வியாழன், 25 ஜூன், 2015

மார்க்சியப் பொருளாதாரம் காலாவதி ஆகிறதா?
குரோனி கேபிடலிசம் கேள்வி எழுப்புகிறது!
குரோனி முதலாளியம் குறித்த நான்காவது கட்டுரை!
---------------------------------------------------------------------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன், தலைவர்,
மார்க்சிய சிந்தனைப் பயிலகம் 
------------------------------------------------------------------------------------------
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் 
(ரெட் ஸ்டார்) என்பது மார்க்சிய-லெனினியக் கட்சிகளில் 
ஒன்று. பிரதானமாக, கேரளத்தில் செயல்படுகிறது இக்கட்சி.
இக்கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான 
தோழர் ஜேம்ஸ், குரோனி முதலாளித்துவம் குறித்து 
ஆங்கிலத்தில் ஒரு நூல் எழுதிஉள்ளார். விலை ரூ 600.
**
அண்மையில் சென்னையில் நடைபெற்ற ஓர் அரங்குக் 
கூட்டத்தில் குரோனி குறித்து தோழர் ஜேம்ஸ் உரை 
நிகழ்த்தினார். இவ்வாறு குரோனி முதலாளியம் என்ற 
கருத்தாக்கம் மார்க்சிய வட்டாரங்களில் பரவலாகப் 
பேசப்பட்டும் விவாதிக்கப் பட்டும் வருகிறது.
**
இச்சூழலில், தமிழ் மார்க்சிய வாசகர்களுக்காக,
குரோனி முதலாளியம் ( crony capitalism ) குறித்து
நான்கு கட்டுரைகளை (இக்கட்டுரையுடன் சேர்த்து)
மார்க்சிய சிந்தனைப் பயிலகம் வெளியிட்டுள்ளது.
**
சாராம்சமாக, குரோனி முதலாளியம் குறித்து, பின்வரும் 
அம்சங்களைக் கூறுகிறோம்.
1) இந்திய உற்பத்தி முறையில் குரோனி முதலாளியம் 
என்பது நிலவவில்லை.
2) குரோனி முதலாளியம் என்ற கோட்பாடு பின்நவீனத்துவம் 
பெற்றெடுத்த குழந்தை.
3) இது ஐரோப்பிய இறக்குமதிச் சரக்கு. இந்திய உற்பத்தி 
முறையை ஆய்ந்து அதன் விளைவாக வந்தடைந்த 
முடிவல்ல. இது இந்தியாவுக்குப் பொருந்தாது.
**
மார்க்சியப் பொருளாதாரம் காலாவதி ஆகி வருகிறது 
என்பதையே குரோனி முதலாளியம் போன்ற புதிய 
கருத்தாக்கங்கள் சுட்டுவதாக எங்களிடம் ஒரு தோழர் 
விவாதத்தின் போது தெரிவித்தார். இக்கருத்தை 
மார்க்சிய சிந்தனைப் பயிலகம் ஏற்கவில்லை.
**
சமூகத்தின் பண்ட உற்பத்தி முறையை ஆராய்ந்து 
சரியான முடிவெடுக்கும் ஆற்றல் உள்ளதாகவே 
மார்க்சியம் இன்னும் இருக்கிறது என்றோம்.
அப்படியாயின், குரோனியை  எந்தக் கிணற்றில் கொண்டு 
போய்த் தள்ளுவீர்கள் என்று அத்தோழர் கேட்ட கேள்விக்கு 
விடையாகவே எங்கள் கட்டுரைகள் அமைந்துள்ளன.
**
சமூகத்தின் பண்ட உற்பத்தி முறையை, மார்க்சியமும் 
முதலாளியமும் வெவ்வேறு அளவுகோல்களைக் கொண்டு 
மாறுபட்ட முறையில் ஆராய்கின்றன. முதலாளியம் 
மார்க்சியத்தைப் போல் கறாரான வரையறைகளைக் 
கொண்டிருக்கவில்லை. எனவே, முதலாளியக் 
கண்ணோட்டத்தில், முதலாளியக் கணிப்பில்,
அவர்கள் சொல்லுகிற குரோனி முதலாளியம் என்ற 
கருத்தை மார்க்சியம் அப்படியே ஏற்க வேண்டும் என்ற 
அவசியம் இல்லை. 
**
குரோனி முதலாளியம் என்ற கோட்பாட்டை முதலாளியச் 
சிந்தனையாளர்கள் ஏற்றுக் கொள்கின்றனர். அவர்கள்தான் 
இக்கண்டுபிடிப்பையே முதலில் நிகழ்த்தியவர்கள். இதனை,
பின்நவீனத்தின் செல்வாக்கிற்கு ஆட்பட்ட மார்க்சியர்களும்
ஏற்றுக் கொண்டும் வழிமொழிந்து கொண்டும் இருக்கிறார்கள்.
மார்க்சியர்களில் ஒரு சாரார் ஏற்றுக் கொள்வதனாலேயே,
குரோனி முதலாளித்துவம் இந்தியாவில் நிலவுவதாக,
நாம் கற்பனையில் மிதக்க வேண்டியதில்லை. அதைத் 
திட்டவட்டமாக நிராகரிக்க வேண்டும். இதுவே எமது 
நிலைப்பாடு.    
** 
தமிழ் மார்க்சியச் சமூகத்தின் பரிசீலனைக்கும், அதன் 
பிறகான ஏற்பு (அல்லது) மறுப்பை எதிர்நோக்கியும் 
நாங்கள் இக்கருத்துக்களை முன்வைக்கிறோம்.
கணித மொழியில் கூறுவதனால், எங்களின் கருத்துக்கள்
ஒரு லெம்மா (lemma) ஆகும். Ours is less than a THEOREM but
more than a CLAIM and hence we call it a LEMMA. We call upon
everyone concerned to EITHER accept this or to DISPROVE this.
We will accept what has been proved and we will discard what 
has been disproved.
****************************************************************
அறிவார்ந்த விவாதங்கள் வரவேற்கப் படுகின்றன.
------------------------------------------------------------------------------------------------  
     
  ,    
   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக