வியாழன், 18 ஜூன், 2015

ஆனந்தியின் கணவர் எழிலனின் துயர முடிவும்
உளவுத்துறை அதிகாரிகளின் இழிதகைமையும்! 
-------------------------------------------------------------------------------------------
(8) ஈழ விடுதலைப் போரும் புலிகளின் வீழ்ச்சியும்!
ஒளிவீசும் உண்மைகளின் அணிவகுப்பு!!  
---------------------------------------------------------------------------------
வீரை பி இளஞ்சேட்சென்னி 
----------------------------------------------------------------------------------
சிங்களப் படைகளிடம் 2009 மே 18 அன்று சரண் 
அடைந்ததாகக் கூறப்படும் தமது கணவர் எழிலன் 
என்ன கதி ஆனார் என்று தெரியாமல் தவிக்கும் 
திருமதி ஆனந்தி அவர்களின் சோகத்தில் நாமும் 
பங்கு கொள்கிறோம். சிங்களத்தின் அன்றைய 
ராஜபக்சே அரசும் இன்றைய மைத்ரிபால சிரிசேனா 
அரசும் ஆனந்திக்குப் பதில் சொல்லக் கடமைப் 
பட்டவர்கள்.
**
சொல்லப்படும் சரணடைவுக்கு முன்பு, எழிலன் 
திருகோணமலை மாவட்டத்தின் அரசியல் 
பொறுப்பாளராக இருந்தவர். படைத்தளபதியாக இவர் 
பணியாற்றவில்லை என்பதும் அரசியல் பிரிவின் 
மாவட்டப் பொறுப்பாளராகவே இருந்தார் என்பதும் 
குறிப்பிடத் தக்கது. இவரின் இயற்பெயர் சின்னத்துரை 
சசிதரன்.
**
2008-2009 காலக்கட்டத்தில், சுமார் ஒன்றரை ஆண்டு காலம் 
இவர் கிளிநொச்சியில் பணியாற்றியபோது, புலிகளுக்கு 
ஆள் சேர்க்கும் பொறுப்பில் இருந்தார். அப்போது தமிழ் 
மக்களிடம் மிகவும் குரூரமாகவும் கொடூரமாகவும் 
நடந்து கொண்டார் என்பது இவர் மீது தமிழ்க் குடும்பங்கள் 
கூறும் கடுமையான குற்றச் சாட்டு. 
**
ஒரு உதாரணம்.
வலைஞர்மடம் என்ற ஊரில் உள்ள ஒரு தேவாலயத்தில் 
(our Lady Rosary Church) ஆயிரம் தமிழ் மக்கள் தஞ்சம் 
அடைந்து இருந்தனர். அங்குள்ள கத்தோலிக்கப் 
பாதிரியார்கள் அவர்களுக்குக் கஞ்சி ஊற்றிக் 
காப்பாற்றி வந்தனர். எழிலன் தலைமையில் அங்கு 
புகுந்த புலிகள் தேவாலயத்தைக் கைப்பற்றி,
500க்கும் மேற்பட்ட சிறுவயதுப் (teen age boys and girls) 
பிள்ளைகளைப் புலிப்படையில் சேர்ப்பதற்காக, 
பேருந்துகளில் ஏற்றிக்கொண்டு சென்றனர். 
இவர்களில் பலர், கரும்புலிகள் எனப்படும் 
தற்கொலைப் படையில் சேர்க்கப் பட்டனர்.    
**
முல்லைத்தீவு வீழ்ந்தபின், 2009 சனவரிக்குப்பின், 
முல்லைத்தீவின் கரையெங்கும் சிங்களப் படையினர் 
அணிவகுத்து இருந்தனர். சிவிலியன்களை 
வெளியேற்றினால், புலிகளை உயிரோடு பிடித்து 
விடலாம் என்பதற்காக, சிங்கள ராணுவம், பாதுகாக்கப் 
பட்ட பகுதிகளை (NO FIRE ZONE) ஏற்படுத்தி இருந்தது.
**
நாம் முந்திய கட்டுரைகளில் கூறியிருந்தபடி, கிளிநொச்சி 
முல்லைத்தீவு வீழ்ச்சியானது, புலிகளுக்கும் தமிழ் 
மக்களுக்கும் உள்ள உறவைத் தலைகீழாக மாற்றி 
இருந்தது. மக்களுக்காகப் புலிகள் என்ற நிலை 
மாறிப்போய், புலிகளுக்காக மக்கள் என்ற நிலை உருவாகி
இருந்தது. பாதுகாக்கப் பட்ட பகுதிகளுக்கு மக்கள் 
வெளியேறத் துடித்தனர். ஆனால் புலிகள் அவர்களை 
அனுமதிக்கவில்லை.
**
புலிகளின் பகுதியில், உதாரணமாக புதுக்குடியிருப்பு 
போன்ற பகுதிகளில், உணவு, தண்ணீர். மருந்து என 
இன்றியமையாத பொருட்களுக்கே பெரும் பஞ்சம்.
எனவே தமிழ் மக்கள் சிலர், சுமார் நூறு பேர் என்ற 
அளவில், பாதுகாக்கப் பட்ட பகுதிக்குச் செல்ல முயன்றனர்.
வலைஞர்மடம் பகுதியில் உள்ள குருசடி சந்தி என்ற 
இடத்தில், எழிலன் புலிகளுடன் அவர்களை வழி 
மறித்துத் தடுத்துத் தங்கள் இருப்பிடத்துக்கே 
பலவந்தமாகக் கூட்டிச் சென்றார்.
**
இந்த நிகழ்வின்போது, ஒரு இளம்பெண், பால் இல்லாமல்
அழும் தன் இரண்டு குழந்தைகளுக்காக, தன்னை வெளியே 
விடுமாறு கெஞ்சினார். அதைச் செவிமடுக்க மறுத்த 
எழிலன், துப்பாக்கியை எடுத்து, அந்தப் பெண்ணின் 
நெற்றியில் சுட்டுக் கொன்றார். கூடியிருந்த கூட்டம் 
முழுவதும் அச்சத்தில் உறைந்து போய் நின்றது.
**
இவ்வாறு சொந்த மக்களின் வெறுப்பைச் சம்பாதித்தவர்
தான் ஆனந்தியின் கணவர் எழிலன். சிங்களப் 
படையினரை விட, எழிலனையே தமிழ் மக்கள் 
அதிகமாக வெறுத்தனர். மொத்தப் போர்க்களத்திலேயே 
எழிலன் அளவுக்கு, தமிழ் மக்களால் வெறுக்கப்பட்ட 
கொடூரன், வேறு எவரும் இல்லை எனலாம்.
**
இந்நிலையில், எழிலனுக்கு என்ன நேர்ந்தது என்பது 
குறித்து, இரண்டு தகவல்கள் கூறப் படுகின்றன.
1) சிங்களப் படையினர் எழிலனைக் கொன்று இருக்கக்
கூடும்.
2) புலிகளின் போட்டிக் குழுக்களாக இருந்த பலரும்,
போரின் இறுதிக் கட்டத்தில், மே 2009இல், தமிழ் 
மக்களோடு கலந்து, அவர்களுக்கு ஆதரவாய் இருந்து,
கொடிய மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட புலிகளைப் 
பிடித்து, அவர்களை தண்டித்தனர் என்பது களத்தில் 
இருந்தோர் அறிந்த செய்தியே. மக்களிடம் அப்போது 
மேலோங்கி இருந்த புலி-எதிர்ப்பு உணர்வே, போட்டிக் 
குழுக்களின் இச்செயலுக்கு உந்துவிசையாக இருந்தது.
**  
எழிலன் இவ்வாறு போட்டிக் குழுவினரால் பிடிக்கப் 
பட்டு, மக்கள் முன்னிலையிலேயே தண்டிக்கப் 
பட்டார் என்று ஒரு செய்தி கூறுகிறது. 
**
போட்டிக் குழுவினர் சிங்களப் படையினருடன் 
இணக்கமாக இருந்தனர் என்ற உண்மை இந்தத் 
தகவலுக்கு வலு சேர்க்கிறது.
**
இந்த உண்மையைப் புறக்கணித்து விட்டு. இந்திய 
உளவுத்துறை (RAW) அதிகாரிகளின் கற்பனையில் 
பிறந்த கட்டுக் கதைகளை நம்புவோர் நம்பட்டும்.
ஆனால், இருள் கிழித்து வெளிவரும் முழுநிலவைப் 
போல, ஒளி வீசும் உண்மைகள் வெளிவரும்போது    
கட்டுக் கதைகள் கருகிச் சாம்பலாகும் என்பது உறுதி.
***************************************************************** 
          
      

       
        
  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக