி வருகிறது ராஜபக்சே கும்பல். இந்தப்
பொய்யை இந்திய உளவுத்துறை அதிகாரிகளும் (RAW)
உலகெங்கும் பரப்பி வருகிறார்கள். தமிழ்நாட்டிலும்
உளவுத்துறை அதிகாரிகளின் கைப்பாவையாகச்
செயல்படும் பல சிங்களக் கைக்கூலிகள், புலித்தலைவர்கள் 
எவரும் சரண் அடையவில்லை என்ற பொய்யைப் பரப்பி 
வருகிறார்கள்.
**
மானுட வரலாற்றின் கருப்பு அத்தியாயமாகத் திகழும்
வெள்ளைக்கொடிச் சரணடைவு (WHITE FLAG SURRENDER)
என்ற அந்தத் துயர நிகழ்வு அசைக்க முடியாத
ஆதாரங்களைக் கொண்ட ஒரு நிகழ்வாகும். செஞ்சிலுவைச்
சங்க அதிகாரிகள், ஐ.நா பிரதிநிதிகள், நார்வே அதிகாரிகள்,
வெள்ளை மாளிகை அதிகாரிகள், பத்திரிகையாளர்
மேரி கெல்வின் மற்றும் சிங்கள அதிகாரிகள் உள்ளிட்ட
அனைவருக்கும் முறையாகத் தகவல் அளிக்கப் பட்டு,
அதன் பிறகே புலித்தலைவர்களின் சரணடைவு நிகழ்ந்தது.
இதற்கான எஸ்.எம்.எஸ் பதிவுகள், குரல் பதிவுகள் ஆகிய
ஆதாரங்கள் உள்ளன.
**
சரண் அடைந்தவர்களை ஒரு மணி நேரத்துக்குள் சுட்டுக்
கொன்று விட்டார்கள் என்ற உண்மையை, இலங்கை 
நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு அண்மையில்
வெளிப்படுத்தி உள்ளார்.
**
முள்ளி வாய்க்காலில் சுற்றி வளைக்கப் பட்ட 22000
மக்களைக் காக்க, புலித்தலைமை ஒட்டு மொத்தமாக
அனைத்துப் புலிகளும் சரண் அடைவது என்ற முடிவை
எடுத்தது. இந்த முடிவை எடுக்காமல் இறுதி வரை
போரிட்டு இருந்தால், 22000 மக்களும் மடிந்து போய்
இருப்பார்கள். எனவே புலிகளின் சரணடைவு என்ற முடிவு
மக்களின் உயிர் காக்கும் முடிவு. இதைக் குறை
கூறுவதற்கில்லை.
**
முள்ளி வாய்க்கால் இறுதி நாட்களில் (மே 15-19) களத்தில்
எஞ்சி இருந்த 2000 புலிகளும் இறுதி வரை போரிட்டு
மடிந்தாலும், அங்குள்ள 22000 மக்களைக் காப்பாற்ற
முடிந்திருக்குமா என்றால், இல்லை என்பதே உண்மை.
ஏனெனில், கொடூர சிங்கள ராணுவம் கொத்துக்
குண்டுகளையும் பாஸ்பரஸ் குண்டுகளையும் கொண்டு
மக்களை அழிக்க வெறிகொண்டு திரிந்தது. எனவே,
நம்பியிருந்த மக்களைக் காப்பாற்றும் ஒரே நோக்குடன்,
தேசியத் தலைவர் அவர்கள் இந்த முடிவினை எடுத்தார்.
**
அதன்படி, போரில் இறந்து போன புலிகளைத் தவிர,
எஞ்சி இருக்கும் புலிகள் அனைவரும் சரண் அடைவது
என்ற முடிவு எடுக்கப் பட்டது. இந்த முடிவு தேசியத்
தலைவரின் முடிவு. தேசியத் தலைவர் அவர்கள்
இந்த முடிவினை ரகசியமாக வைத்திருக்கவில்லை.
உடனடியாக, சர்வதேச சமூகத்திற்கு இந்த முடிவைக்
கூறுமாறு கே.பி அவர்களுக்குக் கட்டளை இட்டார்.
இதைத் தொடர்ந்து, "துப்பாக்கிகளை மௌனிக்கச்
செய்கிறோம்"  என்ற முடிவை கே.பி அவர்கள் அறிவித்தார்.
**
உளவுத்துறையின் எடுபிடிகளும், சிங்கள ராஜபக்சேவின் 
கைக்கூலிகளும், வெள்ளைக்கொடிச் சரணடைவு என்ற 
நிகழ்வே நடக்கவில்லை என்று தமிழ் மக்களிடம் பொய்யுரை 
கூறி வருகின்றனர். இத்தகைய  பொய்களை முறியடிப்பதும்,
போர்க்குற்ற விசாரணை குறித்து மக்களிடம் விழிப்புணர்வை 
ஏற்படுத்துவதும் நமது உடனடிக் கடமையாகும்.
**************************************************************** 
           
     
                

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக