வியாழன், 11 ஜூன், 2015

கிழிந்த வேட்டிப் புலவர் பாட்டின் உலகியல் உண்மை!
பக்குடுக்கை நன்கணியார் பாடல்!
------------------------------------------------------------------------------------------
வீரை பி இளஞ்சேட்சென்னி 
-------------------------------------------------------------------------------------------
இருவேறு உலகத்து இயற்கை திருவேறு 
தெள்ளியர் ஆதலும் வேறு.------குறள்- --------
**
சங்க இலக்கியங்கள் என்பவை பதினெட்டு நூல்கள் ஆகும்.
பத்துப்பாட்டும் எட்டுத் தொகையும் (10+8 = 18) ஆகும்.
எட்டுத் தொகை நூற்களுள் ஒன்று புறநானூறு. புறம் சார்ந்த 
நானூறு பாடல்களைக் கொண்டது புறநானூறு. இதில் இருந்து 
ஒரு பாடலை இன்று பார்ப்போம்.
**
இந்தப் பாடலை இயற்றியவர் ஒரு கிழிந்த வேட்டிப் புலவர்.
ஆம், வறுமை காரணமாக, எந்நேரமும் கிழிந்த வேட்டியையே 
உடுத்தி இருந்தவர் அவர். அவர் உடுத்தி இருந்த கிழிந்த வேட்டியே 
அவரை அடையாளப் படுத்தியது. மேலும் அவர் ஒரு கணியர்.
காலத்தைக் கணித்துச் சொல்பவர். அதாவது சோதிடர். சங்க 
காலத்தில் தமிழகத்தில் சோதிடம் வழக்கில் இருந்தது.
**  
எனவே அவர் பக்குடுக்கை நன்கணியார் என்று அழைக்கப் 
பட்டார். பக்கு+உடுக்கை = பக்கு உடுக்கை. பக்கு எனில் 
கிழிசல் என்று பொருள். உடுக்கை எனில் உடை, இங்கு 
வேட்டி ஆகும். (உடுக்கை இழந்தவன் கை போல என்ற 
குறளைக் கருதவும்.)
**
நன்கணியார் எனில் நல்ல கணியர் 
என்று பொருள். பக்குடுக்கை நன்கணியாரின் பாடல் 
புறநானூற்றில் 194ஆவது பாடலாக உள்ளது. இந்த ஒரு 
பாடலை மட்டுமே அவர் பாடி உள்ளார். "ஓர் இல் நெய்தல் 
கறங்க" என்று தொடங்கும் அப்பாடலைக் கீழே காண்க.
**
ஓர் இல் நெய்தல் கறங்க ஓர்இல் 
ஈர்ந்தண் முழவின்  பாணி ததும்பப்
புணர்ந்தோர் பூவணி அணியப் பிரிந்தோர் 
பைதல் உண்கண் பனிவார்பு உறைப்பப் 
படைத்தோன் மன்றஅப் பண்பி லாளன் 
இன்னாது அம்மஇவ்  வுலகம் 
இனிய காண்கஇதன் இயல்புணர்ந் தோரே.
**
(நேரிசை ஆசிரியப்பா, பொதுவியல் திணை,
பெருங்காஞ்சித் துறை.)         
**
இப்பாடலுக்குப் பொருள் தர நான் விரும்பவில்லை.
வாசகர்கள் தாமே முயன்று பொருள் அறிந்திடுக.
**
நான் இலக்கியம் பயின்றகாலை, சங்க இலக்கியம்,
இடைக்கால இலக்கியம், சிற்றிலக்கியம், தற்கால 
இலக்கியம் என்று தமிழின் இலக்கியங்களைப் 
பயின்றவன்தான் எனினும், 2009 மே மாதம்தான் 
இப்பாடலின் பொருளையும், அது வலியுறுத்தும் 
உலகியல் உண்மையையும் அறிந்தேன்.அது இன்றும் 
பொருந்துமாறு உள்ளது என்று கண்டு வியந்தேன்.
**
பின்குறிப்பு: இது முற்றிலும் இலக்கியக் கட்டுரை.
எனவே அரசியல் கருத்துக்கள் பின்னூட்டங்களாய் 
அமைதல் தகாது.
************************************************************   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக