செவ்வாய், 30 ஜூன், 2015

கட்டுப்பாடற்ற கலவிக்கு ஏங்கும் பின்நவீனத்துவர்கள்!
சமூகம் மாறும்போது அறமும் மாறும்!

---------------------------------------------------------------------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன் 
------------------------------------------------------------------------------------------
தொல்குடிச் சமூகம் வேட்டைச் சமூகமே. குறிஞ்சி நிலப் 
பகுதியில் வாழ்ந்த மக்கள் வேட்டையாடி உண்கின்றனர்.
வேட்டையாடி விலங்குகளைக் கொன்று உணவும் உடையும் 
பெறுகின்றனர். விலங்குகளின் இறைச்சி உணவாகிறது. 
விலங்குகளின் தோல் (மான் தோல், புலித் தோல், 
மயிரடர்ந்த ஆட்டுத்தோல்) உடையாகவும் 
குளிரில் இருந்து காக்கும் கம்பளியாகவும் பயன்படுகிறன.
இந்த மக்கள் சமூகத்தின் வாழ்க்கை தெளிந்த நீரோடையாய்ச் 
சென்று கொண்டிருக்கிறது. 
**
காலப்போக்கில், மனிதர்களின் எண்ணிக்கை கூடிக் கொண்டே
போகிறது. அதற்கேற்ற விதத்தில் அதே வேகத்தில் விலங்குகளின் 
எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகவில்லை. தொல்குடிச் 
சமூகத்தின் தொடக்கத்தில், மனிதர்கள் எண்ணிக்கையில் மிகவும்
சிறுபான்மையாகவும், விலங்குகள் அதீதப் பெரும்பான்மையாகவும் இருந்தனர். மனிதர்கள் 100 பேர் என்றால், விலங்குகள் ஒரு லட்சம் 
என்ற அளவில் இருந்தன. காலப் போக்கில், மனிதர்களின் 
எண்ணிக்கைக்கும் அவர்கள் வேட்டையாடும் விலங்குகளின் 
எண்ணிக்கைக்கும் இடையிலான விகிதம் சேதமுற்றது.
**
போகப் போக,  வேட்டையை மட்டுமே நம்பி,  சமூகம் 
வாழமுடியாத நிலை ஏற்பட்டது. வேறு மாற்று ஏற்பாடுகளை 
சமூகம் தேடியது. இந்தத் தேடலில் அது வேளாண்மையைக்
கண்டறிந்தது. (இங்கு தொடக்கநிலை வேளாண்மை மட்டுமே 
குறிப்பிடப் படுகிறது). வேளாண்மைக்குக் கால்நடைகள் 
பயன்படுவதை  அறிந்த சமூகம், இதுவரை வேட்டையாடிக் 
கொன்ற விலங்குகளைப் பிடித்துக் கொண்டு வந்து, 
பல வேலைகளுக்குப் பழக்கியது (animals were domesticated).
இதன் வளர்ச்சியில், தொல்குடிச் சமூகமானது கால்நடை 
வளர்ப்புச் சமூகமாக மாறியது. மேய்ச்சல் சமூகமாக 
(pastoral society) மாறியது. எயினர்கள் (வேடர்கள்) போயினர்;
ஆயர்கள் வந்தனர்.  
**
மானுட சமூகத்தின் இக்காலக் கட்டத்தில்தான் மதங்கள் 
தோன்றின. மேய்ச்சல் சமூக மக்கள், ஒரு மேய்ப்பனையே 
தங்கள் கடவுளாகக் கண்டனர். இப்படித்தான்  மாடு 
மேய்ப்பவனான(ஆயன்) கிருஷ்ணன் கடவுள் ஆனான்.
யூதர்களும் ஒரு மேய்ப்பனையே (நல்லாயன்) கடவுளாகக் 
கண்டனர்.
"கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கிறார்; நான் தாழ்ச்சி 
அடையேன். அவர் என்னைப் புல்லுள்ள இடங்களில் 
மேய்த்து, அமர்ந்த தண்ணீ ரண்டை இளைப்பாறச் செய்கிறார்".
**
ஒரு மாபெரும் சமூக மாற்றத்தை, மிகவும் எளிமையாக 
மேலே உள்ள பத்திகளில் கூறியுள்ளேன்.சில பத்தாண்டுகளில் 
நிகழ்ந்த மாற்றம் அல்ல இது. பல நூற்றாண்டுகளில் ஏற்பட்ட 
மாற்றம். இப்போது, வேட்டுவச் சமூகமானது மேய்ச்சல் 
சமூகமாக மாறி விட்டது. இது திடீரென்று நிகழ்ந்தது அல்ல. 
படிப்படியாக நிகழ்ந்த ஒன்று. 
**
வேட்டுவச் சமூகத்தின் அறம் வேறு. மேய்ச்சல் சமூகத்தின் 
அறம் வேறு. உயிர்க்கொலை வேட்டுவச் சமூகத்தின் 
அறம் என்றால் கொல்லாமை மேய்ச்சல் சமூகத்தின் 
அறம். ஓர் ஆட்டைக் கொன்று தின்றால், அது ஒரு வேளை 
உணவு. அதைக் கொல்லாமல் வளர்த்தால், அது குட்டிகள் 
ஈன்று இனப்பெருக்கம் செய்தால் பலருக்குப் பலநாள் உணவு.  
**
ஆக சமூகம் மாறுகிறபோது அறமும் மாறுகிறது. இந்த 
மாற்றம் இயல்பானது. தவிர்க்க இயலாதது. புதிய சமூகம் 
புதிய அறத்தை உருவாக்குகிறது. பின்பற்றுகிறது.
இதில் அழுவதற்கு என்ன இருக்கிறது?
**  
வேட்டுவச் சமூகமானது  மேய்ச்சல் சமுதாயமாக 
மாறியது இயற்கையானது. யார் எவராலும் வலிந்து 
திணிக்கப்பட்ட செயற்கையான மாற்றம் அல்ல அது.
வேட்டுவச் சமூகத்தில் கட்டுப்பாடற்ற கலவி நிலவியது.
மேய்ச்சல் சமூகத்தில் அது அப்படியே தொடரவில்லை;
தொடரவும் முடியாது.
**
அய்யோ, அறம் பிழைத்ததே என்று அரற்றுகிறார்கள் 
பின்நவீனத்துவர்கள். தாங்கள் இழந்து விட்ட சொர்க்கத்தை 
நினைத்து நினைத்து அழுகிறார்கள்.
**
பின்நவீனத்துவப் பேராசிரியர் ராஜ் கௌதமன் பின்வருமாறு 
அரற்றுகிறார். மூன்று விடயங்களில் அவர் கூறிய கருத்துகளை 
அவரது வாசகங்களிலேயே காணலாம்.  
(1) ///காட்டு மிராண்டித் தனத்தில் இருந்து " மேம்பட்ட " நாகரிகத்தை நோக்கிய ஒரு பயணத்தில்///  
(2) ///இந்த " தவிர்க்க " முடியாத வரலாற்று வளர்ச்சியில்///
(3) ////இந்த " நாகரிக " வளர்ச்சியில்////
**
பேராசிரியர் ராஜ் கௌதமன் அவர்களே,
1) மேம்பட்ட, 2) தவிர்க்க முடியாத, 3) நாகரிக என்ற சொற்களுக்கு 
எள்ளல் தொனியில் தாங்கள் மேற்கோள் குறியை இட்டுள்ளீர்கள்.
இது நியாயம் அல்ல.
**
(1) வேட்டுவச் சமூகம் மேய்ச்சல் சமூகமாக மாறியது நிச்சயமாக 
மேபட்ட நாகரிகமே. சமூகத்தின் வளர்ச்சி சுழலேணிப் படிகளில் 
மேலே மேலே செல்வதுதான். 
(2) இந்த வரலாற்று வளர்ச்சி செயற்கையானது அல்ல. எனவே இது 
தவிர்க்க முடியாத ஒன்றுதான்.
(3) இது நாகரிகத்தின் வளர்ச்சிதான். இது காட்டுமிராண்டித்தனத்தின் 
வளர்ச்சி அல்ல.
சமூகம் முன்னே முன்னே செல்கிறது.சமூகச் சக்கரத்தைப் 
பின்னோக்கித் திருப்ப இயலாது. தங்களின் பின்நவீனக் 
கருத்துக்கள் பிற்போக்கானவையே.  
---------------------------------------------------------------------------------------------------








கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக