செவ்வாய், 16 ஜூன், 2015

போருக்கு முடிவுரை எழுதிய முல்லைத்தீவின் வீழ்ச்சி!
ஓயாத அலைகள் ஓய்ந்தன!
-------------------------------------------------------------------------------------------  
(5) ஈழ விடுதலைப் போரும் புலிகளின் வீழ்ச்சியும்!
ஒளிவீசும் உண்மைகளின் அணிவகுப்பு!!  
---------------------------------------------------------------------------------
வீரை பி இளஞ்சேட்சென்னி 
----------------------------------------------------------------------------------
1996ஆம் ஆண்டு ஜூலை மாதம் சிங்கள ராணுவத் 
தளங்களைத் தாக்கி அழித்து, முல்லைத்தீவைக் 
கைப்பற்றினர் புலிகள். இதுதான் ஓயாத அலைகள் 
(unceasing waves I) எனப்படுகிறது. அதன் பிறகு 2009 வரை,
சற்றேறக்குறைய பதின்மூன்று ஆண்டுகளாகப் 
புலிகளிடமே முல்லைத்தீவு இருந்து வந்தது. இது வரலாறு.
(தங்களின் முல்லைத்தீவு 1996 ராணுவ நடவடிக்கைக்குப் 
புலிகள் சூட்டிய கவித்துவமான பெயர்தான் ஓயாத 
அலைகள் என்பது). 
**
ராணுவ ரீதியாக ஈழப்போர் நான்கு கட்டங்களாகப் 
பகுக்கப் பட்டுள்ளது. 2002இல் முடிந்த மூன்றாம் கட்ட 
ஈழப்போர்  போர்நிறுத்தத்தில் முடிந்தது. 2002 முதல் 
2006 வரையிலான காலம் போர் நிறுத்தக் காலம் ஆகும்.
போர்நிறுத்தம் முடிவடைந்து, நான்காம் கட்ட ஈழப்போர் 
2006 ஜூலையில் தொடங்கி 2009 மே 18இல் புலிகளின் அழிப்பில் முடிவடைகிறது.
**
இக்கட்டுரை ஓயாத அலைகள் ஓய்ந்ததை அறிவிக்கும் 
முல்லைத்தீவு வீழ்ச்சியைப் பற்றிப் பேசுகிறது. 
கிளிநொச்சியைச் சிங்களப் படைகள் கைப்பற்றிய 
அதே நாளன்று, (சனவரி 2, 2009), முல்லைத்தீவுப்  
போரைத் தொடங்கியது சிங்களப் படை.
**
கடல்புலிகளின் பெரும் ராணுவத்தளங்கள் முல்லைத்
தீவில்தான் இருந்தன. இருப்பினும், புலிகளின் கடும் 
எதிர்ப்பை முறியடித்து, சிங்களப் படைகள் சனவரி 25, 2009 
அன்று முல்லைத்தீவைக் கைப்பற்றின. முல்லைத்தீவுப் போர் 
24 நாட்கள் மட்டுமே நீடித்தது.
**
முல்லைத்தீவு வீழ்ந்ததுடன் புலிகள் தங்கள் வசம் 
இருந்த 95 சதம் பிரதேசங்களை இழந்து விட்டனர். 
சில ஊர்களும் கொஞ்சம் காட்டுப் பகுதியும் மட்டுமே 
புலிகளிடம் எஞ்சி இருந்தன.ஆக, ஓயாத அலைகள் 
ஓய்ந்து விட்டன.
**
இதற்கு மேல் போரிட புலிகளிடம் என்ன இருக்கிறது? 
போரைத் தொடர்வதற்கான எந்த விதமான நியாயமும் 
ஒரு எள்முனையேனும்  இல்லை. துப்பாக்கிகளை 
மௌனிக்கச் செய்வதற்கும், போரை நிறுத்துவதற்கும்,
ஆயுதங்களைக் கையளிப்பதற்கும், சமாதானம் 
பேசுவதற்கும் இதுதான் நேரம். இதைத் தவற விடுவது 
முற்றாக அழிவதற்கே இட்டுச் செல்லும்.
**
இறுதிப்போரின் முடிவு எப்படி இருக்கும் என்பதை 
முல்லைத்தீவின் வீழ்ச்சி உள்ளங்கை நெல்லிக்கனி 
ஆகக் காட்டி விட்டது.புலித்தலைமைக்கு மட்டுமின்றி 
பொதுமக்களுக்கும் சர்வதேசப் பார்வையாளர்களுக்கும் 
இறுதி முடிவு எப்படி இருக்கும் என்று தெரிந்து விட்டது.
மே 18இன் காட்சிகள் சனவரி 25 அன்றே தெரிந்து விட்டன.
**
மேலும், முல்லைத்தீவின் முடிவு வேறொரு 
அடிப்படையான மாற்றத்தையும் ஏற்படுத்தி விட்டது.
மக்களுக்காகப் புலிகள் என்பது மாறி, 
புலிகளுக்காக மக்கள் என்றாகி  விட்டது.
மண்ணை மீட்கவும் மக்களைக் காக்கவும் புலிகள் 
என்பது தலைகீழாக மாறிப்போய் புலிகளைக் 
காக்கவே மக்கள் என்ற நிலை  ஏற்பட்டு விட்டது.
இது புலிகளுக்கும் மக்களுக்கும் இடையிலான
பரஸ்பரம் ஒத்திசைவான உறவை சேதப்படுத்தி 
விட்டது.       
 **   
சனவரி-2: கிளிநொச்சி வீழ்ச்சி; 
சனவரி-25: முல்லைத்தீவு வீழ்ச்சி;   
மே 18: அனைத்துமே வீழ்ச்சி. 
சனவரி 25க்கும் மே 18க்கும் இடையில் முழுசாக 
மூன்று மாதங்களுக்கு மேல் இருந்தன. இது பொன்னான 
காலம். இதைப் பயன்படுத்தி சமாதானம் எட்டப்பட்டு 
இருக்க வேண்டும். அதற்கான அக்கறை மிகுந்த,
உருப்படியான முயற்சிகளைப் புலிகள் 
மேற்கொண்டார்களா? அடுத்துக் காண்போம்!
******************************************************************


  
  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக