வியாழன், 18 ஜூன், 2015

அனந்தபுரம் முற்றுகையில் சிக்கிய தேசியத் தலைவர்!
சரண் அடைந்த புலிகள்! தொடங்கியது சரணடைவு! 
-------------------------------------------------------------------------------------------
(7) ஈழ விடுதலைப் போரும் புலிகளின் வீழ்ச்சியும்!
ஒளிவீசும் உண்மைகளின் அணிவகுப்பு!!  
---------------------------------------------------------------------------------
வீரை பி இளஞ்சேட்சென்னி 
----------------------------------------------------------------------------------
புதுக்குடியிருப்பு கோட்டத்தில் உள்ள ஒரு சிற்றூர் 
அனந்தபுரம். தென்னந்தோப்புகளும் பனங்காடுகளும்
நிரம்பிய ஊர். இலங்கையின் வடகிழக்கில் உள்ளது.
இலங்கை ராணுவத்தின் 53 மற்றும் 58ஆவது படைப் 
பிரிவுகள் புலிகளை நெருக்கிப் பிடிக்க முன்னேறின.
**
2009 மார்ச் 30 அன்று எதிர்த்தாக்குதல் தொடுக்கப் 
புலிகள் திரண்டனர். அனந்தபுரத்தில் இருந்து 
புதுக்குடியிருப்பை நோக்கி முன்னேறிய ஆயிரம் பேர் 
கொண்ட புலிகளை சிங்கள ராணுவம் இருபுறமும் 
சுற்றி வளைத்தது. கடும் சண்டை நடந்தது. 
**
தேசியத் தலைவர் அவர்கள் இந்த முற்றுகைக்குள் 
சிக்கி இருந்தார். இருப்பினும் முற்றுகையை 
ஒருபுறத்தில் உடைத்தெறிந்து தேசியத் தலைவர் 
அவர்கள் பாதுகாப்பான இடத்துக்கு நகர்த்தப் பட்டார்.
**
புலிகள் தரப்பில் வர்ணிக்க முடியாத அளவு பெருஞ்சேதம் 
நிகழ்ந்தது. புலிகளின் ஆற்றல் மிக்க வீரத் தளபதிகள் 
பலர் இதில் வீரமரணம் அடைந்தனர். அது மட்டுமின்றி 
கணிசமான அளவு ஆயுதங்கள் வெடிபொருட்களும் 
பறிபோனது.
**
முற்றுகைக்குள் சிக்கிய புலிகள் உணவும் தண்ணீரும் 
மருந்தும் இன்றிப் பரிதவித்தனர். முற்றுகை மூன்று நான்கு  
நாட்கள் நீடித்தது. ஏப்ரல் 5 ஞாயிறு அன்று புலிகள் 
முற்றாக ஒடுக்கப் பட்டனர்.
**
சரண் அடையுமாறு ஒலிபெருக்கி மூலம் சிங்கள ராணுவம் 
அறிவித்துக் கொண்டே வந்தது. பலர் சரணடைய 
மறுத்தனர். சிலர் சரண் அடைந்தனர். மொத்தம் 116 புலிகள் 
மற்றும் குடும்பத்தார் சரண் அடைந்தனர்.
**
மறுநாள் திங்கள் கிழமை அன்று  625 புலிகளின் 
சடலங்களை சிங்களப் படையினர் அப்புறப் படுத்தினர். 
புலிகள் தங்கள் வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு 
ஒரு சிறிய சண்டையில் இவ்வளவு பேரை இழந்தது
இதுவரை நிகழாத ஒன்று.
**
வீரத்தளபதிகள் 1) தீபன் 2) பெண் தளபதி விதுஷா 3) பெண் 
தளபதி துர்கா 4)கீர்த்தி 5)கடாஃபி உள்ளிட்ட உயர்மட்டத் 
தளபதிகள் பலர் மாண்டனர்.
**
இந்த முற்றுகையின்போதுதான் புலிகள் முதன் முதலாகச் 
சரண் அடையத் தொடங்கினர். மேலிட உத்தரவு எதுவும் 
இல்லாத நிலையில், சிங்கள ராணுவத்தின் வான் 
தாக்குதலை எதிர்கொள்ள இயலாமல் 116 புலிகள் 
சரண் அடைந்தனர்.
**
ஈழப்போரின் வரலாற்றிலும் புலிகளின் வரலாற்றிலும் 
அனந்தபுரம் சமர் மிகப்பெரிய திருப்புமுனையை 
ஏற்படுத்திய ஒன்றாகும். அனந்தபுரம் நிகழ்வுக்குப் பின்னர் 
புலிகளின் அமைப்பு, அதன் அஸ்திவாரம், படை ஒழுங்கு, 
கட்டுப்பாடு, கீழ்ப்படியும் தன்மை, தலைமையின் மீதான 
நம்பிக்கை   என எல்லாம் பெருத்த சேதாரத்துக்கு 
உள்ளாயின. சுருங்கக் கூறின், புலிகள் அமைப்பின் 
கட்டுமானம் தகர்ந்து விட்டது என்பதே உண்மை. 
**
மே 17இல் புலிகள் அழிக்கப் பட்டார்கள் என்பது 
உண்மை அல்ல; மாறாக ஏப்ரல் 5 அன்றே அழிக்கப் 
பட்டு விட்டார்கள் என்பதே உண்மை.       
-------------------------------------------------------------------------------------------------
தொடரும் 
****************************************************************

  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக