முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒரு கிராமமான ஆனந்தபுரத்தில் ஸ்ரீலங்கா இராணுவத்தின் படையெடுப்பை முறியடித்து போரின் திசையை மாற்றிவிடும் இறுதிப்போருக்கு தயாரான புலிகளின் மூத்த தளபதிகள் எதிர்பாராதவகையில் பின்னணி பாதுகாப்பரண்கள் உடைக்கப்பட்டு இராணுவத்தின் முற்றுகைக்குள் சிக்கிக்கொண்டனர்.
மலைகளே பொடிந்து மண்மேடானது போன்று முப்பதாண்டுகாலப் போர்க்கள அனுபவம் கடைந்தெடுத்த இந்தத்தளபதிகள் களத்தில் இறந்துவீழ்ந்தபோது போரின்போக்கு முற்றுமுழுதாக சிங்கள அரசுக்கு சாதகமாக மாறிவிட்டிருந்தது.
இரண்டாயிரத்து ஒன்பது ஏப்ரல் ஆரம்ப நாட்களில் நிகழ்ந்த இந்தப்பேரழிவு போரின் வெற்றி இனிமேல் தமிழர்களின் பக்கம் இல்லை என்பதைப் புரியவைத்தது.
இதன் பின்னரான ஒன்றரை மாதங்கள் புலிகள் இயலுமான அளவுக்கு தாக்குபிடிக்கும் முயற்சியிலேயே ஈடுபட்டனர்.குறுகிவிட்ட கட்டுப்பாட்டுப் பிரதேசம் மேலும் மேலும் சுருங்கிக்கொண்டே சென்றது.
இந்தச் சூழலில் புலிகளின் தலைமை ஒரு முக்கிய முடிவை எடுக்கின்றது.சாதாரணபோராளிகளும்,புலிகளின் அரசியல் துறையினரும்,மற்றும் பல்வேறு சிவில் கட்டமைப்புகளுடனும் தொடர்புடையவர்களும் வெளிநாடுகளின் உத்தரவாதப்படி சரணடைவதென்றும் புலிகளின் தலைமை உட்பட்ட எஞ்சிய படைத்துறைசார்ந்த தளபதிகள் இறுதிவரை களத்திலேயே நின்று போராடுவதென்றும் இம்முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.
புலிகளின் காவல்துறைக்கு பொறுப்பாளராக இருந்து தமிழ்ச்செல்வன் மறைவின் பின்னர் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட நடேசனின் மகன் பின்னர் இது குறித்து தெரிவித்தபோது தனது தந்தைக்கு சரணடையும் முடிவில் விருப்பமே இருக்கவில்லை என்றும் ஆயினும் சூழலைக் கருத்தில்கொண்டு எஞ்சியவர்களையாவது காப்பாற்றவேண்டும் என்ற காரணத்தால் தலைமையின் முடிவை கடும்துயர் சூழ்ந்த மனதுடன் ஏற்றுக்கொண்டார் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
இவரின் தாயார் ஒரு சிங்களப் பெண்மணியென்பதும் ஸ்ரீலங்கா பொலிஸில் பணிபுரித்த காலத்தில் நடேசனை திருமணம் செய்த அவர் எண்பத்திமூன்று கலவரத்தில் தமிழர்களுக்கு இழைக்கப்பட்டகொடுமைகளை கண்டு மனம்வெறுத்து புலிகளுடன் இணைந்துகொண்ட கணவனுடன் தனது இறப்புவரை பயணித்த பெருமகள் என்பதும் இங்கு நினைவுகூரத்தக்கது.
கனிமொழி மீதான ஆனந்தி அவர்களின் குற்றச்சாட்டை இந்தப் பின்புலத்திலேயே நோக்கவேண்டும்.
புலிகளின் அரசியல் பிரிவினர் சரணடைவதற்கு உத்தரவாதம் வழங்கிய நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும்.இந்தியா இதில் தீவிரமாகவே செயற்பட்டிருக்கும்.புலிகள் கிழக்கின் காடுகளுக்கோ அல்லது வேறுநாடுகளுக்கோ தப்பிசென்றிருந்தால் மீண்டும் ஒரு போர் ஏற்படலாம் என்பதால் அவர்களின் நெருக்கடியான சூழலை அழுத்தமாகக்கொண்டு சரணடைவை செய்வதற்கு இந்தியா முயன்றது.வெளிநாடுகளின் உதவியும் இதில் இருந்தது.
இந்த இடத்தில்தான் கனிமொழி.ஜெகத் கஸ்பார்,சுப.வீரபாண்டியன் போன்ற தமிழ் உணர்வாளர்கள் என்று நம்பப்பட்டவர்களின் பங்களிப்பு வருகின்றது.புலிகளின் சரணடையும் பிரிவினருக்கும்,உத்தரவாதம் வழங்கிய அன்றைய உள்துறை அமைச்சர் சிதம்பரத்தை உள்ளடக்கிய இந்திய மத்திய அரசுக்கும் இடையிலான பங்களிப்பாளர்களாகவே அன்றைய தமிழக அரசும் இவர்களும் செயற்பட்டிருக்கிறார்கள்.
ஆனால் அவர்களுக்கு தாம் வழங்கிய வாக்குறுதிகளை காப்பாற்றமுடியவில்லை.இன்று ஆனந்தி இந்த இடைநிலையாளர்களைக் கேள்வி கேட்கிறார்.
இவர்கள் உண்மையாகப் பதில் கூறமுடியும்.நாம் அன்றைய இந்திய அரசுக்கும் சரணடைந்தவர்களுக்கும் இடையில் செயற்பட்டோம்.ஆனால் இந்திய அரசு எமக்களித்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்று மனச்சாட்சியுடன் ஒத்துக்கொள்ளமுடியும்.
உண்மையான 'மரணவியாபாரிகள்' யார் என்பதை அவர்கள் அம்பலப்படுத்தமுடியும்.
ஆனால் 2ஜி அலைக்கற்றை விவகாரம் தலைக்குமேல் கத்திபோன்று தொங்கிக்கொண்டிருப்பதனாலும் காங்கிரஸுடனான கூட்டின் எதிர்கால அரசியல் நலன்களை கருத்தில் கொண்டும் வழமைபோன்று தமிழர்நலன்களை பலிகொடுத்து தமது நலன்களை இவர்கள் பேணிக்கொள்கிறார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக