வெள்ளி, 12 ஜூன், 2015

ஈழ விடுதலைப் போரும் புலிகளின் வீழ்ச்சியும்!
ஒளிவீசும் உண்மைகளின் அணிவகுப்பு!!  
----------------------------------------------------------------------------
வீரை பி இளஞ்சேட்சென்னி 
-------------------------------------------------------------------------------
இளையோர் சூடார் வளையோர் கொய்யார் 
நல்யாழ் மருப்பின் மெல்ல வாங்கிப் 
பாணன் சூடான் பாடினி அணியாள் 
ஆண்மை தோன்ற ஆடவர்க் கடந்த 
வல்வேல் சாத்தன் மாய்ந்த பின்றை 
முல்லையும் பூத்தியோ ஒல்லையூர் நாட்டே?
----புறம்-242,  குடவாயில் நல்லாதனார்-----
**
தமிழ் ஈழ தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களையும் 
புலிகளையும் எவர் ஒருவரும் ஆதரிக்கலாம் அல்லது 
மறுக்கலாம். அஃது அவரவர் கருத்தியல் சார்பு. அது குறித்து 
இக்கட்டுரை கவலை கொள்ளவில்லை.
**
ஆனால், ஈழம் குறித்த உண்மைகள் புனிதமானவை. 
அவை மக்களிடம் சென்று சேர வேண்டும்; சேர்ப்பிக்கப் 
பட வேண்டும்.உண்மைகளை மறைப்பதும் திரிப்பதும், 
அவை மக்களிடம் சென்று விடாமல் அணைபோட்டுத் 
தடுப்பதும், பொய்களை மக்களின் கருத்தில் திணிப்பதும் 
ஏற்க ஏலாதவை.
**
தமிழ்ச் சூழல் ஈழப் போர் குறித்த முழுப் பொய்களாலும்
பகுதி உண்மைகளாலும் (partial truths) மூச்சுத் திணறுகிறது. 
ஈழப்போர் முடிந்து ஆறு ஆண்டுகள் உருண்டு ஓடிய 
பிறகும், உண்மைகள் தமிழக எல்லைக்கு வெளியிலேயே  
தடுத்து நிறுத்தப் பட்டு இருக்கின்றன.உலகமே நன்கறிந்த 
உண்மைகள் கூடத் தமிழனை அண்டாமல் விலகி 
நிற்கின்றன. 
**
தமிழனுக்கு உண்மை தெரிந்து விடக் கூடாது என்ற 
தீவிரத்துடன் பிற்போக்குச் சக்திகள் செயலாற்றுகின்றன.
இதில் குறிப்பிடத்தக்க வெற்றியும் அடைந்து இருக்கின்றன.
ஊடகங்கள் முதல் அரசியல் இயக்கங்கள் வரை, இதில் 
வியக்கத்தக்க கருத்தொருமையைப் பேணுகின்றன.
**
ஈழப்போர் முடிந்த இந்த ஏழாவது ஆண்டில் கூட, தேசியத் 
தலைவர் இன்னும் உயிருடன் இருக்கிறார் என்று 
நாக்கூசாமல் யாராவது பேச இயலுமா, உலகில் 
எங்கேனும்! ஆனால் தமிழ்நாட்டில் அது இயலும்.
பொய்மைகள் விலைபோகும் சந்தைதானே தமிழகம்!
**
எனவே தேசியத் தலைவர் குறித்தும், புலிகளின் 
வீழ்ச்சி குறித்தும், ஈழப்போரில் பங்கு பெற்ற அனைவரின் 
பாத்திரம் குறித்தும் ஒளிவீசும் உண்மைகளை 
இக்கட்டுரைத் தொடர் மக்கள் முன் வைக்கும்.
காண்க! பயிலுக! பரப்புக!
**
முதலாவதாக, முள்ளிவாய்க்கால் இறுதிப் போரில் 
இன்னுயிர் நீத்த, தமிழ் ஈழ தேசியத் தலைவர் 
அவர்களுக்கும், புலித் தளபதிகளுக்கும் ஈழ 
மக்களுக்கும் வீரவணக்கம் செலுத்தி, இத்தொடர் 
முதலடி எடுத்து வைக்கிறது.
**
இக்கட்டுரையின் தொடக்கத்தில் காணும் புறப்பாடல் 
சங்க காலத்துக் குறுநில மன்னன் பெருஞ்சாத்தனின் 
மறைவுக்கு இரங்கி, குடவாயில் நல்லாதனார் பாடியது.
சங்க மரபின் தொடர்ச்சியாய், ஈராயிரம் ஆண்டுகளின் 
பின் எழுந்து, பொங்குதமிழ் உலகத்தார் போற்றுகின்ற 
புலித்தலைவன் ஈழ மன்னன் பிரபாகரன் மறைவுக்குச் 
செலுத்தும் வீர வணக்கமாய் இப்பாடல் அமைகிறது.
** 
சாத்தனின் மறைவுக்குப் பின்னர், 
ஒல்லையூரில் எவரும் பூச்சூடவும் 
இல்லை: கொய்யவும் இல்லை. ஆனாலும் முல்லை 
மட்டும் பூத்தது. பூத்ததென்ன முல்லையே என்று 
வினவுகிறார் புலவர். ஆயினும், ஈழத்தில் முல்லையும் 
பூக்க மறுத்து, மன்னன் பிரபாகரனுக்கு அஞ்சலி 
செலுத்துகிறது.
*************************************************************
தொடரும் 
**************************************************************             

   
     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக