ஞாயிறு, 28 ஜூன், 2015

இந்திராவைத் தூக்கிலிடக் கோரி ஊர்வலம்!
உ.ரா.வரதராசனிடம் புகார் செய்த டாங்கேயிஸ்டுகள்!!
வெற்றி அடைந்த மார்க்சிஸ்ட்-லெனினிஸ்டுகள்!!!
-------------------------------------------------------------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன் 
--------------------------------------------------------------------------------
நெருக்கடி நிலைக் காலப் பாசிச வெறியாட்டத்துக்காக
இந்திரா காந்தியைத் தூக்கில் போட வேண்டும் என்ற
நியாயமான கருத்தைத் துணிச்சலோடு சொன்னவர்
இக்கட்டுரை ஆசிரியர் மட்டுமே. இந்தியத் துணைக்
கண்டத்தின் வரலாற்றிலேயே எந்த ஒரு இந்திரா
எதிர்ப்பாளராலும் சொல்லப் படாத ஒரு கருத்து இது.
**
என்றாலும், கற்பனையில் மிதந்து கொண்டு  இக்கருத்தைச்
சொல்லவில்லை. இந்திராவைத் தூக்கில் போடு என்ற
முழக்கத்தை 1977-78களில், சென்னை நகரில் நடைபெற்ற
பிரும்மாண்டமான தொழிலாளர் ஊர்வலங்களில்,
இக்கட்டுரை ஆசிரியர் தம் தோழர்களுடன் முன்வைத்ததும் 
அதை மக்கள் ஏற்றதும் தொழிற்சங்க வரலாறு.
**
அஞ்சல்-தந்தி-தொலைபேசி தொழிலாளர்களின்
போர்க்குணமிக்க சங்கமான NFPTE சங்கம் பிற மத்திய
அரசு ஊழியர் சங்கங்களுடன் இணைந்து சென்னை நகரில்
பிரும்மாண்ட ஊர்வலங்களை நடத்தியது. காங்கிரசின் 
பாசிசம் மற்றும் இந்திராவின் நெருக்கடி நிலைக்
கொடுமைகளை எதிர்த்து தொழிலாளி வர்க்கத்தின்
ஆவேசத்தை இந்த ஊர்வலங்கள் பிரதிபலித்தன.
**
இந்த ஊர்வலங்களில் பங்கேற்ற தொழிலாளர்கள்
பிரதானமாக மூன்று கட்சிகளின் ஆதரவாளர்கள்.
CPI ,CPM ,திமுக ஆகிய கட்சிகளே அவை. நீண்ட
ஊர்வலத்தின் ஒரு குறிப்பிட்ட பகுதியில்,
1) இக்கட்டுரை ஆசிரியர், 2) தோழர் சிவகுருநாதன் 
(தற்போது CITU முழுநேர ஊழியர்), 3) தோழர் கே.இ.பாஸ்கரன்
(தற்போது விடுதலைச் சிறுத்தைகள்) ஆகிய மூவரும்,
"அரக்கி இந்திராவைத் தூக்கில் போடு"
  ----------------------------------------------------------
"பாசிச சர்வாதிகாரி இந்திராவைத் தூக்கில் போடு"
  --------------------------------------------------------------------------- 
என்ற முழக்கங்களை விண்ணதிர எழுப்பிக் கொண்டு
வந்தனர். (மனித உரிமை மீறல் என்ற சொல்லாட்சி
எல்லாம் அப்போது புழக்கத்தில் இல்லை)   
**
திரளான பொதுமக்களும் ஊர்வலத்தின் பிற பகுதிகளில்
வந்த எங்கள் தோழர்களும்  எங்கள் முழக்கங்களால்
பெரிதும் ஈர்க்கப் பட்டனர். ஆனால் எங்களின் முழக்கங்கள் 
ஊர்வலத்தில் வந்த CPI தொழிற்சங்கத் தலைமைக்குச் 
சங்கடத்தை ஏற்படுத்தின. தமிழக CPI அப்போது டாங்கேயிஸ்டு
களால் நிரம்பி வழிந்தது. (இப்போது மட்டும் என்ன வாழ்கிறது!)
**
எங்களின் முழக்கங்களை நிறுத்த அவர்கள் முயற்சி 
செய்தனர். ஊர்வலத்தின் கோரிக்கைகளுக்குப் புறம்பாக, 
இந்திராவைத் தூக்கில் போடு 
என்று முழக்கம் எழுப்புவது சரியல்ல என்று எங்களிடம் 
தெரிவித்தனர். நாங்கள் ஏற்கவில்லை. முன்னிலும் வேகமாக 
எங்களின் முழக்கங்கள் தொடர்ந்தன.
**
இதனால் ஆத்திரமடைந்த CPI தொழிற்சங்கத் தலைவர்கள்
அப்போது ஊர்வலத்துக்குத் தலைமை தாங்கி வந்து 
கொண்டிருந்த, CPM தலைவர்களுள் ஒருவரான தோழர் 
உ ரா வரதராசனிடம் எங்களைப் பற்றிப் புகார் செய்தனர்.
தோழர் உ.ரா.வ அப்போது ரிசர்வ் வங்கியில் பணியாற்றிக் 
கொண்டு இருந்தார்.
**
விஷயத்தை விசாரித்துத் தெரிந்து கொண்ட தோழர் 
வரதராசன், "முழக்கம் எழுப்புபவர்கள் ML க்ரூப் (மார்க்சிய 
லெனினிய அணி); அவர்களை நான் கட்டுப் படுத்த 
முடியாது"என்று கைவிரித்து விட்டார். அப்படியானால்,
ML க்ரூப்புடன் சேர்ந்து உங்கள் சிவகுருநாதன் ஏன் கோஷம் 
போடுகிறார் என்று கேள்வி எழுப்பினர் டாங்கேயிஸ்டுகள். 
**
இத்தருணத்தில் சிக்னலுக்காக மொத்த ஊர்வலமும் சிறிது 
நிற்க, எங்கள் முழக்கங்கள் விண்ணைத் தொட்டன. இதனால் 
ஈர்க்கப்பட்ட பிறபகுதித் தோழர்களும் இந்திராவைத் 
தூக்கில் போடு என்று முழக்கம் எழுப்ப ஆரம்பித்தனர்.    
மிகநீண்ட ஊர்வலத்தின் ஒரு பகுதியில் மட்டுமே நாங்கள் 
எழுப்பிய முழக்கம் இச்சூழலில் ஒட்டுமொத்த ஊர்வலத்தின் 
முழக்கம்  ஆகிப்போனது கண்டு வெளிறிப் போயினர் 
டாங்கேயிஸ்டுகள்.
** 
 மாக்சிம் கார்க்கியின் தாய் நாவலை அப்போதுதான் (1977)
நான் படித்திருந்தேன். நாவலின் முதல் பாகத்தின் இறுதி 
அத்தியாயத்தில் ரஷ்யத் தொழிலாளர்களின் ஒரு மாபெரும் 
ஊர்வலத்தை, மாக்சிம் கார்க்கி அதில் வர்ணித்து இருப்பார்.
 **
போதும் போதும் நேற்றை உலகின் 
பொய்மை தன்னைப் போக்கவே 
பாத மண்ணை உதறித் தள்ளிப் 
படையில் சேர வருகுவீர்.
...     ...     ...    ...     ...     ...     ...     ...
முடிவில் ஒருநாள் கொடுங்கோன்மை 
மூட்டோடு அற்றுப் போகுமடா 
அடிமை மக்கள் விழித் தெழுவர்
அந்நாள் அந்நாள் அந்நாளே!
**
நாவலின் கதாநாயகன் பாவெல் விலாசவ் செங்கொடியைத் 
தூக்கிப் பிடித்துக் கொண்டு முன்னே செல்ல ஊர்வலம் 
தொடங்கும். பியோதர் மாசின் மேலே சொன்ன பாடலைப் 
பாடுவான். கூட்டம் பின்தொடரும் என்பதாக கார்க்கி வர்ணித்து 
இருப்பார், காலத்தை வென்று நிற்கும் தாய் நாவலில்.
**          
மக்களிடம் இயல்பாக அரும்புகிற புரட்சிகர உணர்வை 
டாங்கேயிஸ்டுகள் எப்படியெல்லாம் காயடித்தார்கள் 
என்பதற்கு ஒரு சான்றாக அமைந்துள்ளது இந்த ஊர்வல 
நிகழ்வு. 
****************************************************************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக