சனி, 12 மார்ச், 2016

தனித்துப் போட்டி என்னும் தற்கொலைப் பாதை!
----------------------------------------------------------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன்
--------------------------------------------------------------------------------
திரைப்படக் காட்சிகளில் மிகை ஒப்பனை வெற்றியைத் தரலாம்.
ஆனால் அரசியலில் தன்  பலம் குறித்த மிகை மதிப்பீடு ஒரு
கட்சியைக் குப்புறத் தள்ளிவிடும் தன்மை வாய்ந்தது. தனித்துப்
போட்டி என்ற நடிகர் விஜயகாந்த்தின் முடிவு அத்தகையதே.

ஐந்து சதம் வாக்கு வங்கியை வைத்துக் கொண்டு முதல்வர்
கனவில் மிதப்பது விஜயகாந்த்தின் உரிமை. ஆனால் ஒருநாளும்
நனவாக முடியாத இக்கனவால் அவருக்கு என்ன லாபம்?
மஞ்சள் கிழங்கைக் கண்டெடுத்த சிட்டுக்குருவி மளிகைக்கடை
வைக்க நினைத்ததாம் என்பது போல் இருக்கிறது ஸ்டன்ட் நடிகர் விஜயகாந்த்தின் நிலை.

ஒரு சினிமா நடிகர் கட்சி தொடங்கி ஆட்சியைப் பிடிப்பது 
என்பதெல்லாம் எம்ஜியார் என்டிஆர் காலத்தோடு முடிந்து 
போய் விட்டவை. அதற்கான சூழல் இன்று இந்தியாவில் 
எங்கும் இல்லை. ஆந்திர நடிகர் சிரஞ்சீவி கட்சி தொடங்கினார்.
கட்சியைத் தொடர்ந்து நடத்த முடியாமல் தவித்த அவர் 
இறுதியில் காங்கிரசுடன் தம் கட்சியை இணைத்து விட்டார்.

எம்ஜியார்-என்டிஆர் காலத்தில் மொத்த சமூகமும் கல்வியறிவு 
பெறாமலும் அரசியல் விழிப்புணர்வு பெறாமலும் இருந்தமையால் 
மக்களிடம் மண்டிக்கிடந்த சினிமா மோகத்தை மூலதனமாகக் 
கொண்டு அவர்களால் கட்சி தொடங்கி ஆட்சியைப் பிடிக்க 
முடிந்தது. நம்பியாரால் எம்ஜியாருக்கு ஆபத்து என்ற பய உணர்வு 
கிராமப்புறப் பெண்களுக்கு இருந்த மௌடீகம் நிரம்பிய காலம் 
அந்தக் காலம். இது எம்ஜியாருக்கு மிகவும் சாதகமாக இருந்தது.

இன்றைக்கு இந்த 2015இல் ஆண்டுதோறும் பதினோரு லட்சம் பேர் 
பத்தாம் வகுப்புத் தேர்வும் எட்டு லட்சம் பேர் ப்ளஸ் டூ தேர்வும் 
எழுதுகின்றனர். ஆண்டுதோறும் ஒன்றரை லட்சம் பேர் பொறியியல் 
படிப்பில் சேருகின்றனர். அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி, 
தொலைக்காட்சி உள்ளிட்ட தகவல் தொடர்பு  சாதனங்களின் வளர்ச்சி 
ஆகியவற்றால் பாமர மக்கள்கூட  அரசியல் விழிப்புணர்வு 
பெற்றுத் திகழ்கிறனர்.  இந்த நவீன காலத்தில் ரசிகர் மன்றங்கள் 
வைத்திருக்கிற காரணத்தாலும் சினிமாவில் கதாநாயகனாக 
நடித்த காரணத்தாலும் தமிழ்நாட்டு மக்கள் முதல்வர் பதவியில் 
தன்னை அமர வைத்து விடுவார்கள் என்று நடிகர் விஜயகாந்த் 
நம்புவாரேயானால், இந்த உலகிலேயே மிகவும் பரிதாபத்துக்கு 
உரிய நபராக அவர்தான் இருப்பார்.     

2011 சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டு வைத்து 29
இடங்களைப் பெற்று சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரான
விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவராக என்ன சாதித்தார் என்று 
பார்த்தால் பூஜ்யம்தான் மிஞ்சுகிறது. தமிழக சட்டமன்ற 
வரலாற்றிலேயே உதவாக்கரையாகிப் போன ஒரே எதிர்க்கட்சித் 
தலைவர் விஜயகாந்த் ஒருவர்தான் என்பது வரலாறாகி விட்டது.

ஆளுங்கட்சியாக இருக்கிற எந்த ஒரு பெரிய கட்சியும், அது 
அதிமுகவாக இருந்தாலும் சரி அல்லது பாஜகவாக இருந்தாலும் சரி,
அவர்கள் நினைத்தால் விஜயகாந்த்தின் கட்சியை உடைத்து 
விட முடியும் என்பது நிரூபிக்கப்பட்டு இருக்கிறது. இவரின் 
கட்சியில் இருந்து பாண்டியராஜன், அருண் பாண்டியன் உட்பட 
எட்டு எம்.எல்.ஏக்களை ஜெயலலிதா உடைத்து வெளியேற்றிய 
பொது, அதை எதிர்த்து துரும்பைக் கூடத் தூக்கச் சக்தி 
இல்லாமல் மூலையில் முடங்கிக் கிடந்தவர் விஜயகாந்த் 
என்பது நாடறிந்த செய்தி.

ஆக விஜயகாந்த்தால் எதிர்க்கட்சித் தலைவராகவும் பணியாற்ற இயலவில்லை. சட்டமன்ற உறுப்பினர்களைக் கட்சியில் தக்க 
வைக்ககூடிய வலிமையான கட்சித் தலைவராகவும் இருக்க 
இயலவில்லை. இவ்வாறு   தலைமைப் பண்பற்ற ஒரு
பலவீனமான ஆளுமைதான் விஜயகாந்த் என்பது தமிழ் 
மக்கள் மத்தியில் நன்கு அம்பலப்பட்டுப் போய் விட்ட ஒன்று.

இத்தியாதி காரணங்களால் கட்சி ஆரம்பிக்கும்போது விஜயகாந்த் 
மீது மக்களுக்கு இருந்த மயக்கமும் அதனால் ஏற்பட்ட வாக்கு 
வங்கியும் இன்று பெருமளவு சரிந்து வெறும் ஐந்து சதம் என்ற 
அளவில் சுருங்கிப்போய் நிற்கிறது.

இந்தச் சூழலில் தனித்துப் போட்டி என்ற விஜயகாந்த்தின் முடிவு 
தற்கொலைப் பாதை தவிர வேறில்லை என்று அரசியல் 
நோக்கர்கள் கருதுகிறார்கள். வெறும் ஐந்து சதம் வாக்கு வங்கியை 
நம்பிக்கொண்டு 234 தொகுதிகளிலும் போட்டியிட்டால் கிடைக்கப் 
போவது என்ன என்பதைத் தெரிந்து கொள்ள அரசியல் நிபுணராக 
இருக்க வேண்டிய தேவையில்லை.

தேமுதிக என்ற கட்சியில் விஜயகாந்த், அவரின் மனைவி, அவரின் 
மச்சான் சுத்தீஷ் ஆகிய மூவரைத் தவிர மக்கள் செல்வாக்குள்ள 
ஏதேனும் ஒரு தலைவர் உண்டா? இது வெறும் கிச்சன் காபிநெட்டே
தவிர இது நாடாளும் வல்லமை வாய்ந்த கட்சி ஆகுமா? உயர 
உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகுமா?

நான் கிங் ஆக இருப்பேன் என்று இவர் நினைத்தால் போதுமா?
மக்கள் நினைக்க வேண்டாமா? நினைப்புதான் பிழைப்பைக் 
கெடுக்குமாம் என்று ஒரு பழமொழி உண்டு. விஜயகாந்த் இந்தப் 
பழமொழியை உண்மை என்று நிரூபிக்கப் போகிறார். 2016 தேர்தலில் 
இதுதான் நடக்கப் போகிறது.
--------------------------------------------------------------------------------------------------------      





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக